சித்து ‘சிக்ஸர் சித்து’ ஆன கதை... 1987 உலகக் கோப்பை கிரிக்கெட்.. தெரிந்ததும் தெரியாததும்! Gentleman to CommonMan மினி தொடர் பாகம் 6 | 1987 world cup series part 6

வெளியிடப்பட்ட நேரம்: 10:03 (27/06/2017)

கடைசி தொடர்பு:11:27 (27/06/2017)

சித்து ‘சிக்ஸர் சித்து’ ஆன கதை... 1987 உலகக் கோப்பை கிரிக்கெட்.. தெரிந்ததும் தெரியாததும்! Gentleman to CommonMan மினி தொடர் பாகம் 6

உலகக் கோப்பை

பாகம் 1 பாகம் 2 / பாகம் 3 பாகம் 4 / பாகம் 5

1987 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிதான் கோப்பையை வெல்லும் என்ற எண்ணத்தில் இருந்த இந்திய ரசிகர்களுக்கு, அணி அரை இறுதியில் தோற்றது பெரும் ஏமாற்றத்தை தந்தது. சாதாரணமாக நாம் விரும்பிய அணி தோற்றாலோ அல்லது நமக்குப் பிடித்த நடிகர் நடித்த திரைப்படம் சரியில்லாமல் போனாலோ சில நாட்கள் அதுபற்றிப் பேசாமல், அது குறித்த தகவல்கள் வரும் இடங்களுக்குச் செல்வதை தவிர்ப்பது இந்திய மனோபாவம். எனவே பொது இடங்களில் கிரிக்கெட் பற்றிப் பேசுவது சிறிது குறைந்தது. மைதானங்களில், தெருவில் கிரிக்கெட் ஆடுவதில் ஒரு விரக்தி நிலவியது. ஆனால் அதெல்லாம் ஒருவாரம் தான். மீண்டும் மக்கள் ஆர்வமாக விளையாட ஆரம்பித்தார்கள். அந்த அளவுக்கு மக்கள் மனதில் ஒரு அழியாத இடத்தை சில ஆண்டுகளிலேயே பிடித்திருந்தது கிரிக்கெட். 

இந்த 1987 உலகக்கோப்பை இந்திய அணியில் கொண்டுவந்த முக்கிய மாற்றம் அணித்தலைமை. கவாஸ்கருக்கும் கபில்தேவுக்கும் இடையில் மாறி மாறி சென்று கொண்டிருந்த தலைமைப் பதவிக்கு அடுத்து யார் என்று ஒரு கேள்வி எழும்பியது. ஏனென்றால் கவாஸ்கர் ஏற்கெனவே தன் ஓய்வை அறிவித்திருந்தார். நோய்க்கூறுகளை ஆராய்ந்து பார்க்காமல் முரட்டு வைத்தியம் பார்ப்பது போல பெரிய போட்டிகளில் தோற்றால், அணியின் தலைமையை மாற்றினால் எல்லாம் சரியாகிவிடும் என்ற கொள்கையை இந்திய கிரிக்கெட் வாரியம் கொண்டிருந்தது. 

எனவே, கபில்தேவின் கேப்டன் பதவி நிச்சயம் பறிபோகும் அடுத்து யார் என்ற கேள்வி இயல்பாகவே எழுந்தது. அடுத்த கேப்டனாக திலீப் வெங்சர்க்கார் நியமிக்கப்பட்டார். அவர் சில தொடர்களை இழந்ததும் ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டார். பின்னர் அசாருதீன், டெண்டுல்கர், கங்குலி, ட்ராவிட், தோனி, கோலி என சென்றுகொண்டிருக்கிறது. 

எத்தனை கேப்டன்கள் வந்தாலும் இந்திய அணியின் ஃபார்முலா மாறாமலேயே இருக்கிறது. அருமையான பேட்ஸ்மேன்கள், இரண்டு ஸ்பின்னர்கள், அவ்வப்போது கிடைக்கும் ஒரு வேகப்பந்து வீச்சாளர். இந்த வேகப்பந்து வீச்சாளர்கள் என்னும் இனம்தான் இந்திய அணிக்கு மிகப்பெரும் குறையாகவே இருந்துவருகிறது. நூறாண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் ஆடிவரும் ஒரு நாட்டில், 1987உலகக்கோப்பைக்குப் பின் 30 ஆண்டுகளாக கிராமம் வரை கிரிக்கெட் ஆடும் ஒரு நாட்டில் எண்ணி மூன்றே மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள்தான் உலகத் தரத்தில் கிடைத்திருக்கிறார்கள் என்பது எவ்வளவு யோசிக்க வேண்டிய விஷயம்? கபில்தேவ், ஸ்ரீநாத், ஜாகிர் கான் ஆகிய மூவரை மட்டுமே உலகத்தரமான பந்து வீச்சாளர்கள் கேட்டகிரியில் சொல்ல முடியும், அதிலும் கபில்தேவ் மட்டுமே தொடர்ந்து விளையாடினார். ஸ்ரீநாத், ஜாகிர்கான் அடிக்கடி காயங்களால் அவதிப்பட்டு முக்கிய தொடர்களில் விளையாடாமலும் இருந்திருக்கிறார்கள்.  

உலகக் கோப்பை

தொடக்க காலத்தில் மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீச வருபவர்கள் கூட சில ஆண்டுகளில்130க்கு இறங்கி விடுகிறார்கள். பலர் ஸ்விங் பவுலர் ஆகிவிடுகிறார்கள். வெறும் வேகப்பந்து வீச்சைவிட ஸ்விங் பண்ணினால்தான் விக்கெட் கிடைக்கும் என்றாலும், வேகம் இல்லாத ஸ்விங் ஆனது விஷம் இல்லாத பாம்பைப் போலத்தான். எளிதில் அடித்துவிட முடியும். மேலும், மணிக்கு 140 கிலோமீட்டருக்கு மேல் வேகத்தில் வீசும்போதுதான் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகும் வாய்ப்பும் இருக்கும். 

1987 உலக்கோப்பையில் நாம் தோல்வி அடையக் காரணங்களில் ஒன்று நல்ல வேகப்பந்து வீச்சாளர் இல்லாதது. கபில்தேவ் தன்னுடைய பொற்காலத்தில் அப்போது இல்லை. இரண்டு பேட்ஸ்மேன்கள் செட்டாகி விளையாடிக் கொண்டிருக்கும்போது அவர்களின் விக்கெட்டை தன் திறமையால் எடுக்கும் வேகப்பந்து வீச்சாளர் அப்போது இல்லை. ஏன் இப்போதும் கூட இல்லை. வழக்கமான சுழற்பந்து வீச்சாளர்களை பந்து வீசச் சொல்லி விக்கெட் விழுகுமா என வேடிக்கைதான் பார்த்துக்கொண்டு இருக்க முடிந்தது.

1987ல் அடைந்த தோல்வியைப் பரிசீலனை செய்துதான் இந்தக் குறையைப் போக்க சென்னையில் எம் ஆர் எஃப் பேஸ் பவுண்டேசன் துவக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் டென்னிஸ் லில்லி தலைமை கோச்சாகவும், தற்போது டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு பயிற்சியாளர்களில் ஒருவராக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த டி ஏ சேகர் போன்றோர்கள் உறுதுணையாகவும் இருக்க இந்த அகாடமி ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும் நமக்கு போதிய அளவில் வேகப்பந்து வீச்சாளர்கள் கிடைக்கவில்லை.

நமக்கு ஆரம்பகட்டத்தில் இருந்தே வேகப்பந்து வீச்சாளர்கள் கிடைக்காததற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் முக்கிய காரணம், இங்கு உள்ள பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளங்கள். இதில் விக்கெட் எடுக்க திணறி தங்கள் பாதையை சுழற்பந்து வீச்சாளர்களாகவோ அல்லது பேட்ஸ்மேனாகவோ மாற்றிக்கொண்டோர் அதிகம். ஆனால் இறுதிவரை முயல்பவராக இருப்பவர்கள் இங்கே குறைவு. இதை நம் நாட்டு ஆராய்ச்சியாளர்களுடன் ஒப்பிடலாம். ஏற்கனவே இருக்கும் ஒரு தொழில்நுட்பத்தில் வேலை பார்ப்பது என்பது எளிது. ஆனால் ஒரு புதிய தொழில்நுட்பத்தையோ, புதிய பொருளையோ உருவாக்குவது கடினம். அதிகமான உழைப்பு தேவைப்படும். அந்த அதீத உழைப்புக்கு அஞ்சியே தமக்கு சாதகமான பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் நம் ஆட்கள்.

உலகக் கோப்பை

ஹாக்கி முன்னாட்களில் இயற்கையான மைதானங்களில் விளையாடும்போது ஒரு வீரரருக்கு முக்கியமான தேவையாக நுணுக்கமான ஆட்டத்திறனே இருந்தது. அதற்கடுத்து தான் உடல்வலு தேவை. அதுவரை இந்தியா ஹாக்கியில் அசைக்கமுடியா இடத்தில் இருந்தது. ஆனால் ஹாக்கி செயற்கை ஆடுகளங்களில் விளையாட  ஆரம்பித்த உடன் ஆட்டத்திறனும், உடல்வலுவும் சரிவிகிதத்தில் தேவைப்பட தொடங்கியது. இந்த இடத்தில் தோன்றியது இந்திய ஹாக்கியின் சரிவு. இதேபோல் தான் இப்போது கிரிக்கெட்டிலும் உடல் வலுவிற்கான முக்கியத்துவம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கிரிக்கெட் மைதானங்களின் விட்டமானது பொதுவாக 120 மீட்டர் முதல் 160மீட்டர் வரை இருக்கிறது. எனவே சிக்ஸர் அடிக்க 60 முதல் 80 மீட்டர் வரை பந்தை பறக்கச் செய்தால் போதும். உடல் வலுவான கிரிக்கெட் நுணுக்கத்துடன் கூடிய ஆட்டக்காரர் சராசரியாக 80 மீட்டருக்கு மேல் பந்து பறந்துசெல்லும் வகையில் அடித்தால் அவருக்கு ஃபீல்டிங்கே செட் செய்ய முடியாமல் போய்விடும்.

1992 உலக்கோப்பைப் போட்டிகளில் நியூசிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக இறங்கி விளையாடி அதிரடியாக ரன்குவித்த கிரேட் பாட்ச் இப்படிச் சொல்வார், “எந்த பந்துமே ஆடுகளத்தில் விழாத வரையில் அது புல் டாஸ் தான். எனவே நான்கு அடி இறங்கி பந்தை சந்தித்தால் எங்கும் அடிக்கலாம்’’ என்பார். அவர் அப்படி ஒருமுறை இறங்கி அடித்தது சாதாரண பந்துவீச்சாளரை அல்ல, 90களின் தலைசிறந்த வேகப்பந்து  வீச்சாளராக விளங்கிய கர்ட்லி அம்புரோஸை. அதுபோல இப்போது ஒருநாள் போட்டிகளிலும், 20-20 போட்டிகளிலும் ஏன் டெஸ்ட் மேட்சுகளில் கூட அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். இம்மாதிரியான பேட்ஸ்மேன்கள் பெருகும்போது அவர்களைக் கட்டுப்படுத்த வலுவான வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை. இல்லாவிட்டால் இந்திய அணி எப்படி ஹாக்கி உலகில் தன் பெருமையை இழந்ததோ அதுபோல் கிரிக்கெட் அணியும் இழக்க நேரிடலாம்.

1987 உலகக் கோப்பையில், பந்துவீச்சை எடுத்துக்கொண்டால் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மெக்டர்மட் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக முதல் இடம்பிடித்தார். இரண்டாம் இடத்தை இம்ரான் கான் பிடித்தார். இம்ரான் கானாவது இந்தப் பகுதி வீரர், அனுபவமிக்கவர். ஆனால் மெக்டர்மெட் அப்போதைய நிலையில் இளம் ஆட்டக்காரர் இருந்தாலும் உயிர் இல்லாத இந்திய, பாகிஸ்தான் ஆடுகளங்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  இந்திய அணியில் அப்போதைய வேகப்பந்து வீச்சாளரான சேட்டன் சர்மா நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் எடுத்தார். எனவே கடுமையாக முயற்சி செய்தால் இந்தியாவிலும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாகலாம்.

எப்படி யாரும் எதிர்ப்பார்க்காத மெக்டர்மெட் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடம் பிடித்தாரோ,அதே போல் பேட்டிங்கில் யாரும் எதிர்பார்க்காவண்ணம் சிறப்பாக ஆடி அனைவரையும் கவர்ந்தவர் இந்திய அணியின்  ஆட்டக்காரர் நவ்ஜோத் சிங் சித்து. 

இந்த 1987 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் குவித்த முதல் ஐவரில் இந்தியா, பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் இல்லை. கூச் முதலிடத்தைப் பிடித்தார். பூன், மார்ஷ், ரிச்சர்ட்ஸ் மற்றும் கேட்டிங் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்திருந்தார்கள். இந்திய அணியின் பேட்டிங் ஹீரோவாக இந்தத் தொடரில் திகழ்ந்த நவ்ஜோத் சிங் சித்து. தொடர்ந்து நான்கு அரை சதங்களை அடித்தது மட்டுமல்லாமல் ஒன்பது சிக்ஸர்களையும் விளாசினார். கலந்து கொண்ட 7 போட்டிகளில் ஒன்பது சிக்ஸர்கள் என்பது அந்த நேரத்தில் பெரும் சாதனை. ஏனென்றால் ஒரு ஆட்டத்திற்கே அதிகபட்சம் நான்கைந்து சிக்ஸர்கள்தான் அடிக்கப்படும். இதனால் இவருக்கு “சிக்ஸர் சித்து” என்ற அடைமொழி கிடைத்தது.

இந்த 1987 உலகக் கோப்பை எப்படி பல ஆட்டக்காரர்களுக்கு முடிவுரையாக அமைந்ததோ அதுபோல ஏராளமான ஆட்டக்காரர்களுக்கு ஒரு முன்னுரையாக அமைந்திருந்தது. ஜிம்பாப்வே அணியின் டேவ் ஹவுட்டன் அதில் ஒருவர். அப்போதைய ஜிம்பாப்வே அணியின் கேப்டன் ட்ரைகாஸ் 43 வயதானவர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மெனான டேவ் ஹவுட்டன் தான் ஐசிசி நடத்திய உறுப்பு நாடுகளுக்கு இடையேயான போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்று உலகக் கோப்பை ஆட காரணமாக இருந்தவர். லீக் போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிராக ஒற்றை ஆளாக போராடி 143 ரன்களைக் குவித்து வெற்றிக்கு அருகேயே ஜிம்பாப்வே அழைத்துச் சென்றார். இந்த உலகக் கோப்பைக்குப் பின் அவர் ஜிம்பாப்வே அணித்தலைவராகவும் ஆனார். 

இதுபோக இரண்டு ஆட்டக்காரர்கள் இந்த உலகக் கோப்பையில் விளையாடினார்கள். அதில் ஒருவரை அவர் ஆடிய அணிக்கு கேப்டனாக எதிர்காலத்தில் வருவார் என கணித்திருந்தனர். ஆனால் அவர் கேப்டனாக வருவார், அந்த அணிக்கு ஏராளமான வெற்றிகளைப் பெற்றுதருவார், முத்தாய்ப்பாக உலக கோப்பையையும் பெற்றுத்தந்து அணியை வலிமையாக மாற்றிவிட்டுப் போவார் என்றெல்லாம் கணிக்கவில்லை. ஆனால் அவர் அப்படிச் செய்துவிட்டுப் போனார். அவர்தான் இலங்கை அணியின் அர்ஜுனா ரணதுங்கா.

இன்னொரு ஆட்டக்காரர். அவர் ஆல்ரவுண்டர். அவர் அந்த அணிக்கு தலைவராவார் என்றோ, அணியை யாராலும் வீழ்த்த முடியாத அணி என்ற நிலைமைக்கு கொண்டு செல்வார் என்றோ, பின்னாட்களில் பேட்ஸ்மேனாக மட்டுமே அறியப்படுவார் என்றோ யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர்தான் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாஹ்.

உலகக் கோப்பை 

இவர்களைப் போல மிகச்சிறந்த கேப்டன் என்ற புகழைப் பெறாவிட்டாலும் நல்ல கேப்டன் என்னும் பெயரைப் பின்னாட்களில் பெற்ற ஒருவரும் இந்திய அணியில் ஆடினார். கிரிக்கெட் உலகே ஏன் அவரே கூட நினைத்து இருக்க மாட்டார் அடுத்த மூன்று உலகக் கோப்பைகளுக்கு தன் தலைமையில் தான் இந்திய அணி களமிறங்கும் என்று. அவர்தான் முகமது அசாரூதீன்.

இங்கிலாந்திற்கு அடிமைப்பட்டு கிடந்த நாடுகள்தானே...! 

முதல் நாள் பாகிஸ்தான் சோகக்கடலில் மூழ்கியது என்றால் அடுத்த நாள் இந்தியா. 

கவாஸ்கரை வெறுத்த கொல்கத்தா ரசிகர்கள்..!

காலங்காலமாக நியூசிலாந்து கறுப்புக்குதிரைதான்..! 

அப்போதிலிருந்து பாகிஸ்தான் முன்னேறாதது இதில்தான்!

 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close