வெளியிடப்பட்ட நேரம்: 23:34 (25/06/2017)

கடைசி தொடர்பு:23:34 (25/06/2017)

இந்திய மகளிர் அணி கேப்டன் மித்தாலி ராஜ் வெற்றியின் ரகசியம் இதுதான்!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நேற்று தொடங்கியது. தொடக்கப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான புனம் ராவுத், ஸ்மிரிதி மந்தனா சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். கேப்டன் மித்தாலி ராஜ்ஜும் சிறப்பாக பேட் செய்ததால் இந்திய அணி 50 ஓவர்களில் 281 ரன்கள் எடுத்தது.இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால், உலகக் கோப்பையின் முதல் போட்டியையே வெற்றியுடன் தொடங்கியுள்ளது இந்தியா.

Mithali Raj

இந்த வெற்றிக்குப் பிறகு இந்திய அணி கேப்டன் மித்தாலி ராஜ் செய்தியாளர்களிடம், "முதலில் பேட் செய்யும் போது, நல்ல ஸ்கோர் எடுக்க தொடக்க ஆட்டக்காரர்களின் பங்களிப்பு முக்கியம். எங்களுக்கு சிறப்பான தொடக்கம் நேற்று கிடைத்தது. மைதானம் பௌலிங்கிற்கு சாதகமாக இருந்தாலும், எங்களது ஓப்பனர்கள் இங்கிலாந்து வீராங்கனைகளின் பௌலிங்கை சிதறடித்தனர். இந்த சிறப்பான ஆட்டத்தை, தொடர் முழுவதும் தொடர விரும்புகிறோம்.

அணி பேட் செய்து கொண்டிருக்கும் போது, புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஃபீல்டிங் கோச் எனக்கு அறிமுகப்படுத்தினார். குறிப்பாக, ரூமி குறித்து புத்தகங்களையும் அவர் கொடுத்தார். அதைதான் இங்கிலாந்து போட்டியின் போது படித்துக் கொண்டிருந்தேன்.
புத்தகம் வாசிக்கும் பழக்கம் எனது மனதை அமைதிப்படுத்துகிறது. அதனால், சிறப்பாக பேட்டிங்கும் செய்ய முடிகிறது" என்று கூறியுள்ளார்.