வெளியிடப்பட்ட நேரம்: 20:59 (29/06/2017)

கடைசி தொடர்பு:07:59 (30/06/2017)

’கர்ப்பிணி’ செரினா வில்லியம்ஸின் படம் கிளப்பும் விவாதம்! #CelebrateMotherhood

செரினா

சில மாதங்களுக்கு முன்பு பிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் கர்ப்பமாக இருப்பதாக ஊடகங்கள் பரபரப்பாக பேசியது. தொடர்ந்து, தனது வலைத்தளப் பக்கத்தில், தன் கர்ப்பம் பற்றி அதிகாரபூர்வமாகத் தெரிவித்தார் செரினா. தற்போது, ஆறு மாத கர்ப்பிணியாக இருக்கும் அவர், ‘வானிட்டி ஃபார்’ என்ற சர்வதேசப் பத்திரிகைக்கு ஆடைகளின்றி போஸ் கொடுத்திருக்கிறார். இது, வைரலாகி வருகிறது.

மேலும், அவரின் காதல் வாழ்க்கை பற்றி, கர்ப்பமானது தெரிந்தபோது முதலில் அதிர்ச்சி அடைந்தது, பிறகு தாய்மையை நேசிப்பது எனப் பல விஷயங்களை அந்தப் பத்திரிகைப் பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார். தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், இந்த அட்டைப் படத்தைப் பகிர்ந்து கொண்டதுடன், ‘எனக்கு ஆண் குழந்தை பிறக்குமா பெண் குழந்தை பிறக்குமா?' என்று ரசிகர்களிடம் உற்சாகமாகக் கேட்டிருக்கிறார்.

வெளிநாட்டு பிரபலங்கள், கர்ப்பக் காலத்தில் இதுபோன்று போஸ் கொடுப்பது புதிதல்ல. இதற்கு முன்பு, அமெரிக்கப் பாடகியும் நடிகையுமான ஜெசிக்கா சிம்ப்சன், ஆஸ்திரேலியா மாடல் அழகி மிராண்டா கெர், அமெரிக்காவின் பிரபலப் பாடகிகள் மரியா கரே , ப்ரிட்னி ஸ்பீயரஸ் மற்றும் அமெரிக்க நடிகை டெமி மோர் போன்றோர் ஆடைகளின்றி போஸ் கொடுத்திருக்கிறார்கள். அந்த வரிசையில், செரினாவும் இணைந்திருக்கிறார்.

செரினாவின் காதலர், ரெட்டிட் (Reddit) என்ற பிரபல தொழில்நுட்ப நிறுவனத்தின் துணை நிறுவனரான அலெக்சிஸ் ஒஹனியன் (Alexis Ohanian). இவரும் செரினா வில்லியம்ஸூம் 2015-ம் ஆண்டு முதன்முதலில் சந்தித்துக்கொண்டனர். இருவரும் இத்தாலியில் உள்ள கவாலிரி (cavalieri) ஹோட்டலில் தங்கினர். கடந்த டிசம்பர் மாதம், இதே ஹோட்டலில்தான் செரினா வில்லியம்ஸிடம்  தனது காதலைச் சொல்லியிருக்கிறார் ஒஹனியன். இதுபற்றி செரினா, “காதலைச் சொல்லத்தான் அவர் என்னை சந்திக்கப்போகிறார் என்று முன்பே தெரிந்துகொண்டுவிட்டேன்” என்று வெட்கத்துடன் தெரிவித்திருக்கிறார்.  

செரினாசெரினா பற்றி ஒஹனியன் பேசுகையில், “செரினாவுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும், என்னை நானே மேம்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். அவருடைய பண்பும் திடமும் அப்படியானது” என்று நெகிழ்ந்துள்ளார்.  தொழில்நுட்பத்தில் கில்லியான அவர், தனது ரெட்டிட் பற்றி செரினாவிடம் கூறியபோது, செரினா அதைப்பற்றி தெரிந்ததுபோல நடித்தாராம். உண்மையில், தனக்குத் தொழில்நுட்பம் பற்றி பெரிதாகத் தெரியாது என்கிறார் செரினா. அதேபோல, டென்னிஸ் போட்டிகளைத் தொலைக்காட்சியில்கூட ஒஹனியன் பார்த்ததில்லையாம். செரினாவுடன் காதலான பின்பு, டென்னிஸ் போட்டிகளைப்  பார்க்கத் தொடங்கியிருக்கிறார். 

ஐனவரி மாதம், ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டபோதுதான் செரினாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. அவரின் தோழி ஜெஸ்சிகா, 'ஒருவேளை நீ கர்ப்பமாக இருக்கலாம். எதற்கும் டெஸ்ட் எடுத்துப் பார்' என்று சொல்லியிருக்கிறார். 

ஆஸ்திரேலிய நிறுவன விளம்பரத்தில் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் கர்ப்பப் பரிசோதனை செய்துகொண்டார் செரினா. பாஸிட்டிவ் ரிசல்ட் வந்ததும் அதிர்ந்துபோனார். “ஒ மை காட். நான் ஆஸ்திரேலிய ஓப்பன் விளையாட வேண்டுமே. இந்த வருடம் விம்பிள்டன் விளையாடவும் திட்டமிட்டிருந்தேன்’ என்று கூறியிருக்கிறார். பிறகு, கர்ப்பத்தை உறுதிசெய்ய, அடுத்தடுத்து ஆறு முறை பரிசோதனை செய்துகொண்டாராம். ஆனால், இப்போது தாய்மையை முழுமையாக ரசித்துவருகிறார் செரினா. குழந்தை பிறந்த பிறகுதான் திருமணமாம்.

மேலும், டென்னிஸ் போட்டிகளிலிருந்து செரினா தற்காலிமாக விலகியிருக்கிறார். இதற்கிடையே, சமீபத்தில் முன்னாள்  டென்னிஸ் வீரரான ஜான் மெக்கென்ரோ, செரினாவைப் பற்றி கூறியது சர்ச்சைக்குள்ளானது. “செரினா  பெண்கள் பிரிவில் சிறந்த  டென்னிஸ் வீராங்கனைதான். ஆனால், அவர் ஆடவர் பிரிவில் விளையாடினால், உலக தரவரிசையில் 700-வது இடத்தை  பிடிப்பார்”, என்று கூறினார். இதற்கு செரினா தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜான், உங்கள்மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறேன். ஆனால், தேவையில்லாத சர்ச்சையில் என்னை இழுக்காதீர்கள். நான் ஒரு குழந்தைக்குத் தாயாகப் போகிறேன். என் தனிப்பட்ட உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள்”, என்று பதிலடி கொடுத்திருக்கிறார். செரினா டென்னிஸ் போட்டிகளில், வரும் 2018 ஆம் ஆண்டு முதல் மீண்டும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்