வெளியிடப்பட்ட நேரம்: 02:06 (24/06/2017)

கடைசி தொடர்பு:10:59 (24/06/2017)

இந்தியா - மே.இ.தீவுகள் முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்து

cricket

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ட்ரினிடாட்டில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நேற்று மாலை 6.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஹோல்டர், இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தார்.

ரஹானே, தவான் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 25 ஓவர்களில் 132 ரன்கள் சேர்த்தனர். ரஹானே 62 ரன்களிலும், தவான் 87 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். பின்னர், நான்கு ரன்கள் எடுத்திருந்த நிலையில் யுவராஜ் சிங்கும் ஆட்டமிழந்தார். கேப்டன் விராட் கோலியும், தோனியும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 39.2 ஓவர்கள் இருந்தபோது மழை குறுக்கிட்டது. அப்போது, மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு இந்தியா 199 ரன்கள் எடுத்திருந்தது. 32 ரன்களுடன் கோலியும், 9 ரன்களுடன் தோனியும் களத்தில் இருந்தனர். மழை தொடர்ந்து பெய்து வந்ததால் முதல் ஒருநாள் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.