வெளியிடப்பட்ட நேரம்: 17:03 (23/06/2017)

கடைசி தொடர்பு:17:33 (23/06/2017)

'கும்ப்ளே சாதனைகளை மதிக்கிறேன்... ஓய்வறையில் நடந்ததைச் சொல்லமுடியாது' - கோலி

சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் தோல்விக்குப் பிறகு, இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கும்ப்ளே ராஜினாமா செய்தார். குறிப்பாக, கேப்டன் கோலி - கும்ப்ளே இடையே கருத்து வேறுபாடு நிலவியதாகத் போட்டித்தொடர் தொடங்குவதற்கு முன்பே கூறப்பட்டது. அதேபோல், தனது ராஜினாமா கடிதத்திலும், தன்னுடைய கருத்தில் கேப்டனுக்கு வேறுபாடு இருந்ததாக அணி நிர்வாகம் கூறியது என்று கும்ப்ளே குறிப்பிட்டிருந்தார்.

Kohli

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் போட்டிக்கு முன், கோலி செய்தியாளர்களிடம், "அனில் பாய் தன்னுடைய பார்வையை வெளிப்படுத்தி ராஜினாமா செய்துள்ளார். அதை நாங்கள் மதிக்கிறோம்" என்றார்.

அவரிடம் கும்ப்ளே ஓய்வு பெற்றது குறித்து தொடர்ந்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த கோலி, ''கடந்த 3-4 ஆண்டுகளாக நாங்கள் வளர்த்தெடுத்த பண்பாடு என்னவெனில் ஓய்வறையில் எது நடந்தாலும் ஓய்வறையின் புனிதத்தைக் காப்பதாகும். ஓய்வறையில் நடக்கும் விஷயங்களை வெளியே தெரிவிப்பது நாகரிகமல்ல. இதை அணியும் நம்புகிறது. தொடர்ந்து புனிதத்தைக் காப்போம். 
ஒரு கிரிக்கெட் வீரராக அனில் மீது எனக்கு முழு மரியாதை உள்ளது. நாட்டுக்காக அவர் செய்த சாதனைகளைப் பெரிதும் மதிக்கிறேன். இதை அவரிடமிருந்து எடுத்துவிட முடியாது. நாங்கள் அனைவருமே அவரை மிகவும் மதிக்கிறோம்'' என்று கூறினார்.