வெற்றியைத் தொடருமா இந்திய மகளிர் அணி- உலகக் கோப்பையில் இன்று அடுத்த மோதல்

ஐசிசி நடத்தும் பெண்களுக்கான உலகக் கோப்பைத் தொடரில் இன்று, இந்திய மகளிர்அணி, மேற்கு இந்திய மகளிர் அணியை எதிர்கொள்கிறது.


நான்கு வருடங்களுக்கு ஒருமுறை பெண்களுக்கான உலகக் கோப்பைத் தொடர் நடத்தப்பட்டுவருகிறது. இந்த முறை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக் கோப்பைத் தொடர் நடைபெறுகின்றது. இன்று நடக்கும் ஏழாவது போட்டியில், மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணி, மேற்கிந்தியத்தீவுகள் அணியை எதிர்கொள்கிறது.
தனது முதல் போட்டியில், உள்ளூர் அணியான இங்கிலாந்தை வீழ்த்தி நம்பிக்கையுடன் இரண்டாம் போட்டியை விளையாடுகிறது,  இந்திய அணி. இந்தியாவின் தொடக்க வீராங்கனையான மந்தானா, முதல் போட்டியில் அதிரடியாக ஆடி 90 ரன்கள் சேர்ந்தார். தான் தொடர்ந்து அதிரடியாக ஆடுவதையே விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். அவரது வருகை, அணியின் முன் வரிசைக்கு நிச்சயம் கூடுதல் பலம் தரும். கேப்டன் மிதாலி ராஜ், கடந்த போட்டியில் தொடர்ந்து 7-வது அரை சதம் அடித்து உலக சாதனை படைத்தார். அதே உத்வேகத்தை இந்திய அணி தொடர்ந்தால், மிகப் பெரிய ஸ்கோர் அடிப்பதில் சிரமம் இருக்காது. பந்துவீச்சு மற்றும் பில்டிங்கில் அதிக கவனம் தேவைப்படுகிறது.
மேற்கிந்தியத்தீவுகள் அணியும் இந்திய அணிக்கு சளைத்தது இல்லை. கேப்டன் டெய்லர், அதிரடியாக ஆடக்கூடியவர். முதல் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததால், அந்த அணியும் வெற்றிக்காக கடுமையாகப் போராடும். 
கடந்த வருடம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மேற்கிந்தியத்தீவுகள் அணி, ஒருநாள் தொடரை இழந்தாலும் டி-ட்வென்டி தொடரை முழுமையாகக் கைப்பற்றி அதிர்ச்சியளித்தது. மகளிருக்கான தர வரிசையிலும் இந்திய அணி மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணி முறையே 4 மற்றும் 5 இடத்தில் உள்ளன. 
தர வரிசையில் அடுத்த இடத்தில் உள்ள அணிகள் மோதுவதால், ஆட்டத்தில் அனல் பறக்கும்.  இந்திய நேரப்படி, இந்தப் போட்டி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!