வெளியிடப்பட்ட நேரம்: 20:25 (25/06/2017)

கடைசி தொடர்பு:07:47 (26/06/2017)

'இந்தியாவை ஜெயித்ததைவிட ஒரு நல்ல உணர்வே இருக்க முடியாது!'- பாகிஸ்தான் பயிற்சியாளர் பெருமிதம்

இந்தியா - பாகிஸ்தான் இடையில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் அனைவரும் எதிர்பார்த்ததற்கு மாறாக பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தி சாதனை படைத்தது. இதுவே, பாகிஸ்தான் வெல்லும் முதல் சாம்பியன்ஸ் கோப்பையாகும். இந்தப் போட்டியை அடுத்து பாகிஸ்தானுக்கு பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடமிருந்தும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. பாகிஸ்தானின் இந்த எழுச்சி குறித்து அந்த அணியின் பௌலிங் பயிற்சியாளர் அசார் மஹ்மூத் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் வெற்றி குறித்து, 'ஒரு பயிற்சியாளராக வெற்றி பெறும் அணியில் இருப்பது மிகப் பெரும் மகிழ்ச்சி. அதுவும் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றுவதைவிட ஒரு நல்ல உணர்வே இருக்க முடியாது. நாங்கள் வெற்றி பெறுவோம் என்று ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் இந்த தொடருக்காக களத்துக்கு வெளியே செலுத்திய உழைப்பைப் பற்றியும் முன்னெடுப்புகள் பற்றியும் யாரும் அறிந்திருக்கவில்லை. அதுவும் முதல் போட்டியில் இந்தியாவுடன் தோல்வி கண்டவுடன், நாங்கள் இந்த கோப்பையை வெல்வதற்கு வாய்ப்பே இல்லையென்றுதான் பேசப்பட்டது. ஆனால், பௌலிங், பேட்டிங், ஃபீல்டிங் என்ற அனைத்துத் துறையிலும் சிறப்பாக செயல்பட்டு கோப்பையைத் தட்டினோம்.' என்று தன் கருத்தை கூறினார்.