வெளியிடப்பட்ட நேரம்: 21:33 (27/06/2017)

கடைசி தொடர்பு:08:21 (28/06/2017)

இலங்கை வீரர் மலிங்காவுக்கு முற்றும் நெருக்கடி... முடிவுக்கு வருகிறதா கிரிக்கெட் வாழ்க்கை?

சில நாள்களுக்கு முன்னர் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தானிடம் படுதோல்வி அடைந்து லீக் சுற்றிலேயே வெளியேறியது. இதையடுத்து அந்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சர், 'இலங்கைக் கிரிக்கெட் வீரர்களின் உடல் தகுதி குறித்து சந்தேகம் உள்ளது' என்று சர்ச்சைக்குறிய வகையில் கருத்துக் கூறியிருந்தார். இதை மறுத்த இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா, 'இருக்கையில் அமர்ந்துகொண்டு இதைப் போன்று ஒரு விஷயத்தைப் பற்றி கருத்துக் கூறக்கூடாது' என்று பதிலடி கொடுத்தார்.

இதையடுத்துதான் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் மலிங்காவுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகக் கூறியுள்ளது. இது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம், 'கடந்த 19 மற்றும் 21-ம் தேதிகளில் மலிங்கா, வாரியம் விதித்துள்ள கட்டுப்பாட்டை மீறி கருத்துக் கூறியுள்ளார். எனவே, இது குறித்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.' என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதை அடுத்து, புதிய பயிற்சியாளர் நியமனம் செய்வது குறித்தும் விரைவில் முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.