வெளியிடப்பட்ட நேரம்: 16:37 (25/06/2017)

கடைசி தொடர்பு:08:45 (26/06/2017)

'கும்ப்ளே இல்லாதது ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது!'- உண்மையை உடைக்கும் பேட்டிங் கோச் பாங்கர்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் பயிற்சியாளராக இருந்த முன்னாள் வீரர் அனில் கும்ப்ளேவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் சில காலமாக நீடித்து வந்தது. இதனால் கும்ப்ளே, திடீரென்று பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார். இதையொட்டி ஒரு பேட்டியில் பேசியுள்ள அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், 'கும்ப்ளே இல்லாதது அணியில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது' என்று ஓபன் டாக் கொடுத்துள்ளார்.

கும்ப்ளேவின் விலகலுக்குப் பிறகு அணியின் நிலைமை குறித்து பாங்கர், 'அணியிலிருந்து ஒருவர் பிரிந்து செல்கிறார் என்றால், அது மிகவும் கடினமான ஒன்றுதான். சில நேரங்களில் அதைப் போன்ற ஒரு சம்பவம் நடக்கத்தான் போகிறது என்பதை புரிந்துகொண்டு முன்னோக்கி நகர்வதே சிறந்தது. இந்திய கிரிக்கெட்டை பொறுத்தவரை, இது போன்ற விஷயங்கள் முன்னரும் நடந்துள்ளன. இதனால், அணியின் திறன் குறைந்துவிடாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அனில் கும்ப்ளே பயிற்சியாளராக இருந்தபோது, பல நேர்மறையான விஷயங்கள் நடந்தது. அவரின் கீழ் அணி மிகவும் வெற்றிகரமாக திகழ்ந்தது. அவர் இல்லை என்பதால், இப்போது ஒரு வெற்றிடம் இருப்பது உண்மைதான். ஆனால், அணியில் ஒரு தோனியோ, யுவராஜோ அல்லது கோலியோ இருப்பதனால், களத்துக்கு வெளியே அவர்கள் அணியினரை நன்றாக வழி நடத்துகின்றனர். ஒரு பயிற்சியாளருக்கும் கேப்டனுக்கு இடையில் மட்டுமல்ல, எந்த ஒரு உறவுக்கும் நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம்.' என்று விளக்கினார்.