வெளியிடப்பட்ட நேரம்: 21:13 (24/06/2017)

கடைசி தொடர்பு:22:33 (24/06/2017)

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய கேப்டன் மித்தாலி ராஜ் புதிய சாதனை!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் இன்று தொடங்கியது. தொடக்கப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன. இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான புனம் ராவுத், ஸ்மிரிதி மந்தனா சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். 

Mithali Raj


ஸ்மிரிதி 90 ரன்களும், புனம் 86 ரன்களும் எடுத்தனர். அடுத்த களமிறங்கிய கேப்டன் மித்தாலி ராஜ் தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். மித்தாலி ராஜ் 71 ரன்கள் குவிக்க, 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 281 ரன்கள் குவித்தது. குறிப்பாக, இந்தப் போட்டியில் ரன் மிஷின் மித்தாலி ராஜ் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.


இந்தப் போட்டியில் அவர் அரை சதம் அடித்ததன் மூலம், மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 7 முறை அரைசதம் அடித்த ஒரே வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். முக்கியமாக, இது அவருக்கு 47-வது அரைசதமாகும். இதன் மூலம் மகளிர் கிரிக்கெட்டில் அதிக அரைசதம் அடித்த வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.


அதேபோல், 100 போட்டிகளில் விளையாடி சிறந்த சராசரியை (52.27) வைத்துள்ள வீராங்கனையும் மித்தாலிதான். மகளிர் கிரிக்கெட்டில் 5,000 ரன்களை கடந்த இரண்டாவது வீராங்கனை மித்தாலிதான். தற்போது அவர் 5,852 ரன்களை எடுத்துள்ளார். இதனால் 6,000 ரன்களை கடக்க உள்ள முதல் வீராங்கனை என்ற சாதனையையும் தன் வசப்படுத்த உள்ளார் மித்தாலி.


இதையடுத்து, மித்தாலிக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இதில் சச்சினும் ஒருவர்.