டென்னிஸ் போட்டியில் உலகின் எட்டாம் நிலை வீரருக்கு அதிர்ச்சியளித்த தமிழக வீரர்! | Ramkumar ramanathan beats world no 8 in antalya open

வெளியிடப்பட்ட நேரம்: 10:46 (28/06/2017)

கடைசி தொடர்பு:11:50 (28/06/2017)

டென்னிஸ் போட்டியில் உலகின் எட்டாம் நிலை வீரருக்கு அதிர்ச்சியளித்த தமிழக வீரர்!

அன்டல்யா ஓப்பன் டென்னிஸ் போட்டியில், உலகின் எட்டாம் நிலை வீரரான டொமினிக் தீமை வென்று அதிர்ச்சியளித்தார் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன்.


துருக்கி நாட்டின் அன்டல்யா நகரில், அன்டல்யா ஓப்பன் டென்னிஸ் முதல் தொடர், ஜூன் 25  முதல் நடந்துவருகிறது. புல்தரை ஆடுகளத்தில் நடக்கும் ஏடிபி அந்தஸ்து பெற்ற இந்தத் தொடரில்,  தமிழக வீரர் ராம்குமார் ராமநாதன் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் எட்டாம் நிலை வீரரான டொமினிக் தீமை எதிர்கொண்டார். 222 -ம் இடத்தில் இருக்கும் ராம்குமார் ராமநாதனை, டொமினிக் எளிதில் வென்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அனைவருக்கும் ஆச்சர்யம் அளிக்கும் வகையில், 6-3, 6-2 என்ற நேர் செட்டுகளில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

இந்த வெற்றியைப் பெற, ராம்குமாருக்கு ஒரு மணிநேரத்துக்கும் குறைவான நேரமே தேவைப்பட்டது. இந்தத் தொடரில், முதல் நிலை வீரராக இருந்த டொமினிக், தகுதி சுற்றில் வெற்றிபெற்ற வீரரிடம் தோல்வியடைந்து வெளியேறினார். ராம்குமார், உலகின் டாப் 10 வீரரை எதிர்கொள்வது இதுவே முதல் முறை. காலியிறுதியில் சைப்ரஸ் நாட்டின் மார்க்கஸ் பாக்டாதிசை  எதிர்கொள்கிறார். ராம்குமாருக்கு கிரிக்கெட் வீரர் வீரேந்தர் ஷேவாக் உட்பட பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த ராம்குமார், 2014-ம் ஆண்டு சென்னை ஓப்பனில் இந்தியாவின் முதல் நிலை வீரரான சோம்தேவ் தேவ்வர்மனை வெற்றிகொண்டு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


[X] Close

[X] Close