வெளியிடப்பட்ட நேரம்: 22:37 (23/06/2017)

கடைசி தொடர்பு:11:07 (24/06/2017)

'இப்படி இருந்தால் பயிற்சியாளரே தேவையில்லை'... கோலியை விளாசும் முன்னாள் வீரர்!

சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் தோல்விக்குப் பிறகு, இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கும்ப்ளே ராஜினாமா செய்தார். குறிப்பாக, கேப்டன் கோலி - கும்ப்ளே இடையே கருத்து வேறுபாடு நிலவியதாகப் போட்டித்தொடர் தொடங்குவதற்கு முன்பே கூறப்பட்டது. அதேபோல், தனது ராஜினாமா கடிதத்திலும், தன்னுடைய கருத்தில் கேப்டனுக்கு வேறுபாடு இருந்ததாக அணி நிர்வாகம் கூறியது என்று கும்ப்ளே குறிப்பிட்டிருந்தார்.

Kohli


இதனிடையே, கும்ப்ளேவை பயிற்சியாளராக நியமித்தபோது, கடந்த ஆண்டு போட்டிருந்த ட்வீட்டை கோலி நீக்கினார். இதனால், கோலியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர். இந்நிலையில், கோலியின் செயலை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் எரப்பள்ளி பிரசன்னா விமர்சித்துள்ளார்.


இது குறித்து எரப்பள்ளி பிரசன்னா, "கோலி தன்னை பாஸ் என்று நினைத்துக்கொண்டால் அணிக்கு பயிற்சியாளரே தேவையில்லை. எதற்காக வீணாக பயிற்சியாளரை நியமிக்க வேண்டும். இதே மனநிலையில் இருந்தால், இந்திய அணிக்கு பௌலிங் மற்றும் ஃபீல்டிங்கிற்குகூட பயிற்சியாளர் தேவையில்லை.

 

Erapalli Prasanna

கோலி மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவர் நல்ல கேப்டனா? என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது. அனில் கும்ப்ளேவுக்கே இந்த நிலை என்றால், சஞ்சை பங்கார் மற்றும் ஶ்ரீதர் போன்றோர் கோலியிடம் எப்படி உறுதியாகப் பேசுவார்கள்? கும்ப்ளே அளவுக்கு அனுபவம் பெற்றவர்கள் யாரும் கிடையாது. ஒரு கேப்டனின் மனநிலை இப்படி இருந்தால் அணிக்கு பயிற்சியாளரே தேவையில்லை. சில ஆண்டுகளுக்கு முன் இருந்ததுபோல, அணிக்கு மேலாளரை மட்டுமே நியமித்தால் போதும்.

தோனி, யுவராஜ் போன்ற வீரர்கள் 2019 உலகக் கோப்பைக்கு ஃபிட்டாக இருப்பார்களா என்று தெரியவில்லை. தோனி கூட விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக இருக்கிறார். ஆனால், யுவராஜின் ஃபீல்டிங் முன்பு போல இல்லை. எனவே, மேற்கிந்தியத் தீவுகள் தொடரிலேயே இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம். இந்திய அணிக்கு தற்போது இளைஞர்கள்தான் தேவை. அதுவும் மேற்கிந்தியத் தீவுகள் அணி அந்தளவுக்கு ஃபார்மில் இல்லை. எனவே, இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்" என்று கூறியுள்ளார்.