வெளியிடப்பட்ட நேரம்: 12:36 (27/06/2017)

கடைசி தொடர்பு:13:07 (27/06/2017)

‘டபுள்விக்கெட் டோர்னமென்ட் நல்ல பயிற்சிக்களம்!’ - TNCA தலைமைப் பயிற்சியாளர் கருத்து!

முன்னாள் ரஞ்சி வீரர் கௌதம் நினைவு டபுள் விக்கெட் டோர்னமென்ட் கடந்த ஞாயற்றுக்கிழமையோடு நிறைவடைந்தது. பள்ளிகளுக்கு இடையே தனியாகவும், பர்ஸ்ட் டிவிஷன் பிளேயர்களுக்குத் தனியாகவும் நடந்த இந்த டோர்னமென்ட்டில் அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடந்தன. பள்ளிகளுக்கு இடையேயான தொடரின் அரை இறுதிப் போட்டியொன்றில் நெல்லை நாடார் பள்ளியும் டிஏவி கோபாலபுரம் பள்ளியும் மோதின. 

முதலில் பேட்டிங் செய்த நெல்லை நாடார் பள்ளி, நிர்ணயிக்கப்பட்ட ஆறு ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 20 ரன்களை எடுத்தது. டபுள் விக்கெட் டோர்னமென்ட்டைப் பொறுத்தவரையில் இரண்டே பேட்ஸ்மேன்கள்தான். விக்கெட் விழுந்தால் களத்தை விட்டு வெளியேறத் தேவையில்லை. ஆனால், மொத்த ரன்களில் ஒவ்வொரு முறை விக்கெட் விழும்போதும் ஐந்து ரன்கள் கழித்துக் கொள்ளப்படும் என்பது விதி. இந்த விதிகளின் படி நெல்லை நாடார் பள்ளியின் ஸ்கோர் வெறும் 10 மட்டுமே. இதையடுத்து களமிறங்கிய டிஏவி கோபாலபுரம், நிர்ணயிக்கப்பட்ட ஆறு ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்து வென்றது.

கௌதம் நினைவு டபுள் விக்கெட் டோர்னமென்ட்

மற்றோர் அரை இறுதிப் போட்டியில் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி அணியானது வித்யா மந்திர் பள்ளியுடன் மோதியது. முதலில் பேட்டிங் செய்த செட்டிநாடு வித்யாஷ்ரம் அணி ஆறு ஓவர்களில் 25 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து 11 ரன்கள் வெற்றி இலக்காக வித்யாமந்திர் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. வித்யாமந்திர் மாணவர்கள் கவனமுடன் ஆடி விக்கெட் இழப்பின்றி
13 ரன்கள் எடுத்து ஜெயித்தனர். 

இறுதிப் போட்டியில் டிஏவி கோபாலபுரம் அணி வித்யாமந்திர் அணியை எதிர்கொண்டது. ஆறு ஓவர்களில் 36 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்திருந்தது டிஏவி அணி. இதையடுத்து வித்யாமந்திர் அணிக்கு வெற்றி இலக்காக 31 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. சேஸிங்கில் வித்யாமந்திர் அணியானது 36 ரன்கள் குவித்தது. ஆனால், இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதையடுத்து 36 -10 = 26 ரன்கள் மட்டுமே எடுத்ததாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. டிஏவி அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று கோப்பையைக் கைப்பற்றியது.

கௌதம் நினைவு டபுள் விக்கெட் டோர்னமென்ட்

டிவிஷன் அணி : -

முதல் டிவிஷன் அணிகளுக்கு இடையேயான முதல் அரை இறுதியில் ஏஜிஎஸ் அணியுடன் ஆழ்வார்பேட்டை பி அணி மோதியது. ஏஜிஎஸ் அணியின் ஸ்கோர் 48/5 (48 -25 = 23). இதையடுத்து 24 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு ஆழ்வார்பேட்டை பி அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆழ்வார்பேட்டை அணியினர் ஆறு ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் குவித்தனர். சேஸிங்கில்
30 ரன்கள் எடுத்ததால் ஆழ்வார்பேட்டை பி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. 

மற்றோர் அரை இறுதியில் ஆழ்வார்பேட்டை ஏ  அணியும் குரோம்பெஸ்ட் அணியும் மோதின. ஆழ்வார்பேட்டை ஏ  அணி முதலில் பேட்டிங் செய்து வெளுத்துக்கட்டியது. ஐந்து விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் குவித்தது. இதையடுத்தது 53 ரன்கள் எடுத்தால் இறுதிப் போட்டியில் விளையாடலாம் என்ற கனவுடன் களமிறங்கியது குரோம்பெஸ்ட் அணி. ஆனால், ஆறு ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து ஆழ்வார்பேட்டை ஏ அணி இறுதியில் நுழைந்தது. 

இறுதிப் போட்டியில் ஆழ்வார்பேட்டை ஏ அணியும் பி அணியும் மோதின.முதலில் பேட்டிங் செய்த ஆழ்வார்பேட்டை ஏ அணியானது ஆறு ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் குவித்தது. இதையடுத்து 60 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடியது ஆழ்வார்பேட்டை பி அணி. அந்த அணி 49 ரன்கள் குவித்திருந்தாலும் ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதையடுத்தது ஆழ்வார்பேட்டை பி அணியின் ஸ்கோர் வெறும் 19 என்றானது. அபார வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது ஆழ்வார்பேட்டை ஏ அணி. 

கௌதம் நினைவு டபுள் விக்கெட் டோர்னமென்ட்

அரை இறுதியில் விளையாடிய அணிகள், ரன்னர் அப் வந்த அணிகள், கோப்பையை வென்ற அணிகள் ஆகியவற்றுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழக கிரிக்கெட் அசோஷியன் தலைமை பயிற்சியாளர் சுனில் சுப்பிரமணியம் வீரர்கள் விளையாடியதை நேரில் பார்த்து உற்சாகப்படுத்தியதோடு பரிசுகளையும் வழங்கினார். பயிற்சியாளர் சுனில் சுப்ரமணியத்திடம் பேசினேன்.

டபுள் விக்கெட் டோர்னமென்ட் விளையாடுவதில் என்ன பயன் ?

டி 20 கிரிக்கெட்டோ ஒருநாள் கிரிக்கெட்டோ  மிடில் ஓவர்கள் மிகவும் முக்கியம் டி20 பார்மெட்டில்  7 முதல் 14 வரையிலான எட்டு ஓவர்களும், ஒருநாள் பார்மெட்டில் 11 முதல் 40 வரையிலான 30 ஓவர்களும் மிகவும் முக்கியமானவை. இந்த ஓவர்களில் எந்த அணி சிறப்பாக விளையாடுகிறதோ அந்த அளவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். விக்கெட் போனால் போகட்டுமென மிகப்பெரிய ஷாட்களை தொடர்ச்சியாகவும் ஆட முடியாது, ஐயோ விக்கெட் போய்விடுமே என மிகவும் மெதுவாகவும் ஆடக்கூடாது. இதுபோன்ற சூழ்நிலைகளை சமாளிக்க இந்த டபுள் விக்கெட் டோர்னமென்ட் உதவுகிறது. 

விக்கெட் விழவும் கூடாது அதே சமயம் ரன்கள் எடுக்க வேண்டும் என்பது  மிகப்பெரிய சவால். இந்த டோர்னமென்ட்டில் பேட்டிங் பிடித்த அதே வீரர்கள்தான் பவுலிங்கும் செய்கிறார்கள். ஆகவே ஆல்ரவுண்டர்களின் முக்கியத்துவம் உணரப்படுகிறது. இனி வரும் காலங்களில் கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதற்கேற்ப வீரர்களை உருவாக்க இதுபோன்ற டோர்னமென்ட் உதவக்கூடும். 

தற்போதைய தமிழக கிரிக்கெட் அணி எப்படி இருக்கிறது? 

இப்போது நிறைய பிளேயர்கள் வந்துவிட்டார்கள். அணி மிகவும் நன்றாக இருக்கிறது. சீனியர்களோடு பல இளம் வீரர்களும் அணிக்கு வந்திருக்கிறார்கள். வேகப்பந்து, பீல்டிங் எனப் பல்வேறு துறையிலும் அணி மேம்பட்டிருக்கிறது. அவர்களின் உழைப்புக்கு கிடைத்த பரிசுதான் விஜய்ஹசாரே மற்றும் முரளிதியோடர் கோப்பைகள் என நினைக்கிறேன். 

ரஞ்சியில் ஏன் தமிழகத்தால் கடந்த 29 ஆண்டுகளாக சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை? 

வெற்றி  தோல்விகளுக்கு அப்பாற்பட்டு நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பதே முக்கியக் குறிக்கோள். அந்த வகையில் தமிழகம் தொடர்ச்சியாக நல்ல முறையில் கிரிக்கெட் ஆடி வருகிறது. பல முறை அரை இறுதி, இறுதிப் போட்டிகளில் விளையாடியிருக்கிறோம். தொடர்ச்சியாக மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படும்போது வெற்றிகள் தானாக வரும்.

பயிற்சியாளர் சுனில் சுப்ரமணியம்

இந்திய பிட்ச்கள் சுழற்பந்துக்கு சாதகமாகவே இருப்பது ஏன்? 

நீங்கள் சர்வதேச கிரிக்கெட்டை குறிப்பிடுவதாக இருந்தால் ஒன்றை நினைவுகொள்ளுங்கள். இந்தியாவில் கடைசி 13 டெஸ்ட் போட்டிகளிலும் நல்ல விக்கெட்டுகள் பயன்படுத்தப்பட்டன. எல்லாமே சுழற்பந்துக்கு மட்டுமே சாதகமானவை எனச் சொல்லமுடியாது. ஒவ்வொரு பிட்ச்சும் மற்றொரு விஷயத்தில் இருந்து வித்தியாசப்பட்டன. உள்நாட்டில் மேட்ச் நடக்கும்போது இங்கேயுள்ள வீரர்கள் எதில் சிறந்தவர்களாக இருக்கிரார்களோ அதற்கேற்றவாறு பிட்ச் அமைப்பது வழக்கம். இது எல்லா நாடுகளிலும் நடைமுறையில் உள்ளதுதான். 

ரஞ்சி போட்டிகளைப் பொறுத்தவரையில் விளையாடும் இரண்டு அணிகளுக்கு பொதுவாக வேறு ஏதாவொரு பிட்சில் மேட்ச் நடத்தினால் மட்டும் போதாது. எந்த ஊராக இருந்தாலும் அந்த இடத்திலுள்ள காலநிலையைப் பொறுத்து பிட்சின் தன்மை மாறுபடத்தான் செய்யும். என்னைப் பொறுத்தவரையில் எந்த பிட்ச் இருந்தாலும் பந்துகள் நன்றாக மேலே எழும்பும் வகையில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் வேகப்பந்து வீச்சாளரோ மிதவேக பந்து வீச்சாளரோ, சுழற்பந்து வீச்சாளரோ எல்லோருக்கும் விக்கெட் எடுக்க வாய்ப்பு கிடைக்கும். 

தமிழகத்திலிருந்து இப்போது நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் வர ஆரம்பித்திருக்கிறார்களே... என்ன மாறுதல் நிகழ்ந்தது? 

உண்மையாகவே திறமையான வீரர்கள் வர ஆரம்பித்திருக்கிறார்கள். தமிழ்நாடு கிரிக்கெட் அகாடமி  இந்தியாவில் மிகவும் பழமையானது. இங்கே இளம் வீரர்கள், அனுபவ வீரர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோர்களுக்கு இடையே நல்ல அறிவுப் பரிமாற்றம் (Knowledge Sharing) நிகழ்ந்து வருகிறது. இப்போது பல்வேறு பயிற்சி முகாம்கள் தொடர்ச்சியாக நடத்தப்படுகின்றன. வீரர்களுக்கு காயங்களிலிருந்து தப்பிக்கவும் வெளியேவரவும் நிறைய வசதிகள் செய்து தரப்படுகின்றன. இவையெல்லாமே வேகப்பந்து வீச்சாளர்கள் உட்பட எல்லோரும் மேம்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்த உதவுகின்றன என நினைக்கிறேன். 

டி.என்.பி.எல்  தொடரிலிருந்து தமிழக அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்களா? 

இப்போது நிறைய லோக்கல் பிளேயர்கள் மீதும் கவனம் குவிய ஆரம்பித்திருக்கிறது. டி20, ஒருநாள் போட்டி போன்ற ‘ஷார்ட் பார்மெட்’ கிரிக்கெட்டுக்கு தமிழக அணிக்கு  டிஎன்பிஎல்லிலிருந்து வீரர்கள் செல்ல வாய்ப்பிருக்கிறது. ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் வித்தியாசமானது. அதற்கு வேறு மாதிரியான மனநிலையும், பயிற்சியும் உழைப்பும் தேவை. டிஎன்பிஎல் நிச்சயம் தமிழகத்தில் இருந்து பல நல்ல வீரர்களை உலகுக்கு அடையாளம் காட்டும்.


டிரெண்டிங் @ விகடன்