வெளியிடப்பட்ட நேரம்: 11:19 (25/06/2017)

கடைசி தொடர்பு:11:19 (25/06/2017)

அனில் கும்ப்ளே - விராட் கோலி முட்டல்.. மோதல்..! நடந்தது என்ன?

கடந்தாண்டு இதே மாதம், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்தான், அனில் கும்ப்ளேவுக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக முதல் தொடர்! ஆனால் இம்முறை அதே வெஸ்ட் இண்டீஸ்... அதே இந்தியா... ஆனால் பயிற்சியாளர் இல்லை என்பது நெருடலாக இருக்கிறது.

விராட் கோலி - அனில் கும்ப்ளே

அனில் கும்ப்ளேவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், சாம்பியன்ஸ் டிராபி பைனலில், இந்தியா பாகிஸ்தானிடம் தோல்வியடைந்ததைவிட, தலைப்புச் செய்திகளில் விராட் கோலியே அதிக முக்கியத்துவம் பெற்றார். தற்போது இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருக்கும் சஞ்சய் பாங்கர்தான், இப்போதைக்கு தலைமை பயிற்சியாளர்! இலங்கைத் தொடருக்குள்ளாக புதிய பயிற்சியாளர் நியமிக்கபடுவார் எனக் கூறப்படும் நிலையில், பதவிக்காலம் நீட்டிக்கப்பட்ட பிறகும், அனில் கும்ப்ளே ராஜினாமா செய்ததற்கான காரணம் என்ன?

விராட் கோலியின் கூற்று:

“அனில் கும்ப்ளே, தனது கருத்துகளைக் கடிதமாக வெளிப்படுத்திவிட்டு, பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருடைய முடிவை நாங்கள் மதிக்கிறோம். சாம்பியன்ஸ் டிராபி முடிந்த பிறகே இம்முடிவை அவர் எடுத்திருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபியின் போது, கிட்டத்தட்ட 11 செய்தியாளர்கள் சந்திப்பில் நான் கலந்து கொண்டேன். கடந்த 3-4 ஆண்டுகளாக நாங்கள் வளர்த்தெடுத்த பண்பாடு என்னவெனில், ஓய்வறையில் எது நடந்தாலும், அதன் புனிதத்தைக் காக்கும் விதமாக, ஓய்வறையில் நடக்கும் விஷயங்களை, பொதுவெளியில் தெரிவிப்பது நாகரிகமல்ல என்கின்ற பண்பாட்டை, தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். இதைத்தான் முழு அணியும் நம்புகிறது. தொடர்ந்து புனிதத்தைக் காப்போம். அவரது கருத்துகள் மற்றும் அணுகுமுறையை நான் மதிக்கிறேன். ஒரு கிரிக்கெட் வீரராக அனில் கும்ப்ளே மீது எனக்கு முழு மரியாதை உள்ளது. நாட்டுக்காக அவர் செய்த சாதனைகளுக்குத் தலை வணங்குகிறேன். நாங்கள் அனைவருமே அவரை மிகவும் மதிக்கிறோம்” என்று பிடிகொடுக்காமல் நழுவி விட்டார் விராட் கோலி.

இந்திய கேப்டன்

ஆனால், சமீபத்தில் விராட் கோலி செய்துள்ள செயல், அனில் கும்ப்ளே மீதான அவரின் வெறுப்பை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. “அனில் கும்ப்ளே சாருக்கு, எனது இதயம் கனிந்த வரவேற்பு. எங்களுடனான உங்களது பணியை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம். உங்களது அனுபவத்துடன், இந்திய கிரிக்கெட்டுக்கு நிறைய பெரிய விஷயங்கள் காத்திருக்கின்றது” எனத் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ஜூன் 23, 2016-ம் தேதியில் பதிவிட்டிருந்தார் விராட் கோலி. தற்போது ஒரு வருடத்துக்கு முந்தைய அந்தப் பதிவை நீக்கியுள்ளார் விராட் கோலி! 

விரிசலுக்குக் காரணம்?

சச்சின், கங்குலி, லஷ்மண் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணியின் ஆலோசனைக் குழு, கும்ப்ளேவின் பதவிக்கால நீட்டிப்புக்கு பச்சைக் கொடி காட்டவில்லை என்பதுடன், விராட் கோலியும் அனில் கும்ப்ளேயும் கடந்த 6 மாத காலமாகவே சகஜமாகப் பேசிக்கொள்ளும் அளவுக்கு, இருவரிடையே சுமுகமான உறவு இல்லை என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. பிசிசிஐ முதன்மை அதிகாரி கூறும்போது, “கிரிக்கெட் ஆலோசனை குழு, கும்ப்ளேவுக்கு பதவிக்கால நீட்டிப்பை வழங்கியது உண்மையே. ஆனால் அப்போது நிலுவையில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்றால் அவரின் பதவிக்காலத்தை நீட்டிக்கலாம் எனக் கருதப்பட்டது” எனக் கூறியுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி முடிந்தவுடன், லண்டனில் தனித்தனிச் சந்திப்புகள் நிகழ்ந்துள்ளது.

இந்திய பயிற்சியாளர்

முதலில் அனில் கும்ப்ளே, பிசிசிஐ முதன்மை அதிகாரி மற்றும் ஆலோசனைக் குழுவைச் சந்தித்தார், பிறகு கோலி அவர்களைச் சந்தித்தார், அதன் பிறகு கும்ப்ளே, கோலி இருவருமே ஒன்றாக அவர்களைச் சந்தித்தனர். ஆனால் இந்தச் சந்திப்பு வீணாகப் போய்விட்டது என்கிறார் அந்த அதிகாரி. “இருவரும் டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற இங்கிலாந்து தொடர் முடிந்த பிறகே பேசிக்கொள்ளவில்லை. அதாவது கடந்த 6 மாதங்களாக இருவரும், ஒருவருடன் ஒருவர் பரஸ்பரம் பேசிக்கொள்ளும் நிலையில் இல்லை என்பதே, அதிர்ச்சி தரும் விஷயமாக இருந்தது. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு, இருவரும் சேர்ந்து அணி நிர்வாகிகளை ஒன்றாகச் சந்தித்த போது, இருவருக்குமே இனி ஒத்துவராது எனக் கூறிவிட்டனர்.

விராட் கோலி

இதுகுறித்து, அனில் கும்ப்ளேவிடம் தனியாகப் பேசிய போது, விராட் கோலியுடன் தனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றார். ஆனால் விராட் கோலிக்கு இவரிடம் பிரச்னைகளாகத் தெரிந்தவற்றை விளக்கியதும், கும்ப்ளே இதெல்லாம் ஒரு பொருட்டல்ல என்று கூறிவிட்டார். விராட் கோலியிடம் பேசிய போது, தனக்குரிய உரிமைகளில் அனில் கும்ப்ளே தலையிடுகிறார் என்றார். ஆக இருவருக்கும் பிரச்னைகள் இருந்திருக்கும் போது, ஒருவரது பிரச்னை மற்றவருக்கு ‘இதெல்லாம் ஒரு சமாச்சாரமே அல்ல’ என்பது போல இருந்திருக்கிறது. அப்படியென்றால் முன்னரே இருவரும் தனிப்பட்ட முறையில் மனம்விட்டுப் பேசித்தீர்த்திருக்கலாம். ஆனால் இருவரும் சந்தித்தபோது, நிலைமை சீர் செய்ய முடியாத கட்டத்துக்குச் சென்றுவிட்டது. பார்படாஸுக்கு செல்ல அனில் கும்ப்ளேவுக்கு டிக்கெட் புக் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதற்குள்ளாக எல்லாம் முடிந்து விட்டது என்று அவருக்கு தெரிந்து விட்டது” எனக் கூறியுள்ளார் அந்த பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி.

கும்ப்ளேவின் கடிதத்தில் என்ன இருந்தது?

''கிரிக்கெட் நிர்வாகக் கமிட்டி என் மீது நம்பிக்கை வைத்து, என்னை தலைமை பயிற்சியாளராக நீடிக்கக் கோரியதை, எனக்கான கவுரவமாகக் கருதுகிறேன். கடந்த ஓராண்டில் அணியின் சாதனைகள் அனைத்தும், கேப்டன், ஒட்டுமொத்த அணி, துணைப்பயிற்சியாளர்களையே சேரும். இந்த கடிதத்தை நான் பதியும் போது, முதல்முறையாக விராட் கோலி எனது பயிற்சிமுறைகள் மீதும், தொடர்ந்து நான் பயிற்சியாளராக நீடிப்பது குறித்தும் மாற்றுக் கருத்துகள் இருந்ததாக பிசிசிஐ எனக்கு தெரிவித்தது. இது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. ஏனெனில் நான் எப்போதும் கேப்டன், பயிற்சியாளர் ஆகியோருக்கு இடையேயான வரம்புகளை மதிப்பவன். 

அனில் கும்ப்ளே

பிசிசிஐ எனக்கும், விராட் கோலிக்கும் இடையே இருக்கும் பிரச்னைகளைச் சுமுகமாகத் தீர்க்க, தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்தது, ஆனால் இந்தக் கூட்டணியை இனி ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறியதால், நான் வெளியேறுவதுதான் சிறந்த நேரம் இதுதான் எனக் கருதினேன். தொழில்நேர்த்தி, கட்டுக்கோப்பு, கடமைஉணர்வு, நேர்மை, திறமைக்குப் பாராட்டு, பலதரப்பட்ட அணுகுமுறை ஆகிய முக்கிய தகுதிகளை, நான் அணியில் செலுத்தியிருக்கின்றேன். ஒரு கூட்டணி திறம்பட செயல்பட வேண்டுமென்றால், முன்னே சொன்னவற்றை மதிப்பது அவசியம். பயிற்சியாளரின் பங்கு என்பது அணியின் நலனுக்காகவும், சுய முன்னேற்றத்தைக் கொண்டு வருவதற்காகவும் பணி செய்வதே ஆகும்.

இந்திய அணி

ஆகவே, இத்தகைய ‘முரண்பாடான கருத்துகள்’ உணர்த்தியதன்படி, இந்த பொறுப்புக்கு பொருத்தமானவர்களை சிஏசி, பிசிசிஐ நியமிக்கும் வகையில், எனது பொறுப்பை ஒப்படைப்பதே சிறந்தது என நம்புகிறேன். நான் மீண்டும் ஒருமுறை சொல்வது இதுதான்; இந்திய அணியின் தலைமைப பயிற்சியாளராக நான் பணியாற்றியதை, பெரிய கவுரவமாகக் கருதுகிறேன். பிசிசிஐ, சிஏசி, சிஓஏ ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். கிரிகெட்டை பின் தொடரும் ரசிகர்கள், தொடர்ந்து அளித்த ஆதரவுக்கு நன்றி. என் நாட்டின் மிகப்பெரிய கிரிக்கெட் பாரம்பரியத்தின் நலம் விரும்பியாக, நான் எப்போதும் இருப்பேன்'' என அக்கடிதத்தில் அவர் எழுதியுள்ளார்.

முன்னாள் வீரர்களின் கருத்து என்ன?

''இந்திய அணியில் சூப்பர் ஸ்டார் கலாச்சாரம் நிலவி வருகிறது, பயிற்சியாளரைவிட அந்த சூப்பர் ஸ்டார் வீரருக்குத்தான் அதிகாரம் அதிகம். அணித் தேர்வைத் தவிர, போட்டி வர்னணையாளராக யார் வர வேண்டும் என்பதையும் கூட அந்த சூப்பர் ஸ்டார் வீரர்தான் முடிவு செய்வார்'' என ராமச்சந்திரா குஹா குற்றம் சாட்டியிருந்தார்.

சுனில் கவாஸ்கர்

''இந்திய கிரிக்கெட்டின் துக்கமான நாள் எது என்றால், அது அனில் கும்ப்ளே பதவி விலகிய நாள்தான்; ஒகே பாய்ஸ் இன்று பயிற்சி வேண்டாம், ஜாலியாக லீவ் எடுத்துக் கொள்ளுங்கள், மனதுக்குப் பிடித்தவர்களுடன் ஷாப்பிங் செல்லுங்கள் என்று கூறும் மென்மையான பயிற்சியாளர்தான் தேவை என்றால், கடந்த ஓராண்டாக தனக்கு இடப்பட்ட கடினமான பணிகளை திறம்படச் செய்து நல்ல முடிவுகளை அளிப்பவர் உங்களுக்குத் தேவையில்லைதானே? எந்த வீரர் கும்ப்ளே மீது புகார் தெரிவித்திருந்தாரோ, அவர்தான் முதலில் அணியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர்'' எனக் காட்டமாகப் பேசியுள்ளார் சுனில் கவாஸ்கர். “இவர்கள் என்ன செய்தாலும் ஏற்றுக் கொள்பவர்கள்தான் வேண்டும். யாராவது இவர்களை எதிர்த்து நின்றாலோ, கேள்வி எழுப்பினாலோ, அவர்கள் வெளியே போய் விட வேண்டும். நான் 1996-97-ல் அணியின் பயிற்சியாளராக இருந்த போதும் இதே நிலைதான். எனவே கும்ப்ளேவைப் போல நான் சிறப்பாகக் பணிபுரிந்திருந்தாலும் வெளியேற வேண்டியதாயிற்று. ஈகோ பிடித்த ஆளுமைகளை மேய்ப்பது, கடினமான விஷயம்'' எனக் கடுப்பாகிவிட்டார் மதன்லால். 

புதிய பயிற்சியாளர் யார்?

அனில் கும்ப்ளே பதவி விலகியதை அடுத்து, புதிய பயிற்சியாளரைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கிறது பிசிசிஐ. இது குறித்து பேசிய பிசிசிஐ முதன்மை அதிகாரி “அடுத்த 10 நாட்களுக்குள் புதிதாக விண்ணப்பங்களைப் பெற உள்ளோம். எனவே விருப்பம் உள்ளவர்களும், அதற்குத் தகுதியான நபர்களும், அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களும் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். கடந்த முறை நாங்கள் விண்ணப்பங்களைக் கோரியபோது, அனில் கும்ப்ளே நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் தகுதியைப் பெற்றிருந்தார். அவர் பயிற்சியாளராகச் சிறப்பாக செயல்பட்டிருந்ததால், மற்றவர்களின் விண்ணப்பத்தில் நாங்கள் போதிய ஆர்வம் காட்டவில்லை. ஆனால் தற்போது நிலைமை மாற்றம் அடைந்துள்ளது. 

விரேந்திர சேவாக்

எனவே, பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க, பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அடுத்த பயிற்சியாளர் யார் என்பதை, கிரிக்கெட் ஆலோசனைக் குழு தேர்வு செய்யும். அதிகம் பேர் பரிந்தரைக்கும் சிறந்த நபரை தேர்வு செய்வோம்” என்றார். தலைமை பயிற்சியாளருக்கு விண்ணப்பிப்பதற்கான காலக் கெடுவாக, கடந்த மே 31, 2017 தேதியை, பிசிசிஐ ஏற்கெனவே அறிவித்திருந்தது. விரேந்திர சேவாக், டாம் மூடி, லால்சந்த் ராஜ்புத், ரிச்சர்ட் பைப்ஸ், தோடா கணேஷ் உள்ளிட்ட பலர் விண்ணப்பித்திருந்தனர். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளரான கிரெய்க் மெக்டர்மோட்டும் விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவரது விண்ணப்பம், காலம் கடந்ததால் நிராகரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்