நாற்காலியில் அமர்ந்துக்கொண்டு எது வேண்டுமானாலும் பேசலாமா? அமைச்சரை வறுத்தெடுத்த கிரிக்கெட் வீரர்

'இலங்கைக் கிரிக்கெட் வீரர்களின் உடல் தகுதிகுறித்து சந்தேகம் உள்ளது' என்று அந்த நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் கருத்து கூறியுள்ளார். இதை மறுத்த இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா, 'இருக்கையில் அமர்ந்துகொண்டு இதைப் போன்று ஒரு விஷயத்தைப் பற்றி கருத்து கூறக்கூடாது' என்று பதிலடிகொடுத்துள்ளார். 

Lasith Malinga

சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையில் இலங்கை அணி, லீக் சுற்றிலேயே தோல்வியடைந்து ஏமாற்றமளிக்கும் விதத்தில் வெளியேறியது. குறிப்பாக, தனது கடைசி லீக் போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் வீரர்கள் கொடுத்த மூன்று கேட்ச்களை நழுவவிட்டதுதான் இலங்கையின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. இந்தப் போட்டி, இலங்கை ரசிகர்களை எரிச்சலடைய வைத்தது. இதையடுத்துதான் இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் தயஸ்ரி ஜெயசேகரா, இலங்கைக் கிரிக்கெட் வீரர்களின் உடல் தகுதி சந்தேகப்படும்படி உள்ளது எனவும், அவர்களுக்கு ராணுவத்தினருக்குக் கொடுக்கப்படும் பயிற்சிகள் கொடுக்கப்பட வேண்டும் எனவும் கூறியதாகச் செய்திகள் வெளியாகின.

அதற்கு, இலங்கை அணியின் பௌலர் மலிங்கா, 'உலகின் சிறந்த ஃபீல்டர்கள்கூட கேட்ச்களை ட்ராப் செய்யலாம். அதற்காக, அவர்களுக்கு உடல் தகுதி இல்லை என்று கூறுவது அர்த்தமற்றது. நாற்காலியில் அமர்ந்துகொண்டு யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் கூறலாம். ஆனால், களத்தில் இருப்பவர்கள் அந்த நேரத்துக்குத் தகுந்ததுபோல உடனடியாக முடிவுகளை எடுக்க வேண்டும். அதனால், சில நேரத்தில் நினைத்ததுக்கு மாறாக சில விஷயங்கள் நடக்கலாம். எனவே, இருக்கையில் அமர்ந்துகொண்டு குறை கூறுவோருக்கு பதிலளிக்க எனக்கு நேரமில்லை. 

இன்னும் சொல்லப்போனால், இலங்கை அணிக்கு விளையாடும் கிரிக்கெட் வீரர்களைத் தேர்வுக் குழு தேர்ந்தெடுத்த பின், அதை விளையாட்டுத்துறை அமைச்சர் மேற்பார்வையிட்டு ஒப்புதல் அளித்த பின்னர்தான் நாங்கள் களத்துக்கே வருகின்றோம். அமைச்சர், அவர் ஒப்புதல்கொடுத்த அணி மீதே எப்படி இப்படி கேள்வி கேட்கலாம். அவரது கருத்தே முரணாக உள்ளது' என்று அமைச்சரை வறுத்தெடுத்துவிட்டார்.

மலிங்கா, இப்படி வெளிப்படையாக கருத்துக் கூறியுள்ளதால், தோல்வியில் துவண்டுவரும் இலங்கை அணிக்குள் மேலும் குழப்பம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!