வெளியிடப்பட்ட நேரம்: 16:35 (22/06/2017)

கடைசி தொடர்பு:16:35 (22/06/2017)

ஆஸ்திரேலியன் ஓப்பன் சூப்பர் சீரிஸ் பேட்மின்டன்: வெற்றி மேல் வெற்றி குவிக்கும் இந்தியர்கள்!

ஆஸ்திரேலியன் ஓப்பன் சூப்பர் சீரிஸ் பேட்மின்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒன்றையர் பிரிவு, இரண்டாவது சுற்றில் இந்தியாவின் பி.வி சிந்துவும், சீனாவின் சியாவ் ஜின்னும் மோதினர். இதில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து 21-13, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் காலிறுதிச் சுற்றுக்குள் சிந்து நுழைந்துள்ளார்.

PV Sindhu


அதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவு, இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ஶ்ரீகாந்த் மற்றும் தென் கொரியாவின் சன் வான் ஹோ மோதினர்.  தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் சன் ஏற்கெனவே, இந்தோனேசிய ஓப்பனில் ஶ்ரீகாந்திடம் தோல்வியடைந்திருந்தார். இதனால், இன்றையப் போட்டியில் முதல் சுற்றை சன் எளிதில் கைப்பற்றினார். ஆனால், ஶ்ரீகாந்த் விட்டுக் கொடுக்கவில்லை. அடுத்தடுத்து இரண்டு சுற்றுகளை கைப்பற்றினார் ஶ்ரீகாந்த். இதனால் 15-21, 18-21, 21-13 என்ற செட் கணக்குகளில் ஶ்ரீகாந்த் வெற்றி பெற்றார். இந்த வெற்றிமூலம், உலகின் முதல் நிலை வீரரான சன்னை, தொடர்ந்து இரண்டு முறை வீழ்த்தி அசத்தியுள்ளார் ஶ்ரீகாந்த்.

அதேபோல நடந்த மற்றொருப் போட்டியில் இந்தியாவின் சாய் பிரணீத், சீனாவின் ஹுவாங்கை 21-15, 18-21, 21-13 என்ற செட் கணக்குகளில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த வெற்றிகள் மூலம் சாய் பிரணீத் மற்றும் ஶ்ரீகாந்த் ஆகியோரும் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.