வெளியிடப்பட்ட நேரம்: 13:43 (24/06/2017)

கடைசி தொடர்பு:13:43 (24/06/2017)

புலிப்பாய்ச்சல் இந்தியா, யானைபல ஆஸ்திரேலியா..! பெண்கள் உலகக் கோப்பை யாருக்கு? #WomensWorldCup #⁠WWC17

பெண்கள் உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்து மண்ணில் ஜூன் 24-ம் தேதி (இன்று) தொடங்கி ஜூலை 23-ம் தேதி வரை நடக்கிறது. பெருங்கனவுடன் இந்திய அணி பங்கேற்கிறது. பெண்கள் உலகக்கோப்பையில் இந்த முறை இந்தியா சாம்பியன் ஆகுமா? ஒவ்வோர் அணியின் ப்ளஸ்-மைனஸ்...

தடுமாறும்  இங்கிலாந்து :

மூன்று உலகக்கோப்பைகளை வென்ற பெருமை, இங்கிலாந்துக்கு உண்டு. இந்த முறையும் இங்கிலாந்து அணி சாம்பியன் ரேஸில் முந்துகிறது. ஏற்கெனவே இரண்டு முறை சொந்த மண்ணில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளதால், இந்த முறை மீண்டும் கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்குகிறது இங்கிலாந்து. ஹெதர் நைட்  தலைமையிலான அணியில் சீனியர்கள், ஜூனியர்கள், சூப்பர் சீனியர்கள்  எல்லோருக்கும் இந்த முறை இடம் கிடைத்திருக்கிறது.

கடந்த சில வருடங்களாக இங்கிலாந்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. தொடர் சொதப்பல்கள் காரணமாக, ஒன்றரை ஆண்டுகளாக அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்த சாரா டெய்லர் மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறார். விக்கெட் கீப்பர் சாராவின் வரவு இங்கிலாந்துக்கு யானை பலம். ரன் மெஷினாக மட்டுமல்லாமல், மேட்ச் வின்னராகவும் திகழக்கூடியவர். இங்கிலாந்து அணி, பெளலிங்கில் சற்றே பலமிக்க அணியாக இருக்கிறது. ஆனால் பேட்டிங்கில் சுமார்தான். இதனால் வலுவான அணிகளுக்கு எதிராக விளையாடும்போது திணறுகிறது.

இங்கிலாந்து அணி

“சிறிய வயதில் என்னிடம் கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சொந்த மண்ணில் உலகக்கோப்பைக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது என் வாழ்நாள் சாதனை. எங்களை யாரும்  இந்த உலகக் கோப்பையைக் கைப்பற்றக்கூடிய அணியாகக் கருதவில்லை. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஆட்டத்தில் கவனம் செலுத்துவோம். ஆஸ்திரேலியா, இந்தியா எங்களுக்குச் சவாலான அணிகள். அவர்களை வீழ்த்தினால் வரலாறு படைப்போம்" என நம்பிக்கையோடு பேசுகிறார் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரும் கேப்டனுமான ஹெதர் நைட்.  

முக்கியமான தொடர்களில் எப்போதுமே ஃபார்முக்கு வந்துவிடும் வழக்கத்தை வைத்திருக்கிறது இங்கிலாந்து பெண்கள் அணி. தன்னம்பிக்கையோடு ஆடினால் அரையிறுதி நிச்சயம். 

நட்சத்திர வீராங்கனைகள் - ஹெதர் நைட், சாரா டெய்லர், கேத்தரின் பிரென்ட், டாமி பெமோன்ட்

தென் ஆப்பிரிக்கா தேறுமா ?

ஆண்கள் கிரிக்கெட்டைப்போலவே பெண்கள் கிரிக்கெட்டிலும் இன்னும் ஓர்  உலகக்கோப்பையைக்கூட வெல்ல முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது தென் ஆப்பிரிக்க அணி. 2009, 2013 உலகக்கோப்பைகளில் வலுவான அணியாக இருந்த தென் ஆப்பிரிக்கா, இப்போது அரையிறுதிக்குச் செல்வதே கேள்விக்குறி. பெண்கள் உலகக்கோப்பையில் மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்றில் மற்ற ஏழு அணிகளுடனும் விளையாட வேண்டும். இதில் நான்கில் வென்றாலே தென் ஆப்பிரிக்க அணிக்கு மிகப்பெரிய சாதனைதான். ஆண்கள் அணியைப்போலவே பெண்கள் அணியும் முக்கியமான போட்டிகளில் தோல்வியடையும் வழக்கத்தை வைத்திருக்கிறது.

தென் ஆப்ரிக்கா அணி

கடந்த மூன்று ஆண்டுகளில், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து உள்ளிட்ட வலுவான அணிகளிடம் தொடர் தோல்விகளைச் சந்தித்துவருகிறது. தென் ஆப்பிரிக்க அணிக்கு முதன்முறையாகக் கறுப்பினத்தைச் சேர்ந்த ஹில்டன் மொரீங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். “17 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக தென் ஆப்பிரிக்கா அரையிறுதிக்குச் செல்லும். அதற்கு முழு உழைப்பையும் கொட்டியிருக்கிறேன். எங்கள் வீராங்கனைகள் நிச்சயம் வரலாறு படைப்பார்கள்” என்கிறார் மொரீங்.  

காயம் காரணமாக ஓய்வில் இருந்த டேன் வான் நீகெர்க்,  மீண்டும் அணிக்குத் திரும்பியிருக்கிறார். அவர்தான் இந்தமுறை தென் ஆப்பிரிக்கா அணிக்குத் தலைமை தாங்கப்போகிறார். அரையிறுதிக்குத் தகுதிபெறுகிறதோ இல்லையோ இந்த முறை நிச்சயம் சில அணிகளுக்கு அதிர்ச்சித் தோல்விகளைப் பரிசளிக்கும் வான் நீகெர்க் அணி. 

நட்சத்திர வீராங்கனைகள் - லிஜெல்லி லீ, மரிஜேன்  கேப், ஷப்னீம் இஸ்மாயில், டேன் வான் நீகெர்க். 

வின்னராகுமா  நியூசிலாந்து?

நான்கு முறை உலகக் கோப்பை இறுதியில் விளையாடியிருக்கிறது நியூசிலாந்து அணி. இதில் ஒருமுறை மட்டுமே சாம்பியன். பெண்கள் கிரிக்கெட் பொறுத்தவரையில் எப்போதுமே நியூசிலாந்து வலுவான அணிகளில் ஒன்று. அரையிறுதிக்குத் தகுதி பெறுவது என்பது நியூஸி-க்குப் பெரிய விஷயமே அல்ல. இந்த முறையும் வலுவான அணியாகவே களமிறங்குகிறது. பேட்டிங்கில் பலம் வாய்ந்த அணியாக விளங்குகிறது. ஆனால், பெளலிங் சொதப்பல்தான். இதனால் வலுவான அணிகளுடன் விளையாடும்போது இலக்கைக் காப்பாற்றுவதில் திணறுகிறது. 

நியூசிலாந்து அணி

"நாங்கள் சாம்பியன் பட்டம் வென்று 17 வருடங்களாகிவிட்டன. இந்த முறை எங்கள் மக்களை  ஏமாற்ற மாட்டோம். இங்கிலாந்தில் விளையாடுவது எப்போதுமே சிரமமானது. ஸ்விங்குக்குச் சாதகமான மைதானத்தில் இங்கிலாந்து அணி வலிமையானது. ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட அணிகளும் எங்களுக்குக் கடும் சவால் தரக்கூடியவை. எங்கள் அணியில் ஆறு பேர் கவுன்டியில் விளையாடிய அனுபவம் உள்ளவர்கள். அது நிச்சயம் கைகொடுக்கும்" என தம்ஸ்அப் காட்டுகிறார் நியூசி. கேப்டன் சூஸி பேட்ஸ்.

வலுவான நியூசி. அணி அரையிறுதி வரை செல்வதில் எந்தச் சிக்கலும் இருக்காது. சாம்பியனாகுமா எனக் கேட்டால், வாய்ப்பு குறைவுதான். 

நட்சத்திர வீராங்கனைகள்ஏமி சாட்டர்வைட், சூஸி பேட்ஸ், லீ தஹுஹூ, ஹோலி ஹடில்ஸ்டன் 

வலிமைமிக்க ஆஸ்திரேலியா :

1973 முதல் 2013 ஆண்டு வரையில் நடந்த பத்து உலகக் கோப்பைகளில் ஒருமுறைகூட ப்ளே ஆஃப் சுற்றை மிஸ்செய்தது கிடையாது. ஆறு முறை சாம்பியன் எனத் தெறிக்கும் ரெக்கார்டை வைத்திருக்கிறது ஆஸ்திரேலியா. இந்த முறையும் சாம்பியன் ரேஸில் முன்னணியிலிருப்பது ஆஸ்திரேலியாதான். கடந்த நான்கு வருடங்களில் விரல்விட்டு எண்ணும் அளவுக்குத்தான் தோல்வி அடைந்திருக்கிறது. வலுவான பேட்டிங், அசத்தலான பெளலிங், நேர்த்தியான கேப்டன்சி இவைதான் ஆஸ்திரேலியாவின் வெற்றி ஃபார்முலா.

ஆஸ்திரேலிய அணி

எந்தச் சூழ்நிலையிலும் ஆஸ்திரேலிய வீராங்கனைகள்  பதற்றம்கொள்வதேயில்லை. இந்த முறை பல புதிய வீராங்கனைகளுக்கு உலகக்கோப்பை அணியில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. "நாங்கள் ஏழாவது முறை சாம்பியன் பட்டத்தை வெல்ல ஆவலுடன் காத்திருக்கிறோம். எங்களுக்கு எந்தவோர் அணியையும் போட்டியாகக் கருதவில்லை. அத்தனை அணிகளையும் சமமாக மதிக்கிறோம். ஒரு போட்டியில்கூடத் தோற்காமல் விளையாட வேண்டும் என்பதே எங்கள் இலக்கு" என கம்பீரமாகப் பேசுகிறார் ஆஸி. கேப்டன் மெக் லானிங்.

ஆஸ்திரேலிய அணியில் ஏகப்பட்ட மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள். இப்போதைய அணியில் உள்ள பல பேட்ஸ்மேன்கள் ஸ்விங் மற்றும் சுழற்பந்துகளில் சற்றே தடுமாறக்கூடியவர்கள். இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட அணிகளை வென்றால், ஆஸ்திரேலியா  ஏழாவது முறையாக மகுடம் சுடுவதில் அவ்வளவு ஒன்றும் சிரமம் இருக்கப்போவதில்லை. 

நட்சத்திர வீராங்கனைகள்மெக் லானிங், எல்லிஸ் பெர்ரி, அலெக்ஸ் பிளாக்வெல், ஜெஸ் ஜொனாசன் 

புலிப் பாய்ச்சலில் இந்தியா :

2013-ம் ஆண்டு உலகக்கோப்பை இந்தியாவில்  நடந்தது. ஆனால், மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது இந்திய அணி. ஏழாம் இடத்தைப் பிடித்ததில் இந்திய ரசிகர்களின் முகத்தில் ஈயாடவில்லை. அதன் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளில் புலிப்பாய்ச்சலில் இருக்கிறது இந்திய அணி. ஆஸ்திரேலியா முதல்  இலங்கை வரை அத்தனை அணிகளுக்கும் சவாலான அணியாகக் கருதப்படுகிறது. `பெண்கள் கிரிக்கெட்டின் டெண்டுல்கர்' என அழைக்கப்படும் மிதாலி ராஜுக்கும், உலகப் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளர் ஜுலான் கோஸ்வாமிக்கும் 34 வயதாகிறது. இந்த இரண்டு ஜாம்பாவான்களும் பங்கேற்கும் கடைசி உலகக்கோப்பை இதுவாகத்தான் இருக்கும். தனது தலைமையிலான அணி கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் மிதாலி ராஜ் உறுதியாக இருக்கிறார். 

சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் மிகச்சிறந்த பெர்ஃபாமன்ஸை வெளிப்படுத்தியது இந்திய அணி. சீனியர்கள், ஜூனியர்கள் என காக்டெயிலாக இருக்கும் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல தகுதியான அணிதான். ஆனால், அது அவ்வளவு எளிதல்ல என்பதே நிதர்சனம். ஸ்விங்குக்குச் சாதகமான ஆடுகளங்களில் இந்திய வீராங்கனைகள் தடுமாறுகிறார்கள். ஆகவே, இங்கிலாந்து அணியை எதிர்கொள்வது இந்திய அணிக்கு மிகப்பெரிய சவால். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட அணிகளும் கடும் சவால் தரக்கூடியவை. லீக் சுற்றில் கொஞ்சம் அசந்தாலும் அரையிறுதி வாய்ப்பு தவறலாம். ஆகவே, மிகுந்த கவனத்தோடு ஆடவேண்டியது அவசியம். 

 உலகக் கோப்பையில் இந்திய அணி

ஹர்மன்ப்ரீத் கவுர், தீப்தி ஷர்மா என நம்பிக்கை தரும் இளம் வீராங்கனைகள் இந்தியாவுக்கு பலம்.  இங்கிலாந்து ஆடுகளங்களில் சுழற்பந்து வீச்சாளர்கள்  தடுமாறிவருவது சாம்பியன்ஸ் டிராபியில் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், இந்திய அணியின் பலமே சுழற்பந்துதான். ஏக்தா பிஷ்ட், பூனம் யாதவ், ராஜேஸ்வரி என மூன்று பேரில் யாருக்கு வாய்ப்பு தருவது என்பது கேப்டன் மிதாலி ராஜுக்கு தலைவலி. பேட்டிங் பலமாக இருக்கிறது, வேகப்பந்து துறை சுமாராகவே இருக்கிறது. விக்கெட் கீப்பர்தான் இந்திய அணிக்குக் கவலையளிக்கும் அம்சமாக இருக்கிறது. சுஷா ஷர்மா அனுபவம் குறைவான வீராங்கனை, பேட்டிங்கிலும் சுமாராகவே ஆடுகிறார். இந்திய அணியின் பலவீனங்கள் பட்டவர்த்தனமாகத் தெரிந்தாலும், தன்னம்பிக்கை மிகுந்த துடிப்பான அணி என்பதும் பாசிட்டிவ் மனநிலையுடன் உத்வேகத்துடன் ஆடிவருவதாலும் அரையிறுதிக்கு நிச்சயம் தகுதிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நட்சத்திர வீரர்கள் -  ஹர்மன்ப்ரீத் கவுர், மிதாலி ராஜ்,  ஜுலான் கோஸ்வாமி, ஏக்தா பிஷ்ட் 

ரேஸில் பின்தங்கும் மூன்று அணிகள் :-

பாகிஸ்தான், இலங்கை அணிகள் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்திவருகின்றன. இந்த இரண்டு அணிகளிடமும் பாசிட்டிவ் மனநிலையே இல்லை. பாகிஸ்தான், நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது. இலங்கை அணியின் நிலைமை பரிதாபம். இந்த இரண்டு அணிகளும் லீக் சுற்றில் மூன்றில் வென்றால் பெரிய விஷயம். 

வெஸ்ட் இண்டீஸ்  கடந்த உலகக்கோப்பையில் ரன்னர்அப். அதன் பிறகு கப்சிப். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகளை வெற்றிகொள்வது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பெருஞ்சவால். இந்தியா, தென் ஆப்பிரிக்க உள்ளிட்ட அணிகளை வென்றால், அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு இருக்கிறது. முக்கியமான தொடர்களில் திடீரென ஃபார்முக்கு வரும் அணி என்பதால், அரை இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் சான்ஸ் இருக்கிறது. 

ஆண்டு  -வின்னர் - ரன்னர் 

1973 -  இங்கிலாந்து - ஆஸ்திரேலியா 

1978 - ஆஸ்திரேலியா - இங்கிலாந்து 

1982 -  ஆஸ்திரேலியா - இங்கிலாந்து 

1988 - ஆஸ்திரேலியா - இங்கிலாந்து 

1993 -  இங்கிலாந்து - நியூசிலாந்து 

1997 - ஆஸ்திரேலியா - நியூசிலாந்து 

2000 -  நியூசிலாந்து - ஆஸ்திரேலியா 

2005 - ஆஸ்திரேலியா - இந்தியா 

2009 -  இங்கிலாந்து - நியூசிலாந்து 

2013 -  ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் 


டிரெண்டிங் @ விகடன்