வெளியிடப்பட்ட நேரம்: 17:56 (26/06/2017)

கடைசி தொடர்பு:09:09 (27/06/2017)

'என் கிரிக்கெட் எதிர்காலம்குறித்து ஆகஸ்ட்டில் முடிவு!'- டிவில்லியர்ஸ் திடீர் அறிவிப்பு

தென்னாப்பிரிக்கா ஒருநாள் அணியின் கிரிக்கெட் கேப்டன் மற்றும் ஸ்டார் பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ், தனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து வரும் ஆகஸ்ட் மாதம் முடிவு எடுக்கப்படும் என்று திடீரென்று அறிவித்துள்ளார்.

தற்போது தென்னாப்பிரிக்கா அணி, இங்கிலாந்தில் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளை விளையாட சுற்றுப் பயணத்தில் இருக்கிறது.நேற்று மூன்றாவது 20 ஓவர் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. போட்டி முடிந்தவுடன் டிவில்லியர்ஸ் திடீரென்று சொந்த நாட்டுக்குத் திரும்பியுள்ளார்.

இந்தத் திடீர் விலகல்குறித்து டிவில்லியர்ஸ், 'நான் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் நிர்வாகத்தினரை வரும் ஆகஸ்ட் மாதம் சந்திக்க உள்ளேன். அப்போது, என் கிரிக்கெட் எதிர்காலம்குறித்து முடிவுசெய்யப்படும். இந்தச் சந்திப்பானது, ஒரு சில போட்டிகளில் என் ரோல் பற்றி இருக்காது. மாறாக, அடுத்த சில ஆண்டுகளுக்கு அணியில் என் ரோல் என்ன என்பதைப் பற்றி முடிவுசெய்யவே இந்தச் சந்திப்பு. சிறிது காலம் என் குடும்பத்துடன் செலவழிக்க விரும்புகிறேன். என் இரண்டாவது குழந்தையை இந்த உலகத்துக்கு வரவேற்க உள்ளேன். 

தென்னாப்பிரிக்காவுக்காக ஓர் உலகக் கோப்பை வெல்ல வேண்டும் என்பது என் கனவு. அல்லது அப்படி வெற்றிபெறும் அணியிலாவது இருக்க வேண்டும். அது என் கையில் இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை. என் எதிர்காலம்குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் வரை நான் காத்திருக்க விரும்புகிறேன்' என்று கூறியுள்ளார். டிவில்லியர்ஸின் இந்தத் திடீர் விலகல் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.