வெளியிடப்பட்ட நேரம்: 16:33 (29/06/2017)

கடைசி தொடர்பு:17:15 (29/06/2017)

இந்தியக் கிரிக்கெட் அணியின் பௌலிங் பயிற்சியாளராக வெங்கடேஷ் பிரசாத் விருப்பம்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத், அணியின் பௌலிங் பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்துள்ளார். 

வெங்கடேஷ் பிரசாத்

அணியின் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே, கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட சச்சரவு காரணமாகத் திடீரென விலகினார். இதையடுத்து, இந்திய அணிக்குத் தற்சமயம் தலைமைப் பயிற்சியாளர் இல்லாத நிலை நீடித்து வருகிறது. பிசிசிஐ, தகுதியுடைய நபர்கள் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது. இதையொட்டித்தான், முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் மற்றும் ரவி சாஸ்திரி உள்ளிட்டவர்கள் பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், வெங்கடேஷ் பிரசாத்தும் பௌலிங் கோச்சாக விருப்பம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர், 'நான் தலைமை பயிற்சியாளராக விண்ணப்பிக்கவில்லை. அதற்கு விண்ணப்பிக்கும் எண்ணமும் எனக்கில்லை. ஆனால், துணை கோச்சாகவோ பௌலிங் கோச்சாகவோ இந்திய அணியில் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. பயிற்சியாளர்களைத் தேர்வு செய்யும் கமிட்டியில் இருப்பவர்கள் நான் பௌலிங் பயிற்சியாளராகத் தகுதி படைத்தவன் என்று நினைத்தால், மிக மகிழ்ச்சியுடன் சேவையாற்றுவேன்' என்று கூறியுள்ளார்.

வெங்கடேஷ் பிரசாத், 2007-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை இந்திய பௌலிங் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.