எந்த ஸ்கோர் வெற்றியை கொடுக்கும்?: ஆருடம் சொல்லும் இந்தியப் பெண்கள் அணி கேப்டன் மித்தாலி ராஜ்!

இங்கிலாந்தில் பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை நேற்று தொடங்கியது. முதல் போட்டியே இந்தியா - இங்கிலாந்து இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை ஆரம்பித்துள்ளது. 

Mithali raj

நேற்றைய போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. மூன்றே விக்கெட்டுகள் இழப்புக்கு 281 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. இதன்பிறகு களமிறங்கிய இங்கிலாந்து அணியை 246 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி வெற்றிக் கனியை பிடித்தது இந்தியா.

இந்த வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் கேப்டன் மித்தாலி ராஜ், 'முதல் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது மகிழ்ச்சி. குறிப்பாக பௌலிங்குக்கு ஆதரவான சூழலில், இந்திய தொடக்க வீரர்களின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. எந்தவித அழுத்தத்தையும் தங்கள் மீது வைத்துக் கொள்ளாமல் இருவரும் பந்தை நாலா புறமும் விளாசினர். இதைப் போன்று தொடர்ந்து நல்ல ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் இந்தத் தொடர் முழுவதும் அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதனால், சுலபமாக எங்களால் 250 ரன்கள் இலக்கை எட்ட முடியும். 250 ரன்கள் என்பது பெண்கள் கிரிக்கெட்டில் நல்ல ஸ்கோர்.' என்று சிலாகித்தார்.

நேற்றைய போட்டியில் மித்தாலி ராஜும் 71 ரன்கள் குவித்தார். நேற்றைய அரை சதத்துடன் பெண்கள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 7 அரை சதம் அடித்தவர் என்ற சாதனையை மித்தாலி படைத்தார். இதுகுறித்து அவர், 'உண்மையில் என் சாதனையைப் பற்றி எனக்கு நினைவுறுத்தக் கூடாது என்றுதான் நினைக்கிறேன். ஆனால், அதிக ரன்கள் அடிப்பது மகிழ்வளிக்கிறது. உலகக் கோப்பையில் ரன்கள் அடிப்பதனால், அணியும் நன்றாக விளையாடும். தொடர்ச்சியாக நான் ரன் குவிப்பில் ஈடுபடுவேன் என்று நம்புகிறேன்.' என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!