வெளியிடப்பட்ட நேரம்: 21:38 (23/06/2017)

கடைசி தொடர்பு:22:25 (23/06/2017)

அடிப்படை வசதிகள் இல்லாவிட்டாலும் கூடைப்பந்தில் முத்திரைப் பதிக்கும் மாற்றுத் திறனாளிகள்..! #SaluteAndSupport

உலக அளவில் பெரும்பான்மையான நாடுகளில் கால்பந்து பிரபலம். அந்நாடுகளில் கால்பந்தைத் தவிர மற்ற விளையாட்டுக்களுக்கும் கிராக்கி இருக்கும். ஆனால், இந்தியாவில் அப்படியே உல்டா. இந்தியா ஒரு ‘சிங்கிள் ஸ்போர்ட் நேஷன்’. இங்கு கிரிக்கெட்டுக்கு இருக்கும் மரியாதை வேறு விளையாட்டுக்களுக்கு கிடையாது. நிலைமை இப்போது சற்று மாறி வந்தாலும், இன்னும் கிரிக்கெட் அளவுக்கு வீச்சு ஏற்படுத்தும் ஒரு விளையாட்டு இங்கில்லை. இப்படிப்பட்ட ஒரு தேசத்தில்தான் மாற்றுத் திறனாளிகளில் சிலர், சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டிகளில் அசத்தி வருகின்றனர். அரசிடமிருந்து பெரிதாக உதவிகள் இல்லாத பட்சத்திலும், முதன்முறையாக சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு முன்னேறியுள்ளனர்.

மாற்றுத் திறனாளிகள்

இந்திய அளவில் இப்போட்டிகளை முறைப்படுத்தும் சக்கர நாற்காலி கூடைப்பந்து கூட்டமைப்பு, கடந்த 2014-ம் ஆண்டு முதல் தேசிய அளவிலான போட்டிகளை நடத்தி வருகிறது. இந்தப் போட்டியின் மூலம் பெரும் அளவிலான மாற்றுத் திறனாளிகளின் திறமையை வெளிக்கொணரச் செய்துள்ளனர். இந்திய அளவில், குறிப்பாக தமிழகத்தில் இவ்வகை கூடைப்பந்துக்கு வரவேற்பு இருப்பதை புரிந்து கொண்டு, ஆர்வமிருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு, இந்த விளையாட்டுக்காகவே தயாரிக்கப்படும் 'சக்கர நாற்காலியை’ இலவசமாக வழங்கியுள்ளது இந்த அமைப்பு. அவ்வளவுதான், ஒரு திறப்புக்காக காத்திருந்ததுபோல சிறு வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டவர்கள், விபத்தில்  கை, கால்களை  உடைத்துக் கொண்டவர்கள், போரின்போது காயமடைந்து உடல் உறுப்புகளை இழந்த ராணுவ வீரர்கள் என மாற்றுத் திறனாளிகளில் பலர் ஒரு குடையின் கீழ் இணைந்துவிட்டார்கள். 
 
இந்த கூட்டமைப்பின் செயல்பாடுகள் குறித்து அதன் தலைமைச் செயலாளர் கல்யாணி ராஜாராமன், 'அதிகாரபூர்வமாக எங்கள் அமைப்புக்கு அங்கீகாரம் கிடைத்தவுடன் பலர் முன்வந்து உதவிகள் செய்யத் தொடங்கினர். ஒவ்வோர் ஆண்டும் ஏதாவதொரு இடத்தில் தேசிய அளவிலான சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டிகள் நடத்துவது, அதில் சிறந்து விளங்கக்கூடியவர்களுக்கு சர்வதேச அளவில் சாதித்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் கீழ் கோச்சிங் பெற வைப்பது என்று தொடர்ச்சியாக இயங்கினோம். இதனால், அவர்களது விளையாடும் திறனும் ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்தவண்ணம் இருக்கின்றது.

மாற்றுத் திறனாளிகள்

மாற்றுத் திறனாளிகள் பற்றி யோசித்தாலே, ஒரு பச்சாதப உணர்வும் ஒட்டிக் கொள்கின்றது. உண்மையில் அவர்களை சரிசமமாக நடத்தினாலேபோதும். அப்படி நடத்தப்படுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது நம் கடமை. அப்படிச் செய்துவிட்டால் அவர்கள் அகத்திலும், புறத்திலும் ஏதோ ஒரு வகையில் சிக்குண்டிருப்பது நொறுங்கும். இதற்காகத்தான் நாங்கள் பயிற்சி முகாமுக்கு வரும் மாற்றுத் திறனாளிகளிடம், யாருடைய துணையும் இல்லாமல் தனியாக வாருங்கள் என்போம். சாதாரண நபர்களைவிட மாற்றுத் திறனாளிகளுக்கு விளையாட்டு என்பது அவசியம். இப்படி ஒரு களத்தில் சாதிப்பதன் மூலம் அவர்கள் கண்டிப்பாக மாண்புடன் நடத்தப்படுவார்கள். இந்தப் புள்ளிதான் என்னையும் எங்கள் அமைப்பைச் சேர்ந்த பிற நண்பர்களையும் தொடர்ச்சியாகப் பல மாற்றுத் திறனாளிகளை உள்ளே கொண்டு வருவதற்கு இயக்குகிறது.' என்று நம்பிக்கை ததும்ப முடித்துக் கொண்டார். 
 
இந்த முறை சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்த பயிற்சி முகாம் சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால் இந்த முகாமுக்குப் பிறகு, இந்தோனேசியாவில் நடக்கும் சர்வதேச அணிகள் பங்கேற்க உள்ள ‘4-வது பாலி கோப்பை போட்டியில்' இந்தியா சார்பில் பெண்கள் சக்கர நாற்காலி கூடைப்பந்து அணி முதன்முறையாக பங்கேற்கிறது. இந்தப் போட்டியில் அவர்கள் பங்கேற்பதற்கான முழு செலவையும் ஆஸ்திரேலிய தூதரகம் ஏற்றுக் கொண்டுள்ளது. கூடுதல் உதவியாக ஆஸ்திரேலிய தூதரகம், பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று அந்நாட்டுக்காக தங்கப்பதக்கம் வென்ற ப்ராட்லி நாஸை வைத்து பயிற்சி கொடுக்கவும் ஏற்பாடு செய்துள்ளது.

இந்திய அளவில் இந்த முகாமில் 21 ஆண்களும், 19 பெண்களும் பயிற்சி பெற்று வருகின்றனர். அதில் ஆண்கள் அணியில் 6 பேரும், பெண்கள் அணியில் 6 பேரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். பெண்கள் அணியைப் பொறுத்தவரை மொத்தம் இருக்கும் 19 பேரில் 12 பேரை தேர்வு செய்து இந்தோனேசியா அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.  ஆனால், ஆண்கள் அணிக்கு இன்னும் ஸ்பான்சர் கிடைக்கவில்லை. அதனால், அடுத்த மாதம் 27-ம் தேதி தொடங்கும் பாலி கோப்பையில் பங்கேற்க முடியுமா? என்ற ஏக்கத்துடன் இருக்கிறார்கள்.

மாற்றுத் திறனாளிகள்
 

கடந்த 2009-ம் ஆண்டு மாடியிலிருந்து கீழே விழுந்து முதுகெலும்பில் பாதிப்பு ஏற்பட்ட தமிழக வீரர் பார்த்தசாரதி, 'விபத்துக்கு முன் நல்ல உடல் நிலையுடன் இருந்தபோது கூடைப்பந்து கற்றுக் கொண்டு விளையாடி வந்தவன். ஆனால், முதுகெலும்பில் பாதிப்பு ஏற்பட்டவுடன் துவண்டு போனேன். அப்புறம்தான், சக்கர நாற்காலி கூடைப்பந்து பற்றிக் கேள்விப்பட்டு, தீவிரமாக பயிற்சி மேற்கொண்டேன். பயிற்சி எடுக்கும் வரை ஒரு விஷயத்தை உணரவேயில்லை. நாற்காலியில் அமர்ந்தபடி கூடைப்பந்து விளையாடுவது, சாதாரணமாக கூடைப்பந்து விளையாடுவதைவிட சிரமமானது என்ற நினைத்துக் கூட பார்க்கவில்லை. இந்த விளையாட்டு அதிக கை பலத்தைக் கோரும். அதற்கு அடாப்ட் செய்து கொள்ள சிறிது காலம் பிடித்தது. இதோ, சர்வதேசப் போட்டியில் பங்கேற்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டேனே!' என்று கூறி நம்பிக்கை சிரிப்பை உதிர்த்தார்.
 
ஆனால், மத்திய அரசோ, தமிழக அரசோ இவ்வகை விளையாட்டுக்கு சின்னச் சின்ன உதவிகள் செய்தனவே தவிர, அடிப்படைத் தேவைகள் கூட இவர்களுக்கு இன்னும் பூர்த்தியாகவில்லை.. 'எந்த விளையாட்டில் ஈடுபடுவதற்கும் அதற்கே உரிய தெம்பை கூட்டிக் கொள்ள தினசரி உணவு பழக்கம் மாற்றப்பட வேண்டும். எளிய குடும்பங்களில் இருந்து வருவதனால், எங்களுக்கு அதைப் போன்ற ஒரு உணவுப் பழக்கத்தை பின்பற்ற முடியாத நிலை உள்ளது. இந்த வீல்-சேர், இந்தியாவில் தயாரிக்கப்படுவதில்லை. இறக்குமதிதான் செய்யப்படுகின்றன. இதன் விலை சுமார் 35,000 ரூபாய். உள் விளையாட்டு அரங்கத்தில்தான் எங்களால் பயிற்சி மேற்கொள்ள முடியும். ஆனால், அதற்கும் போதுமான கட்டுமான வசதிகள் இல்லை. மாவட்டந்தோறும் எங்களுக்கென்று ஒரு விளையாட்டு அரங்கம் அமைத்துக் கொடுப்பது, நாற்காலி வாங்கிக் கொடுப்பது போன்ற அடிப்படை வசதிகளை அரசு செய்துகொடுத்தால் போதும், நாங்கள் களத்தில் சாதித்துக் காட்டுவோம்.' என்று கள நிலவரத்தை விளக்குகிறார் தமிழகத்தைச் சேர்ந்த இன்னொரு வீரர் ஜகன்நாதன். 

மாற்றுத் திறனாளிகள்


தமிழக வீரர்கள் பெரும்பான்மையானோர் சாதாரண குடும்ப பின்புலத்தைக் கொண்டவர்கள். இவர்கள் அனைவரும் முழு நேரம் இந்த விளையாட்டுக்காக செலவழிக்க முடியாது. ஏனென்றால், இதில் நிரந்தர வருமானம் கிடையாது. மாறாக, தாங்கள் பார்த்து வரும் வேலையையோ, தொழிலையோ ஒரு பக்கம் செய்து கொண்டே பதக்கம் வெல்ல போராடிக் கொண்டிருக்கிறார்கள். போட்டியில் பங்கேற்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர் மட்டும் பயிற்சியில் ஈடுபடும் நிலையில்தான் இவர்கள் உள்ளனர்.  

சிங்கப்பூர் போன்ற வளர்ந்த நாடுகளில் இதைப் போன்ற ‘பாரா போட்டிகளுக்கு’ (மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் போட்டிகள்) நபர்களை தேடிக் கண்டிபிடிப்பது அரிது. இது மாற்றுத் திறனாளிகள் வெளியே வரத் தயங்குவதனால் வந்த பற்றாக்குறை அல்ல. மாறாக, அங்கெல்லாம் உடல் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறப்பது, சாலை விபத்துகளில் உடல் உறுப்புகளை இழப்பது போன்ற சம்பவங்கள் அறவே நடக்காது என்பதனால் ஏற்பட்ட பற்றாக்குறை. நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர்களில் பலர் போலியோ அல்லது விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள். வீரர்களில் பெரும்பான்மையானோர், ‘இதைப் போன்ற ஒரு விளையாட்டு இருக்கிறதென்று மாற்றுத் திறனாளிகள் பலருக்கே தெரியாது. அதைப் பற்றி உங்களால் முடிந்தவரை விழிப்பு உணர்வு ஏற்படுத்துங்கள். யாராவது பாரா போட்டிகளில் சாதிக்க வேண்டுமென்று நினைத்தால், தாராளமாக எங்களைத் தொடர்புகொள்ளச் சொல்லுங்கள்’ என்று கூட்டாக சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கோச்சின் விசில் சத்தம் கேட்டது. ஒரு சில நொடிகளில் சக்கர நாற்காலியில் அவர் முன் விரைந்து, அடுத்தப் பயிற்சிக்கு ஆயத்தமாகினர்.