ஒருநாள் கிரிக்கெட்டில் அஷ்வின், ஜடேஜாவுக்கு மாற்று தேட வேண்டுமா? #StatisticAnalysis | Is the right time change Ashwin- Jadeja spin combo in the Indian team?

வெளியிடப்பட்ட நேரம்: 12:02 (29/06/2017)

கடைசி தொடர்பு:12:18 (29/06/2017)

ஒருநாள் கிரிக்கெட்டில் அஷ்வின், ஜடேஜாவுக்கு மாற்று தேட வேண்டுமா? #StatisticAnalysis

டெஸ்ட் தரவரிசையில் உலகின் நம்பர் 1 பவுலர் யார் தெரியுமா? ரவீந்திர ஜடேஜா. இரண்டாவது இடம் நம்ம சென்னைப் பையன் அஷ்வின் ரவிச்சந்திரனுக்கு. இந்த இருவருமே இந்தியாவுக்குப்  பெருமை சேர்த்தவர்கள். ஆனால் இந்த இரண்டு பவுலர்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் எப்படி செயல்பட்டு வந்திருக்கிறார்கள் என்பதை திரும்பிப் பார்க்கும் தருணம் வந்துவிட்டது.  ஏனெனில் இப்போது ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் அஷ்வினுக்கு முப்பதாவது இடம். ரவீந்திர ஜடேஜாவுக்கு முப்பத்தி இரண்டாவது இடம். இந்திய பிட்ச்கள் சுழற்பந்தின் சொர்க்கபுரி. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து எக்கச்சக்கத்  தரமான சுழற்பந்து வீரர்கள் வந்துக் கொண்டேயிருக்கிறார்கள். அப்படியானால் நமது அணிக்கு  ஒருநாள் கிரிக்கெட்டில் பிரதான ஆயுதமாக  சுழற்பந்து தானே இருக்க வேண்டும்? ஆனால் இப்போதைய நிலைமை கவலைக்கிடமாகவே இருக்கிறது. வேகப்பந்துத் துறை பல மடங்கு வலுவாகிக் கொண்டே செல்கிறது. சுழல் துறையோ சுணங்கிக் கிடக்கிறது. கொஞ்சம் வெளிப்படையாகவே நமது சுழற்பந்துத்  துறையைப்  பற்றிப் பேசுவோம்.

அஷ்வினும் ஜடேஜாவும் இருபது ஓவர்களை ஒட்டிவிடுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள்; பயன்படுகிறார்கள். வலுவான அணியைக்  கட்டமைக்க விரும்பும் விராட் கோலிக்கு இது மிகப்பெரிய சறுக்கல். 2013 சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ஜடேஜா சொல்லிக் கொள்ளுமளவுக்கு ஒருநாள் போட்டியில் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் அஷ்வினின் நிலையும் இதுதான். தென் ஆப்பிரிக்காவுக்கு இம்ரான் தாகீரும், இங்கிலாந்துக்கு அடில் ரஷீதும் மேட்ச் வின்னராகத்  திகழ்கிறார்கள். அதேப் போல பாகிஸ்தானுக்கு இமாத் வாசிம், ஆஸ்திரேலியாவுக்கு ஜாம்பா, நியூசிலாந்துக்கு சான்டனர் ஆகியோரும் சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள். ஆனால் இந்தியாவுக்கு அஷ்வினும், ஜடேஜாவும் மேட்ச் வின்னிங் பவுலராக இல்லை. இவர்கள் இருவரும் நான்காண்டுகளுக்கு முன்னர் வரை அபாயகரமானவர்களாக திகழ்ந்தார்கள். ஆனால் இப்போது அனைத்து அணியினரும் இந்த இருவரின் பந்துகளை எதிர்கொள்ள பழகிவிட்டார்கள். சீனியர்கள் என்பதாலேயே இந்த  இருவரையும் அணியில் வைத்திருக்கிறார்கள், இவர்களை நீக்கிவிட்டு இளம் பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு தரவேண்டும் என பலரும் இணையங்களில், மீம்ஸ்களில் கோரிக்கை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை சாதித்தது என்ன என இனி புள்ளிவிவரங்களோடு பார்ப்போம். 

அஷ்வின் மற்றும் ஜடேஜா

எகானமி ரேட் :- 

பவுலர்கள் ஒரு ஓவருக்கு சராசரியாக எவ்வளவு ரன்களை விட்டுத்தருகிறார்கள் என்பதை குறிப்பது தான் எகானமி ரேட். ஒரு நல்ல பவுலருக்கு அழகே குறைவான எகானமி வைத்திருப்பது தான். மேற்கண்ட  படத்தில் இந்த இருவரின் பெர்பார்மென்ஸ் குறித்து விரிவாகப் பார்க்க முடியும். 2009லேயே இந்திய அணிக்குள் நுழைந்து விட்டார் ஜடேஜா. அவர் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக இந்திய அணியில் இருக்கிறார். ஆரம்ப  காலகட்டங்களில் இருந்து இப்போது வரை சராசரியாக ஐந்து ரன்கள் என்ற அளவிலேயே விட்டுத்தந்திருக்கிறார். 2013 ஆம் ஆண்டு மட்டும் மிகவும் சிக்கனமாக வீசியிருக்கிறார் என்பதை, படத்தை நன்றாக கவனித்தால் புரியும். அதன் பின்னர் ஒவ்வோர் ஆண்டும் படிப்படியாக இவரது எகானமி ரேட் ஏறியிருக்கிறது. எனினும் மிக மோசமான பந்துவீச்சை  ஜடேஜா வெளிப்படுத்தவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். 

அஷ்வின் ரவிச்சந்திரன் ஐந்து ரன்களுக்கும் குறைவாகவே ஆரம்ப காலங்களில் விட்டுத்தந்தார். 2015 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பைக்குப் பிறகு அஷ்வின் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தத் தொடங்கினார். அவரது பந்துகளில் எளிதாக சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாசத் தொடங்கினர் எதிரணி பேட்ஸ்மேன்கள். ஒரே ஆண்டில் அவரது எகானமி ரேட் விர்ரென எகிறியது. இந்த ஆண்டும் இதுவரை சராசரியாக ஓவருக்கு ஆறு ரன்கள் மேல் விட்டுத்தந்திருக்கிறார் அஷ்வின்.  

அஷ்வின் Vs ஜடேஜா

பவுலிங் சராசரி : -

ஒரு பவுலர் எத்தனை பந்துகளுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்துகிறார் என்பதை குறிப்பதே பவுலிங் சராசரி. எகானமி ரேட் போலவே பவுலிங் சராசரியும் குறைவாக இருப்பதே ஒரு நல்ல பவுலருக்கு பெருமை.  ஜடேஜா ஏன் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர் என்பதை மேற்கண்ட படத்தைப் பார்த்தால் நன்றாக தெரியும். சிகப்பு நிற கோடு மேலும் கீழுமாக  தடாரென உயர்வதும் சரிவதுமாக இருப்பதை கவனியுங்கள். 2009-ல் 14 போட்டிகள் ஆடிய ஜடேஜா 10 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார். அந்த ஆண்டு அவர் வீசிய ஒவ்வொரு 50.59 பந்துகளுக்கும் ஒரு விக்கெட் கிடைத்தது. அதாவது அவர் 7.3 ஓவர் பந்து வீசினால் ஒரு விக்கெட் விழுந்தது. 

2010-ம் ஆண்டில் 38.89 பந்துகளுக்கு (அதாவது 6.3 ஓவர்களுக்கு) ஒரு விக்கெட் எடுத்தார். அந்த ஆண்டு 21 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். அடுத்த ஆண்டு அற்புதமாக பந்துவீசினார் ஜடேஜா. 2011-ல் 13 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளைக்  கைப்பற்றினார். அவர் வீசிய 23.12 பந்துகளுக்கு (3.5 ஓவர்களுக்கு) ஒரு விக்கெட் விழுந்தது. ஒரே ஆண்டில் சூப்பர் பவுலராக உயர்ந்த ஜடேஜா  மறு ஆண்டே சொதப்பித் தள்ளினார். 2012-ல் பத்து  போட்டிகளில் பந்து வீசி வெறும் நான்கு விக்கெட்டுகளைத்தான் கைப்பற்றினார். 2012-ல் அவரது பவுலிங் சராசரி 97.50. அதாவது 15.1 ஓவர்கள் வீசினால்தான் ஒரு விக்கெட்டாவது வீழ்த்த முடிந்தது என்பதே பொருள். 

2011ல் அபாரமாக பந்து வீசியவர், 2012ல் சொதப்பினார். மீண்டும் 2013ல் செம பார்முக்கு வந்தார். 34 ஒருநாள் போட்டிகளில் 52 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜாவின் கெரியரில் இது தான் சிறந்த ஆண்டு எனச் சொல்லலாம். ஜடேஜாவின் அட்டகாசமான பெர்பார்மென்ஸ் இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல உதவியது. 2013-ல் 25.40 பந்துகளுக்கு (4.1 ஓவருக்கு) ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

 2014-ம் ஆண்டில் 17 போட்டிகளில் 25 விக்கெட்டுகளையும், 2015-ம் ஆண்டில் 12 போட்டிகளில் 10 விக்கெட்டையும், இந்த ஆண்டு எட்டு போட்டிகளில் எட்டு விக்கெட்டுகளையும் எடுத்திருக்கிறார்.  கடைசி மூன்று ஆண்டுகளில் ஜடேஜாவின் சராசரி ஐம்பதுக்கு மேல் இருக்கிறது. 

ஜடேஜாவோடு ஒப்பிடும்போது ஆரம்ப காலகட்டங்களில் அஷ்வின் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்திருக்கிறார் என்பதை படத்தில் உள்ள ஊதாநிறக் கோட்டை கவனித்தால் புரியும். 2010 - 2015 வரையில் அஷ்வினின் சராசரி நாற்பதைத் தாண்டவில்லை. 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டில் அஷ்வினுக்கு பெரும் சரிவு ஏற்பட்டிருக்கிறது என்பதை படத்தில் காணலாம் (அதாவது சராசரி விர்ரென அதிகரித்திருக்கிறது, 10 ஓவர்களுக்கு ஒரு விக்கெட் என்பது கூட இல்லை). கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 போட்டிகளில் விளையாடி வெறும் ஏழு விக்கெட்டுகளை மட்டும் தான் கைப்பற்றியிருக்கிறார் அஷ்வின். 

அயல்மண்ணில் யார் கெத்து? 

சுழற்பந்துக்கு சாதகமற்ற தட்டையான மற்றும் பேட்டிங் பிட்ச்களிலும், வேகப்பந்துக்கு சாதகமான, ஸ்விங்கிற்கு சாதகமான ஆடுகளங்களில் அஷ்வினும் ஜடேஜாவும் எப்படிச் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிய இந்த படத்தை கவனிக்கவும். ஒவ்வொரு மண்ணிலும் இவர்களது எகானமி ரேட் எவ்வளவு என்பதை, படத்தில் பார்க்கலாம். 

அஷ்வின் Vs ஜடேஜா

அஷ்வினைப் பொறுத்தவரையில் அயல்மண்ணில் ஜடேஜாவை விட சிக்கனமாக பந்துவீசியிருக்கிறார் என்பது தெளிவு. தென் ஆப்ரிக்காவில் மட்டும்தான் ஜடேஜாவை விட அதிக ரன்கள் விட்டுக்கொடுத்திருக்கிறார். அஷ்வின் எந்த மண்ணில் எவ்வளவு விக்கெட் எடுத்திருக்கிறார் அவரது சராசரி என்ன என்பதை கீழே உள்ள படத்தில் பாருங்கள். 

அஷ்வின் Vs ஜடேஜா

ஆஸ்திரேலிய மண் பெரும்பாலும் பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருக்கும். இங்கே அஷ்வின் ஓரளவு சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார். ஆனால் ஜடேஜாவின் பந்துவீச்சு படு மோசம். இங்கிலாந்து மண்ணில் அஷ்வின் சுமாராக வீசியிருக்கிறார். ஜடேஜா அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.

அஷ்வின் Vs ஜடேஜா

தென் ஆப்ரிக்க மண்ணில் இருவருமே மோசம்தான். எனினும் மூன்று போட்டிகள் மட்டுமே விளையாடியிருக்கிறார்கள்  என்பதால்  இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. சிறிய பிட்ச்கள் அதிகம் நிறைந்துள்ள  நியூசிலாந்தில்  மிக சுமாரான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஸ்லோ பிட்ச்கள் அதிகம் இருக்கக்கூடிய வெஸ்ட் இண்டீஸ் மண்ணிலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெர்பார்மென்ஸ் இல்லை. வங்கதேசத்தில் அஷ்வின் மிகச்சிறப்பாக பந்து வீசியிருக்கிறார். ஆனால் ஜடேஜா வங்கதேசத்திலும் சொதப்பல் பெர்பார்மென்ஸைத் தான் வெளிப்படுத்தியிருக்கிறார், 

அஷ்வின் Vs ஜடேஜா

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால்  அஷ்வின் ஜடேஜாவை விட சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார். முக்கியமான தருணங்களில் பல விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். வலுவான பேட்ஸ்மேன்களுக்கு சவால்தரும் வகையிலான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருக்கிறார். எனினும் மேட்ச் வின்னிங் பெர்பார்மென்ஸ் மிகக் குறைவு தான்.  இங்கிலாந்தில் நடந்த 2013 சாம்பியன்ஸ் டிராபியைத் தவிர்த்து மிகமோசமாகவே அயல்மண்ணில் பந்துவீசியிருக்கிறார் ஜடேஜா. 

கடந்த மூன்று ஆண்டுகளில் பேட்டிங்கில் என்ன சாதித்தார்கள்? 

2015 ஜனவரி முதல் வெஸ்ட் இண்டீஸ் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி வரை கணக்கில் எடுத்துக்கொள்வோம். அஷ்வின், ஜடேஜா இருவருமே டெஸ்ட் போட்டிகளில் அசத்தி வருகிறார்கள். குறிப்பாக அஷ்வின் பல நேரங்களில் இந்திய அணியைத் தாங்கிப் பிடித்திருக்கிறார். அயல்மண்ணில்கூட சதங்களை விளாசியிருக்கிறார். இதனால் ஒருநாள் போட்டிகளில் பிளேயிங் லெவனில் அஷ்வின் இடம்பெறும் போதெல்லாம் ஏழாவது எட்டாவது விக்கெட்டில் களமிறங்கும் அஷ்வின் கூட நன்றாக பேட்டிங் செய்யக்கூடியவர் என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் அஷ்வினின் பேட்டிங் பெர்பார்மென்ஸ் படுமோசம். 23 போட்டிகளில் 12 முறை பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இதில் வெறும் 66 ரன்களைத்தான் சேர்த்திருக்கிறார். சராசரி, ஸ்ட்ரைக்ரேட் ஆகியவையும் அதளபாதாளத்தில் இருக்கின்றன.  2015 உலககோப்பை அரை இறுதியிலும் சரி, சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியிலும் சரி பேட்டிங்கில் அஷ்வினுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தது. ஓவர்கள் மீதமிருந்தும் 20 -30 ரன்களைக் கூட எடுக்க முடியாமல் அவுட் ஆனார் அஷ்வின். 

அஷ்வின் Vs ஜடேஜா

பவுலிங் ஆல்ரவுண்டர் என்ற அடிப்படையிலேயே ஜடேஜாவுக்கு அணியில் இடம் தரப்படுகின்றது. பவுலிங்தான் சுமாராக இருக்கிறது என்று பார்த்தால் பேட்டிங்கிலும் மிகசுமாராகவே செயல்பட்டிருக்கிறார். ஓரிரு போட்டிகளில் சிக்ஸர்கள் விளாசியதைத் தவிர அணிக்கு பக்கபலமான ஒரு ஆல்ரவுண்டராக திகழவில்லை. எனினும் அஷ்வினுடன் ஒப்பிடும்போது ஜடேஜா பேட்டிங்கில் நன்றாகவே செயல்பட்டிருக்கிறார். டி20 போட்டிகளின் எழுச்சிக்கு பிறகு ஆல்ரவுண்டர்களுக்கான மவுசு பல மடங்கு அதிகரித்திருக்கிறது.  அனைத்து அணிகளுமே ஆல்ரவுண்டர்கள் மீது கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றன. ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்டர் என்பதன் அடிப்படையிலேயே அணியில் அசைக்கமுடியாத இடத்தை பிடிக்கத் தொடங்கியிருக்கிறார். 

சுழற்பந்துக்கு சாதகமற்ற பிட்ச்களில் அஷ்வினின் கடுமையாக உழைக்கிறார். ஆனால் அவருக்கு பந்துகள் எதிர்ப்பார்த்த அளவுக்குத் திரும்புவதில்லை. இதனால் விக்கெட்டுகள் கிடைப்பதில்லை. ஜடேஜாவுக்கு பந்துகள்  திரும்புவதேயில்லை. தனது லைனில் சரியாக வீசி ரன்களைக் கட்டுப்படுத்துவதை மட்டுமே ஜடேஜாவால் செய்யமுடிகிறது. ஒருவேளை பேட்டிங் பிட்ச்சாக அமைந்துவிட்டால் ஜடேஜாவின் பந்துகள் சிக்ஸருக்கு பறக்கின்றன. 

இதுவரை ஒருநாள் போட்டிகளில் மூன்று மேன் ஆப் தி மேட்ச் விருது மட்டுமே வென்றிருக்கிறார் அஷ்வின். கடைசியாக 2015 மார்ச்சில் நடந்த  உலககோப்பையில்  ஐக்கிய அரபு நாடுக்கு எதிரான போட்டியில்  மேன் ஆப் தி மேட்ச் விருது ஜெயித்தார். ஜடேஜா ஒன்பது முறை ஒருநாள் போட்டிகளில் ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார். அவர் கடைசியாக 2014 மார்ச்சில் ஆப்கானிஸ்தானுக்கு  எதிரேயான போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்றார். மூன்று ஆண்டுகள் தொடர்ந்துச்  சொதப்புவது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

அஷ்வினுக்கு இப்போது சரிவர விக்கெட்டுகள்  கிடைப்பதில்லை, ரன்களையும் வாரி வழங்குகிறார். பீல்டிங்கிலும் ஒழுங்காக கேட்ச் பிடிப்பதில்லை. பேட்டிங்கிலும் சொதப்புகிறார். அஷ்வினுக்கு இப்போது 30 வயது. இப்படித் தொடர்ந்து சொதப்பிக் கொண்டிருந்தால் 2019 உலக கோப்பைகள் மட்டுமல்ல, ஒருநாள் பார்மெட்டிலேயே அவருக்கு இந்திய அணியில் இடம் கேள்விக்குறியாகிவிடும். 

அஷ்வின்

ஜடேஜா பேட்டிங்கில் சுமார், பவுலிங்கிலும் சுமார், பெரிய அளவில் விக்கெட் வேட்டை நடத்துவதில்லை. ஆனால் பீல்டிங்கில் கில்லியாக இருக்கிறார். ஜடேஜா அளவுக்கு ரன் அவுட் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் திறமையான பீல்டர்கள் இந்திய அணியிலேயே இல்லை எனச் சொல்லலாம். ஜடேஜாவுக்கு இப்போது வயது 28 தான். இந்த உலக கோப்பை மட்டுமல்ல 2023-ல் நடக்கும் உலக கோப்பையில் கூட ஜடேஜாவால் விளையாட முடியும். ஆனால் அதற்கு முன்னதாக  தட்டையான பிட்ச்களில் பந்துகளை திருப்பவும், பேட்டிங்கில் ஓரளவு ரன்களை குவிக்கும் திறமையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே அணியில் இடம். இல்லையெனில், க்ரூனால் பாண்டியா முதல் பல்வேறு வீரர்கள் வரிசையில் நிற்கிறார்கள் அவர்கள் ஜடேஜாவின் இடத்தை நிரப்பக்கூடும். 

அனைத்து அணிகளிலுமே  விரல்களை பயன்படுத்தி பந்தை சுழலச் செய்யும் சுழற்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து திணறியே வருகிறார்கள். மணிக்கட்டை பயன்படுத்தி  பந்தை சுழலச் செய்யும் பவுலர்களுக்கு மட்டுமே தட்டையான பிட்ச்களில் விக்கெட் கிடைக்கிறது. இந்திய அணியும் தனது திட்டங்களில் மாற்றத்தை யோசிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இந்திய அணியில் அஷ்வின், ஜடேஜா இருவரும் சொதப்பி வரும் நிலையில் இரண்டு சுழற்பந்து வீரர்கள், மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் என்ற திட்டத்திலும் மாற்றம் செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது. அஷ்வினும், ஜடேஜாவும் பவுலிங்கில் சுமார், பேட்டிங் படுமோசம் என்ற நிலை தொடரும்போது மற்ற வீரர்களுக்கு இயல்பாகவே அழுத்தம் கூடிவிடுகிறது. ஒரு சுழற்பந்து வீரருக்கு பதில் வேகப்பந்து வீரரையோ அல்லது சுழற்பந்து வீசக்கூடிய அதே சமயம் பேட்டிங்கிலும் வெளுக்கக்கூடிய திறமையான ஆல்ரவுண்டரையோ சேர்க்கலாம். 

 ஜடேஜா

அஷ்வின், ஜடேஜா  இருவருக்கும் சோதனை காலகட்டங்கள் இனிமேல் ஆரம்பிக்கவுள்ளன. 2015 மார்ச்சுக்கு பிறகு பெரிய அணிகளுக்கு எதிராக அவர்களின் சொந்தமண்ணில் இந்திய அணி டெஸ்ட் ஆடவில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்தித் தான் அஷ்வினும் ஜடேஜாவும்  அடுத்தடுத்து  டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ‘நம்பர் 1’ இடத்தைப் பிடித்தார்கள். இனிவரும் காலங்களில் 2019 உலககோப்பை வரை இந்தியா தொடர்ச்சியாக அயல் மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக அவர்களின் சொந்த மண்ணில் அற்புதமாக பந்துவீசி நம்பர் 1 மற்றும் நம்பர் 2 இடங்களை தக்கவைப்பது இருவருக்கும் பெருஞ்சவால். இந்த சவாலோடு ஒருநாள் பார்மெட்டில் அணியில் தங்களது இடத்தைத் தக்கவைக்க வேண்டிய நிர்பந்தமும் இருக்கிறது. இருவரும் ஜெயிக்கிறார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். 

அஷ்வினுக்கும் ஜடேஜாவுக்கும் மாற்று தேட வேண்டிய தருணம் உடனடியாக இல்லை என்றாலும், அவர்கள் இருவரின் இடத்தையும் நிரப்பக் கூடிய பல்வேறு பவுலர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். அந்த பவுலர்கள் யார் யார் என்பது குறித்து இன்னொரு கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.  


டிரெண்டிங் @ விகடன்