வெளியிடப்பட்ட நேரம்: 18:24 (24/06/2017)

கடைசி தொடர்பு:18:30 (24/06/2017)

உலக ஹாக்கி லீக் : மீண்டும் இந்தியாவிடம் பணிந்தது பாகிஸ்தான்!

உலக ஹாக்கி லீக் அரையிறுதித் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், நெதர்லாந்து, தென்கொரியா, அர்ஜென்டினா உள்ளிட்ட 10 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. இந்திய அணி பி பிரிவில் இடம்பெற்றிருந்தது. இந்தியா, பாகிஸ்தான், கனடா, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து அணிகள் இந்தப் பிரிவில் இடம்பெற்றுள்ளன.

Hockey India


இந்திய அணி ஸ்காட்லாந்து, பாகிஸ்தான், கனடா ஆகிய அணிகளை வீழ்த்தியிருந்ததன் மூலம் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. ஆனால், காலிறுதியில் மலேசியாவிடம் இந்தியா தோல்வியடைந்தது. இந்நிலையில், 5 மற்றும் 8-வது இடங்களுக்கானப் போட்டி இன்று நடந்தது. இதில், இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. குரூப் போட்டிகளில் இந்தியாவிடம் அடைந்த தோல்விக்கு, பதிலடி கொடுக்கும் முனைப்பில் பாகிஸ்தான் களமிறங்கியது. 


அதேநேரத்தில் தரவரிசையில் நல்ல இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று இந்தியா களமிறங்கியது. போட்டியின் தொடக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. ராமன்தீப் சிங் இரண்டு கோல்களைப் போட்டு அசத்த, தல்வீந்தர் சிங், ஆகாஷ்தீப் சிங், ஹர்மன்ப்ரீத் சிங், மந்தீப் சிங் ஆகியோரும் தலா ஒரு கோல் அடித்தனர். 


பாகிஸ்தான் அணி ஒரு கோல் மட்டுமே அடித்தது. இதனால், 6-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, 5 மற்றும்  6-வது இடங்களுக்கான போட்டியில், கனடாவுடன் மோதுகிறது இந்தியா. பாகிஸ்தான் அணி 7 மற்றும் 8-வது இடங்களுக்கானப் போட்டியில் விளையாடவுள்ளது.