கோலிக்குப் பாடம் புகட்ட பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த பொறியாளர்!

தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவி காலியாக உள்ளதால், பிசிசிஐ தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளது. இதையடுத்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சேவாக், ரவி சாஸ்திரி போன்றவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பித்து உள்ளனர். இந்நிலையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பொறியாளரான உபேந்திர நாத் பிரம்மச்சாரியும், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளேவுக்கும் இடையில் பல மாதங்களாக மோதல் போக்கு நிலவி வந்துள்ளது. இதையடுத்து கும்ப்ளே, சில நாள்களுக்கு முன்னர், 'எனக்கும் கேப்டன் கோலிக்கும் முரண்பாடு இருப்பதால் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன்' என்று அறிக்கை வெளியிட்டு பதவி விலகினார். இதையடுத்து பிசிசிஐ, 'தகுதியுள்ள நபர்கள் இந்திய அணியின் பயிற்சியாளராக விண்ணப்பிக்கலாம்' என்று கூறியது. இதற்குப் பலர் விண்ணப்பித்தாலும், முன்னாள் கேப்டன் சேவாக் மற்றும் ரவி சாஸ்திரி விண்ணப்பித்தது அனைவரையும் புருவம் உயர்த்த வைத்தது. இதையொட்டித்தான் உபேந்திர நாத் பிரம்மச்சாரி, பிசிசிஐ இணையதளத்தில் இருந்த மின்னஞ்சல் முகவரி மூலம் பயிற்சியாளர் பதவிக்கு சேர விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் அனுப்பியுள்ளார். 

அவரது விண்ணப்பத்தில், 'அனில் கும்ப்ளே போன்ற ஒரு மகத்தான வீரர் தனது பதவியை ராஜினாமா செய்தவுடன், நான் பயிற்சியாளராக விண்ணப்பிக்கலாம் என்று எண்ணினேன். பிசிசிஐ, இன்னொரு மகத்தான கிரிக்கெட் வீரரை அடுத்த கோச்சாக தேர்வு செய்தால், அவரையும் கோலி அவமதிப்பார். நான் பயிற்சியாளராகத் தேர்வு செய்யப்பட்டால் கோலியின் திமிர்பிடித்த மனப்பாங்கைத் திருத்தி வழிக்குக் கொண்டு வருவதற்கான பாடம் புகட்டுவேன். பின்னர், ஒரு மகத்தான வீரரைப் பயிற்சியாளராக நியமிக்கலாம்' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயம் இணையத்தில் படு வைரலாகி வருகிறது. 
 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!