வெளியிடப்பட்ட நேரம்: 18:41 (27/06/2017)

கடைசி தொடர்பு:18:41 (27/06/2017)

ஓய்வுபெறுகிறார் அதிவேக மன்னன் உசேன் போல்ட்... உருக்கமான பேட்டி!

ஒலிம்பிக் போட்டிகளில் 8 முறை தங்கம் வென்றுள்ள ஜமைக்காவைச் சேர்ந்த அதிவேக மன்னன் உசேன் போல்ட் வரும் ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தில் நடக்கும் '2017 உலக தடகள சாம்பியன்ஷிப்புக்குப்' பிறகு, ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார். 

இந்த அறிவிப்பை வெளியிட்ட உசேன் போல்ட், 'எனக்கு அமைந்தது ஒரு மிகச் சிறப்பான விளையாட்டு வாழ்க்கை. அதன் ஏற்றத் தாழ்வுகளை நான் சமமாக ஏற்றுக்கொள்கிறேன். இந்த வாழ்க்கையில் எனக்கு போதுமான அனுபவம் கிடைத்தது. அதில் வருத்தம், சந்தோஷம் என்று பல உணர்வுகளும் நினைந்திருந்தன. களத்தில் சிறப்பாக செயல்பட என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செவ்வனே செய்தேன். இப்போது அது ஒரு முடிவுக்கு வருகிறது. அதை நான் முழு மனதுடன் நெகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன்' என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.

எதிர்வரும் சாம்பியன்ஷிப் போட்டிதான் போல்ட் பங்கேற்கும் கடைசி சர்வதேச போட்டி என்னும் பட்சத்தில் என்ன சிறப்பான ப்ளான் வைத்திருக்கிறீர்கள் என்று பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு, 'உண்மையில் அதைப் பற்றி நான் இப்போது கவலைப்படவில்லை. களத்தில் எப்படி சிறப்பாகச் செயல்படுவது என்பதில் மட்டும்தான் எனது கவனம் இருக்கும். என்னைப் பொறுத்தவரை, பார்வையாளர்களை சந்தோஷப்படுத்த வேண்டும்' என்று கூறியுள்ளார்.