வெளியிடப்பட்ட நேரம்: 13:32 (23/06/2017)

கடைசி தொடர்பு:13:32 (23/06/2017)

ஆஃப் ஃபீல்ட் சர்ச்சை ஓய்ந்தது... ஆன் ஃபீல்டில் என்ன செய்யப் போகிறார் கோலி? #INDVSWI #Preview

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி சோகம், கும்ப்ளே பதவி விலகல், விராட் கோலியின் மீதான அழுத்தம், யுவராஜ்- தோனி இணை குறித்து முக்கிய முடிவு எடுக்க வேண்டிய தருணம், அஷ்வின் - ஜடேஜா மீதான எதிர்ப்பார்ப்பு என பல்வேறு விஷயங்களால் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துக்கு சென்றுள்ள இந்திய வீரர்கள் மீது கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் குவிந்திருக்கிறது. 

விராட் கோலி

ஆப்கானிஸ்தான்  உடனான போட்டியில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கவே இயலாது போன துயரம் போன்றவற்றால் வெஸ்ட் இண்டீஸும் இந்தத் தொடரை மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. ஒருநாள் தரவரிசையில் மிகவும் பின்தங்கியுள்ள வெஸ்ட் இண்டீஸ் இப்போதைய நிலைமையில் 2019 உலககோப்பையில் பங்கேற்பதே சிரமம் என்ற நிலையில் தான் இருக்கிறது. எனவே இனி ஆடப்போகும் ஒவ்வொரு ஒருநாள் போட்டியும் அந்த அணிக்கு மிகவும் முக்கியம். 

இந்தியாவின் வெற்றி வாய்ப்பு எப்படி ?

வெஸ்ட் இண்டீஸ் மண்ணில்  கடந்த ஆண்டில் தான் டெஸ்ட் போட்டியில் விளையாடியது இந்திய அணி. கோலிக்கு அந்த அனுபவம் இப்போது கைகொடுக்கும். சாம்பியன்ஸ் டிராபி தோல்வியால் அணியை உறுதியாக கட்டமைக்க வேண்டிய பொறுப்பு கோலிக்கு இருக்கிறது. ஆகவே இந்த தொடரில் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடிய பிளெயிங் லெவனில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

இப்போதைய வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு சாதகமானவை அல்ல. எல்லா மைதானங்களுமே ஸ்லோ பிட்ச்சாகவே இருக்கின்றன. இதனால் பேட்ஸ்மேன்கள் பந்துகளை கனெக்ட் செய்து, அவர்கள் விரும்பிய ஷாட்டை பக்காவாக விளாசுவது கடினம். இந்த மைதானங்களில் சுமார் 250 - 275 ரன்கள் அடித்தாலே நல்ல ஸ்கோராக இருக்கும். 

ஷிகர் தவான்  நல்ல ஃபார்மில் இருக்கிறார். அவருடன் ஆட்டத்தைத் தொடங்க ரஹானே அழைக்கப்படுவார் எனத் தெரிகிறது. ரஹானே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் பொறுப்பாக பேட்டிங் செய்யக்கூடியவர். 2014 நவம்பருக்கு பிறகு இன்னமும் ஒருநாள் ஃபார்மெட்டில்  ஒரு சதம் கூட எடுக்கவில்லை. டெஸ்ட் போட்டிகளில் நல்ல வீரராக இருந்தாலும் ஒருநாள் போட்டிகள் என வந்துவிட்டால் மிடில் ஆர்டரில் சொதப்பித் தள்ளுகிறார் ரஹானே. ஒருநாள் போட்டிகளில் இவரது சராசரி, ஸ்ட்ரைக்ரேட் எல்லாமே கவலைக்கிடமாக  இருக்கின்றன. ஒருநாள் போட்டியைப் பொறுத்தவரை 20 - 40 ஓவர்களில் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்வது அவசியம். இதில் ரஹானே கொஞ்சம் மந்தமாக செயல்படுகிறார் என்பதை முன்னாள் கேப்டன் தோனியே பலமுறை சூசகமாக சொல்லியிருக்கிறார். கோலிக்கு அடுத்தபடியாக கேப்டன் பதவிக்கு பரிசீலிக்கப்பட்ட ரஹானேவுக்கு இப்போது பிளெயிங் லெவனுக்குள் வருவதே பெரும் சவாலாகி விட்டது. ரஹானேவுக்கு இது முக்கியமான வாய்ப்பு.  இம்முறை மீண்டும் சொதப்பினால் அவர் புஜாராவை போல டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன் என ஒதுக்கிவைக்கப்படும் நிலைமை வரக்கூடும். 

விராட் கோலி

கோலி மந்தமான ஆடுகளங்களில் ஓரளவு நன்றாக பேட்டிங் செய்யக்கூடியவர். இப்போது ஒருநாள் தரவரிசையில் நம்பர்1 இடத்தில் இருக்கிறார். அதைத் தக்கவைத்துக்  கொள்வார் என்றே நம்பலாம். யுவராஜ் சிங் ஸ்லோ பிட்ச்களில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக எப்பவுமே யுவராஜ்  சிறப்பாக விளையாடக்கூடியவர். வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அந்த அணிக்கு எதிராக இவர் விளையாடிய ஒன்பது இன்னிங்ஸ்களில் ஒரு சதம், இரண்டு அரைசதம் அடித்திருக்கிறார். சராசரி- 40.22.  தோனியும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் கெளரவமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். யுவராஜ் மற்றும் தோனிக்கு இதுவே கடைசி வெஸ்ட் இண்டீஸ் தொடராக இருக்கக்கூடும். யுவி, தோனி இருவரும் இறுதிப்போட்டியில் சொதப்பியதால் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இவர்களை அடுத்த உலக கோப்பைக்கு வைத்துக் கொள்வதா வேண்டாமா என முடிவு எடுக்கச்சொல்லி பிசிசிஐக்கு அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே இது இந்த இரண்டு மிகச்சிறந்த மேட்ச் வின்னர்களுக்கும் முக்கியமான தொடர். மிகவும் சொதப்பினால் இதுவே சர்வதேச கிரிக்கெட்டில் இருவருக்கும் கடைசி தொடராகவும் அமைந்து விட வாய்ப்பிருக்கிறது. 

கேதர் ஜாதவ் ஸ்லோ பிட்ச் ஆடுகளங்களில் நன்றாக பந்துவீசக்கூடியவர், எனவே இவருக்கு ஆல்ரவுண்டர் பணி காத்திருக்கிறது. அதை அவர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அஷ்வின் - ஜடேஜா  இருவரில் யாராவது ஒரு பவுலருக்கு மட்டும் அணியில் வாய்ப்புத் தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜடேஜா ஆல்ரவுண்டராக ஜொலிக்காத பட்சத்தில் அஷ்வினுக்கு மட்டும் வாய்ப்புகள் கிடைக்கலாம். குல்தீப் யாதவுக்கும் ஓரிரு போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கும் என நம்பலாம்.

தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பன்ட் மீது கவனங்கள் குவிந்திருக்கின்றன. இருவருமே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள். இந்த இருவரில் யாராவது ஒருவருக்காவது வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக ரிஷப் பன்ட், கேதர் ஜாதவின் இடத்தில் ஓரிரண்டு போட்டிகளிலாவது விளையாடக்கூடும். ரிஷப் பன்ட் மாதிரியான வீரர்கள் இந்தியாவுக்கு அவசியம் தேவை. இடது கை வீரர், தொடக்க வீரர், அதிரடி வீரர், விக்கெட் கீப்பர் என பல பிரிவுகளிலும் டிக் அடிக்கிறார். இவரை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும், தொடக்க வீரராகவும் இந்திய அணி பயன்படுத்தினால் கூடுதலாக ஓர் நல்ல ஆல்ரவுண்டரை பிளெயிங் லெவனில் சேர்த்துக்கொள்ளலாம். கோலி பன்ட்டை எப்படி பயன்டுத்தப்போகிறார்... பன்ட் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தினேஷ் கார்த்திக் நல்ல ஃபீல்டர் மற்றும் நல்ல பேட்ஸ்மேன். யுவராஜ் தொடர்ந்து சொதப்பினால் அவரது இடத்தில் விளையாட தினேஷுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். 

ஹர்திக் பாண்டியா சமீபத்திய சென்சேஷன். வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்கள் பாண்டியாவின் பவுலிங்கிற்கு ஏற்றவாறு இருக்காது. ஆகவே பாண்டியா தனது யுக்திகளில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்தத் தொடரில் யுவராஜுக்கு அடுத்தபடியாக பாண்டியா பேட்டிங்கில் களமிறனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.  புவனேஷ்வர் குமார் வெஸ்ட் இண்டீஸ் பிட்ச்களில் நன்றாக பந்து வீசக்கூடியவர் எனவே இவருக்கு அனைத்து போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்கும். ஷமி, உமேஷ், பும்ரா என மீதி மூன்று பேருக்கும் சுழற்சி முறையில் கோலி வாய்ப்புத்தருவார் என எதிர்பார்க்கலாம். 

வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர்

வெஸ்ட் இண்டீஸ் அணி எப்படியிருக்கிறது? 

வெஸ்ட் இண்டீஸ்  அணி  இந்தியாவுடன் ஒப்பிடும்போது பல மடங்கு வலு குறைந்ததாகவே இருக்கிறது. எனினும் அவர்களுக்கு சொந்த மண் என்பது சாதகமாக இருக்கும். சமீப காலங்களில் பல வீரர்கள் சிறப்பாக விளையாட ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் ஒரு அணியாக இணைந்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. கேப்டன் ஜேசன் ஹோல்டர்  நல்ல அணியை கட்டமைக்கும் முயற்சியில் இருக்கிறார். லெவிஸ், ராஸ்டன் சேஸ், ஷாய் ஹோப் ஆகியோர் நல்லஃ பார்மில் இருக்கிறார்கள். ஷாய் ஹாப் நிச்சயம் இந்திய அணிக்கு சிம்மசொப்பனமாக விளங்குவார் என நம்பலாம். வெஸ்ட் இண்டீசுக்கு துருப்புச்சீட்டாக ராவ்மென் பவல் இருப்பார். நர்ஸ், ஜேசன் முகமது, அல்ஜாரி ஜோசப் இந்தியாவுக்கு எதிராக எப்படி விளையாடப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். இந்த முறை சீனியர்கள் இல்லை என்பதால் கேப்டன் ஜேசன் புதிய பாணியில் அணியைக் கையாளக் கூடும். புதுப்படை இந்தியாவை ஒரு போட்டியிலாவது தோற்கடிக்குமா அல்லது தொடரை வென்று புது சரித்திரம் படைக்குமா என்பது இன்னும் மூன்று வாரங்களில் தெரிந்துவிடும். 

மைதானங்கள் ஒரு சிறிய பார்வை :-

போர்ட் ஆப் ஸ்பெயின், ஜமைக்கா, ஆண்டிகுவா ஆகிய மூன்று இடங்களில்  தான் போட்டிகள் நடக்கின்றன. போர்ட் ஆப் ஸ்பெயினில் தான் இந்தியா பெர்முடாவுக்கு எதிராக 413 ரன்கள் குவித்தது என்பது நினைவில் இருக்கட்டும்.

போர்ட் ஆஃப் ஸ்பெயின் : -

முதலில் பேட்டிங் பிடித்தால் சராசரி ஸ்கோர் - 215

இரண்டாவதாக பேட்டிங் செய்தால் சராசரி ஸ்கோர் - 175 

முதலில் பேட்டிங் பிடித்த போது கிடைத்த  வெற்றிகள் - 28

சேஸிங் எடுத்தவர்களுக்கு கிடைத்த வெற்றிகள் - 33

முதலில் பேட்டிங் செய்த அணி குவித்த அதிகபட்ச ஸ்கோர் - 413

அதிகபட்சமாக சேசிங் செய்யப்பட்ட ஸ்கோர் - 272

ஜமைக்கா : -

முதலில் பேட்டிங் பிடித்தால் சராசரி ஸ்கோர் - 234

இரண்டாவதாக பேட்டிங் செய்தால் சராசரி ஸ்கோர் - 200 

முதலில் பேட்டிங் பிடித்த போது கிடைத்த  வெற்றிகள் - 14

சேஸிங் எடுத்தவர்களுக்கு கிடைத்த வெற்றிகள் - 21

முதலில் பேட்டிங் செய்த அணி குவித்த அதிகபட்ச ஸ்கோர் - 349

அதிகபட்சமாக சேசிங் செய்யப்பட்ட ஸ்கோர் - 255

ஆண்டிகுவா : - 

முதலில் பேட்டிங் பிடித்தால் சராசரி ஸ்கோர் - 237

இரண்டாவதாக பேட்டிங் செய்தால் சராசரி ஸ்கோர் -  213

முதலில் பேட்டிங் பிடித்த போது கிடைத்த  வெற்றிகள் - 8

சேஸிங் எடுத்தவர்களுக்கு கிடைத்த வெற்றிகள் - 7

முதலில் பேட்டிங் செய்த அணி குவித்த அதிகபட்ச ஸ்கோர் - 322

அதிகபட்சமாக சேசிங் செய்யப்பட்ட ஸ்கோர் - 248


டிரெண்டிங் @ விகடன்