2019 உலகக் கோப்பையில் எப்படி உதவுவார் தெரியுமா? ரஹானே குறித்து கோலி அடடே கருத்து!

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றியடைந்ததை அடுத்து, இந்திய கேப்டன் விராட் கோலி, ரஹானேவுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணி தற்போது மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தச் சுற்றுப் பயணத்தின் போது,
5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. கடந்த 23-ம் தேதி நடந்த முதல் ஒருநாள் போட்டி, மழையால் கைவிடப்பட்டதை அடுத்து, நேற்று 2-வது ஒருநாள் போட்டி நடந்தது. இதில் இந்திய அணி, மேற்கு இந்திய தீவுகள் அணியை 105 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் இந்தியாவின் தொடக்க வீரர் ரஹானே, சதம் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். 

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கேப்டன் விராட் கோலி, 'ரஹானே சில காலமாகவே இந்திய ஒருநாள் அணியின் ஒரு அங்கமாக இருக்கிறார். தொடக்க வீரராக களம் இறங்குவதில் அவருக்கு நிறைய திறமை இருக்கிறது. எனக்குத் தெரிந்து சில காலமாக அவர் அழுத்தங்களை மறந்து விளையாட்டை அனுபவிக்க ஆரம்பித்துவிட்டார். இதனால் அவரது ஆட்டத் திறனும் அதிகரித்துள்ளது. இனி அவருக்கு ஏறுமுகம்தான்.

மிடில் ஆர்டரைப் பொறுத்தவரையில் அவர் ஒரு 'ஃப்லோட்டர்'. எங்கு வேண்டுமானாலும் ஆடக்கூடிய திறமை அவருக்கு இருக்கிறது. இந்தக் காரணத்தால், ஒரு கூடுதல் பௌலர் ஆடுவதற்கு அவர் இடமளிக்கிறார். இந்தக் காரணம் 2019-ம் ஆண்டு நடக்கவிருக்கும் உலகக் கோப்பைக்கு உதவும். அவர் தொடக்க வீரராகவும் களம் இறங்குவார். மிடில் ஆர்டரிலும் அசத்துவார். இந்தத் திறமை சிலருக்கே வாய்க்கும்' என்று ரஹானேவுக்குக் கோலி புகழாரம் சூட்டியுள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!