வெளியிடப்பட்ட நேரம்: 19:54 (23/06/2017)

கடைசி தொடர்பு:19:54 (23/06/2017)

சர்வதேசப் போட்டிகளை பாகிஸ்தானில் நடத்த விரும்பும் கிரிக்கெட் ஜாம்பவான்கள்!

பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கிரிக்கெட் ஜாம்பவான்கள் இயான் சாப்பல் மற்றும் விவ் ரிச்சர்ட்ஸ் கூறியுள்ளனர்.

விவ் ரிச்சர்ட்ஸ்- இயான் சாப்பல்

கடந்த 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை வீரர்கள் மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சில வீரர்கள் காயமடைந்ததோடு பாகிஸ்தான் காவல்துறையினர் 6 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பாகிஸ்தானில் சர்வதேசப் போட்டிகள் நடைபெறவில்லை. மேலும், பிற அணிகள் சுற்றுப்பயணமும் மேற்கொள்ளவில்லை. ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மட்டுமே பாகிஸ்தானில் விளையாடின.

இதனிடையே, பாகிஸ்தானில் சர்வதேசப் போட்டிகளை மீண்டும் நடத்த, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சிறு முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் இயான் சாப்பல் கூறியுள்ளார். மேலும், மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த கிரிக்கெட் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ், 'பாகிஸ்தான் லீக் போட்டிகளில் விளையாட அண்மையில் பாகிஸ்தான் சென்றபோது, அங்குள்ள மக்கள் சர்வதேச போட்டிகளைக் காண ஏங்குவது தெரிந்தது. அதனால், பாகிஸ்தானில் சர்வதேசப் போட்டிகள் நடப்பதற்கான வழிகளை கண்டறிய வேண்டும்' எனக் கூறியுள்ளார்.