வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (23/06/2017)

கடைசி தொடர்பு:17:25 (23/06/2017)

இரண்டே பேட்ஸ்மேன், விக்கெட் விழுந்தால் மைனஸ் ரன்..! சென்னை ஸ்பெஷல் கிரிக்கெட் #GautamDoubleWicketTorunament

ஓர் அணிக்கு இரண்டே பேட்ஸ்மேன்கள்தான். அவுட்டானால் மைனஸ் ஐந்து ரன்கள். இந்த கிரிக்கெட்டைக் காண விரும்புகிறீர்களா என்றொரு வாட்ஸ்அப் தகவல் வந்தது. இதென்ன புது ரூல்ஸாக இருக்கிறது என டோர்னமெண்ட் நடத்திக் கொண்டிருந்தவர்களை தேடிப்பிடித்தேன். சென்னையில்தான் இந்த டோர்ன்மெண்ட் நடந்து கொண்டிருந்தது. சென்னையில் உள்ள வித்யா மந்திர் பள்ளியின் அலும்னி அசோசியேஷன் இந்தத் தொடரை நடத்துகிறது. அசோசியேஷனைச் சேர்ந்த ஷியாம்சுந்தர் என்பவர் நம்மிடம் பேசினார். 

எங்கள் பள்ளியில் படித்து முடித்து தமிழகத்துக்காக ரஞ்சி வரை விளையாடிய வீரர் கவுதம். நானும் அவரது வகுப்புத்தோழன்தான். 1980-களின் தொடக்கத்தில் கிரிக்கெட்டில் கலக்க ஆரம்பித்தார். அப்போதெல்லாம் பேட்ஸ்மேன்களும், சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமே தமிழகத்தில் இருந்து அதிகளவில் வருவார்கள். கவுதம் தன்னை ஆல்ரவுண்டராக தகவமைத்துக் கொண்டார். ஃபர்ஸ்ட் டிவிஷன் அளவில் கலக்கியவர் பிற்காலத்தில் தமிழக ரஞ்சி அணிக்காவும் விளையாடினார். சில சீசன்களில் கோவா அணிக்காக கூட விளையாடியுள்ளார். அவருக்கு தன்னம்பிக்கை அதிகம். ஆதலால் டேனி மோரிசன் போன்ற அதிவேகப்பந்து வீச்சாளர்களை சந்தித்த போது கூட ஹெல்மெட் இல்லாமல் சமாளித்திருக்கிறார். ஆல்ரவுண்டரராக திகழ்ந்த எங்களின் அன்பு நண்பன் வாழ்க்கையை புற்றுநோய் புரட்டிப்போட்டது. 2003 ஆம் ஆண்டு புற்றுநோயால் பூத உடலை விட்டு விண்ணுலகம் சென்றார்.

கிரிக்கெட் வீரர் கவுதம்

அவரது மறைவை எங்களால் அவ்வளவு எளிதில் கடந்துபோய் விடமுடியவில்லை. கிரிக்கெட் ஆடும் போது பல்வேறு வலிகளையும் பொறுத்துக் கொண்டு யாரிடமும் சொல்லாமல் விளையாடியிருக்கிறார். அவருக்கு புற்றுநோய் இருந்ததை பலரிடமும் மறைத்திருக்கிறார். அவர் இறந்ததும், அவரது பெயர் எதிர்காலத்தில் என்றென்றும் நிலைக்க வேண்டும் என விரும்பினோம். 2004 ஆம் ஆண்டில் கவுதம் மெமோரியல் டபுள் விக்கெட் டோர்னமெண்ட் என்றொரு தொடரை முன்னாள் மாணவர்கள் இணைந்து ஆரம்பித்தோம். இந்த தொடரின் நோக்கம் வலுவான ஆல்ரவுண்டர்களை அடையாளம் காணுவதுதான். பல ஆண்டுகளாக பள்ளிகளுக்கு இடையே மட்டுமே இந்தத் தொடரை நடத்திவந்தோம். இது கவுதமுக்கு ஐம்பதாவது பிறந்தாள். அதைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு கிரிக்கெட் அசோஷியனை அணுகினோம். அவர்கள் ஒத்துழைப்புடன் இந்தமுறை பர்ஸ்ட் டிவிஷன் பிளேயர்களுக்கும் இந்தத் தொடரை நடத்துகிறோம் என்றார்.

சரி, இந்த கிரிக்கெட்டில் ரூல்ஸ் என்ன? 

லீக் சுற்றைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு அணிகளும் இரண்டு போட்டிகள் விளையாட வேண்டும். ஒரு அணிக்கு அதிகபட்சம் நான்கு பேர் இருக்கலாம். ஆனால் அதில் இரண்டு பேருக்கு மட்டும்தான் பேட்டிங் செய்யவும், பவுலிங் செய்யவும் அனுமதி. மீதி இரண்டு பேர் ஃபீல்டிங் செய்யலாம். கூடுதலாக விக்கெட் கீப்பர் மற்றும் ஆறு ஃபீல்டர்கள் இரண்டு அணியைச் சேராத பொதுவான வீரர்கள் நியமிக்கப்படுவார்கள். 

கவுதம் நினைவு கோப்பை கிரிக்கெட்தொடர்

லீக் சுற்றில் நான்கு ஓவர்கள் கொண்ட போட்டி நடக்கும். 24 பந்துகளில் ஒரு அணி எவ்வளவு ரன்களை குவிக்கிறதோ, எதிரணி அதை சேஸ் செய்ய வேண்டும். இரண்டே பேட்ஸ்மேன்கள் என்றாலும் 24 பந்துகளும் விளையாட வேண்டும். எத்தனை முறை அவுட் ஆகிறார்களோ அப்போதெல்லாம் மொத்த ரன்களில் ஐந்து ரன்கள் கழித்துக் கொள்ளப்படும். உதாரணமாக முதலில் பேட்டிங் பிடிக்கும் அணியைச் சேர்ந்தவர்கள் 20 பந்துகளில் 40 ரன்கள் எடுத்திருக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். நான்கு முறை அவுட் ஆகியிருக்கிறார்கள் எனில் மொத்த ரன்களில் 20 ரன்கள் கழித்துக் கொள்ளப்பட்டு அணியின் ஸ்கோர் 20 என எடுத்துக் கொள்ளப்படும். சேஸிங் செய்யும் அணி முதல் 2 ஓவர்களில் 35 ரன்கள் குவித்திருக்கிறார்கள், ஆனால், மீதி இரண்டு ஓவர்களில் ஐந்து முறை ஆட்டமிழந்து 7 ரன்கள் மட்டும் குவிக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். இப்போது அந்த அணியின் ஸ்கோர் (35 -25) + 7 = 17 ரன்கள். சேஸிங் செய்த அணி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது என அறிவிக்கப்படும். 

கவுதம் நினைவு கோப்பை கிரிக்கெட்தொடர்

டபுள் விக்கெட் டோர்னமெண்ட் என சொல்லப்படும் இத்தொடரில் முக்கிய நோக்கம் பேட்ஸ்மேன், பவுலர்கள், ஃபீல்டர்கள் எல்லோருக்கும் சம வாய்ப்புத் தருவதே. ஆல்ரவுண்டர்களை உருவாக்கவேண்டும் என்பதே அடிப்படைத் திட்டம். இப்போது டிவிஷன் அளவில் இந்தத் தொடர் விரிந்திருக்கிறது. வருங்காலங்களில் இந்த பார்மெட் இன்னும் பரவலடையும் என எதிர்பார்ப்பதாகச் சொன்னார் ஷ்யாம். 

கடந்த வாரங்களில் லீக் சுற்றுகள் நடந்து முடிந்தன. இதில் புனே அணிக்காக ஐபிஎல்லில் ஆடிய வாஷிங்டன் சுந்தர் உட்பட பல வீரர்கள் கலந்து கொண்டனர். லீக் சுற்று போட்டிகள் முடிந்துவிட்ட நிலையில் அரையிறுதி போட்டிகள் மற்றும் இறுதி போட்டிகள் நாளை, மெரினா கடலில் கண்ணகி சிலைக்கு எதிரே உள்ள மெரினா கிரவுண்டில் நடைபெறுகிறது. பார்வையாளர்கள் தாராளமாக வரலாம். பள்ளி மாணவர்களுக்கு இடையேயான தொடர் தனியாகவும், டிவிஷன் பிளேயர்களுக்கு இடையேயான தொடர் தனியாகவும் நடைபெறுகிறது. நாளைய தினம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு பரிசுகளை வழங்குகிறார். 


டிரெண்டிங் @ விகடன்