அந்தப் பொன்னான தருணம் நிகழ்ந்தது 1987-ல்தான்! - 1987 உலகக் கோப்பை கிரிக்கெட்.. தெரிந்ததும் தெரியாததும்! Gentleman to CommonMan மினி தொடர் இறுதிப்பாகம்

1987 உலகக் கோப்பை

பாகம் 1 பாகம் 2 / பாகம் 3 பாகம் 4 / பாகம் 5 / பாகம் 6

1987 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியானது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கும், கிரிக்கெட் வாரியங்களுக்கும் ஒரு செய்தியை அறிவித்தது. இனி டெஸ்ட் போட்டிகளுக்கு ரசிகர்கள் குறைந்து கொண்டேதான் வருவார்கள். மைதானத்திலும் சரி, தொலைக்காட்சியிலும் சரி இனி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளைத்தான் பார்ப்பார்கள் என்பதுதான் அது. அதற்கு முன்னர் டெஸ்ட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த வாரியங்கள் ஒரு நாள் போட்டிகளுக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தன. விளம்பரதாரர்கள் ஒரு நாள் போட்டித்தொடர்களுக்கே பணக்கொடையளிக்க முன் வந்தார்கள். எனவே ஒருநாள் போட்டிகளை நடத்துவதிலும், அதற்கு அதிக பார்வையாளர்களைத் திரட்டுவதிலும் கிரிக்கெட் வாரியங்கள் கவனம் செலுத்த ஆரம்பித்தன. 

முதலாவதாக, கிரிக்கெட் போட்டிகளில் தங்கள் அபிமான அணி ரன் குவிப்பதைப் பார்க்கவே ரசிகர்கள் விரும்புகிறார்கள், அவர்களின் ஸ்டம்புகள் வீழ்வதை அல்ல என உணர்ந்துகொண்டார்கள். எனவே, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை முழுக்க முழுக்க பேட்ஸ்மென்களுக்கு சாதகமானதாக ஆக்க முனைந்தார்கள். 

பொதுவாகவே ஒருநாள் ஆட்டங்கள் பேட்ஸ்மெனுக்கு சாதகமானவைதான். பந்து வீச்சாளருக்கு இத்தனை ஓவர்தான் வீச வேண்டும் என்ற கட்டுப்பாடு, உள் வட்டத்தில் இத்தனை பீல்டர்கள்தான் நிற்க வேண்டும் என்ற கட்டுப்பாடு என. இருந்தாலும் போதாது என இன்னும் பேட்ஸ்மெனுக்கு சாதகமாகவே ஒருநாள் கிரிக்கெட் விதிமுறைகளை மாற்ற முனைந்தார்கள்.

முதலாவதாக ஒருநாள் போட்டிக்கான ஆடுகளங்கள், பெரும்பாலும் பேட்ஸ்மென்களுக்கு சாதகமாக இருக்கும்படியே அமைக்கப்பட்டன. அடுத்ததாக பவர்பிளே. முன்னர், பேட்ஸ்மென்கள் அதிக ரன் குவிக்க உதவியாக பீல்டிங் கட்டுப்பாடு முதல் 15 ஓவர்களுக்கு மட்டும் இருக்கும். பின்னர்  அது 20 ஓவர்களாக மாற்றப்பட்டு மூன்று பிரிவுகளாக எடுத்துக்கொள்ளலாம் என வரையறுக்கப்பட்டது. இதனால்தான் 300க்கும் அதிகமான ரன்களை இப்போது ஆடுபவர்களால் எளிதாக எடுக்க முடிகிறது. மேலும், லெக் திசையில் ஒரு மில்லி மீட்டர் போனாலும் வைட், நோபாலுக்கு ப்ரி ஹிட் என ஒரு அணியை எவ்வளவு ரன் அடிக்கவைக்க முடியுமோ அந்த அளவுக்கு ரன் அடிக்க வைக்கிறார்கள்.

இவை ரசிகர்களை ஆட்டத்தை பார்க்க வைக்க செய்த உத்திகள் என்றால் போட்டிகளை துல்லியமான முடிவுகளுடன் நடத்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் தொடங்கினார்கள். எனவே 1987 உலக்கோப்பை ஆட்டங்களை இப்போது பார்த்தால் நமக்கு ஏராளமான வித்தியாசங்கள் தோன்றும். இந்த உலக்கோப்பையில் ஆட்டத்தின் முடிவுகள் முழுவதும் அம்பயரின் கையில்தான் இருந்தன. ரன் அவுட் மற்றும் ஸ்டம்பிங்கில் அம்பயரின் தீர்ப்பே இறுதியானது. தற்போது மூன்றாவது அம்பயர் திரையில் ஆட்டத்தை ஒவ்வொரு பிரேமாகப் பார்த்து முடிவை அறிவிக்கிறார். அப்பொழுது சிக்கலானதாகத் தோன்றினால் மட்டும் பேட்ஸ்மெனுக்கு சாதகமாகத் தீர்ப்பை வழங்குவார்கள். விக்கெட் கீப்பர் கேட்சுகள், பவுண்டரி லைனில் பிடிக்கப்படும் கேட்சுகள் ஆகியவற்றையும் உத்தேசமாகத்தான் முடிவு சொல்வார்கள். 

மேக்ஸ்வெல்

இப்போது பிடிக்கிறார்களே, காற்றில் பறந்து பவுண்டரி லைனுக்கு மேல் சென்று கேட்ச் பிடித்ததும் உள்நோக்கி எறிந்து மீண்டும் பவுண்டரி லைனுக்கு உள்ளே வந்து..  அப்போது அப்படியெல்லாம் கிடையாது. அப்படி என்ன வித்தை காட்டியிருந்தாலும்  பேட்ஸ்மெனுக்கு சாதகமாகவே தீர்ப்பை எழுதியிருப்பார்கள் அம்பயர்கள். பெரும்பாலும் பவுண்டரி லைன் அருகே சறுக்கிக் கொண்டே போய் பீல்டிங் செய்வதெல்லாம் குறைவு. தப்பித்தவறி அந்த பீல்டர் பந்தைத் தடுத்துவிட்டால் அவர் சொல்வதையே வேதவாக்காக எண்ணி முடிவை அறிவிப்பார்கள் அம்பயர்கள். மேலும் டி ஆர் எஸ் எனப்படும் டிசிசன் ரிவியூ சிஸ்டமும் அப்போது கிடையாது. எனவே, எல் பி டபுள்யூவெல்லாம் அம்பயர் நினைத்தால் கொடுக்கலாம் என்ற அளவில் இருந்தது. அப்பொழுது மொத்தமே இரண்டு கேமராக்கள், அதிக பட்சம் நான்கு கேமராக்கள். இப்போதுதான் அம்பயரின் தொப்பி, ஸ்டம்ப் என எல்லா இடத்திலும் கேமரா வைத்தாகிவிட்டது. 

மழை வந்து குறுக்கிட்டாலும் ஆட்டத்துக்கு முடிவு வேண்டும் என்று முன்னர் சில விதி முறைகளை வைத்திருந்தார்கள்.  அப்போது மழையால் ஆட்டம் தடைப்பட்டால், அடுத்து ஆடிய அணி, முதலில் ஆடிய அணி ஆடிய ஓவர்களில்  50% ஆவது விளையாடியிருக்க வேண்டும். அப்படி ஆடினால் இரண்டு அணியின் ஸ்கோரையும் ஒப்பிட்டு ஆவரேஜ் ரன் ரேட் எதற்கு அதிகம் எனப்பார்த்து வெற்றி தோல்வியை அறிவிப்பார்கள். எத்தனை விக்கெட் என்பதெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இப்போது டக்வொர்த் லீவிஸ் விதிமுறைகளின் படி ஓரளவுக்கு அதுவரை விளையாடியதில், விக்கெட் இழந்தது போன்ற சாதக பாதகங்களை வைத்து வெற்றி/தோல்வியை அறிவிக்கிறார்கள். ஆனால், 1987 உலகக்கோப்பையில் எந்த ஆட்டமும் மழையால் தடைபடவில்லை. அதேபோல் ஆட்டம் இருதரப்பிலும் சமமாக முடிந்தால் ஆளுக்கு ஒரு புள்ளியை கொடுத்து முடித்துக்கொள்வார்கள், சூப்பர் ஓவர் என்ற விதிமுறையும் கிடையாது. 

தற்போது கிரிக்கெட் ஆட்டத்தில், வெற்றி மட்டுமே குறிக்கோள். ரசிகர்களை எப்பாடு பட்டாவது பார்க்கவைக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே நடத்தப்படுகிறது. வீரர்களும் அடுத்த ஆட்டத்தில் நாம் இடம் பிடித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் ஆக்ரோஷமாக ஆடுகிறார்கள்.  அதனால் கிரிக்கெட் என்றாலே நினைவுக்கு வரும் ‘ஜெண்டில்மேன் கேம்’ என்ற பதத்தையே நாம் மறக்க வேண்டிய நிலை வந்திருக்கிறது.

வால்ஷ்

இந்தச் சூழ்நிலையை வைத்துப் பார்த்தால் 1987 உலகக் கோப்பையில் ஒரு பொன்னான தருணம் நிகழ்ந்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர் கோர்ட்னி வால்ஷின் பெருந்தன்மைதான் அது.  மேற்கிந்திய தீவுகளுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த லீக் போட்டி அது. அந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசமடையும். இந்தச் சூழ்நிலையில் முதலில் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆடியது. அவர்களது இலக்கை சேஸ் செய்த பாகிஸ்தான் அணி முதலில் திணறியது. ஆனாலும், பின்னர் சுதாரித்து இலக்கை நெருங்கியது. பரபரப்பான கடைசி ஓவர். இரண்டு ரன்கள் வேண்டும் பாகிஸ்தான் அணிக்கு ஒரு விக்கெட் தான் மீதம் இருக்கிறது. வால்ஷ் கடைசிப்பந்தை வீசுகிறார். அதற்கு முன்னம் இருந்தே வால்ஸ் பந்தை வீசுவதற்குள்  ரன்னர் எண்டில் நிற்கும் பேட்ஸ்மென் நான்கைந்து தப்படிகள் ஓடிவிடுவார். வெறுப்புற்ற வால்ஷ் பவுலின் கோட்டருகே வந்து நின்று, பந்தை வீசாமல் நின்றுவிட்டார். பேட்ஸ்மென் வழக்கப்படி கால்வாசி தூரத்தை கடந்துவிட்டார். நின்றவர் திரும்பிப்பார்த்தால், வால்ஷ் பந்தை எறியாமல் நின்று கொண்டிருப்பதை கவனிக்கிறார். வால்ஷ் நினைத்திருந்தால் அவரை எளிதில் ரன் அவுட் செய்திருக்கலாம். மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றிருக்கும். அரையிறுதி வாய்ப்பும் பிரகாசம் அடைந்திருக்கும். யார் கண்டது கோப்பையைக்கூட வென்றிருக்கலாம். 

ஆனால், வால்ஷ் அதைச்செய்யவில்லை. அப்படிச் செய்தாலும் கிரிக்கெட் விதிகளின் படி சரியே. ஆனால் ஒரு ஜெண்டில்மேனாக, அவர் அப்படிச் செய்யவில்லை.  அந்த பேட்ஸ்மெனை ஒரு பார்வை பார்த்தார். அவர் மீண்டும் கிரீஸுக்குள் வந்து நின்றுகொண்டார். ஆனால், அடுத்து வால்ஷ் வீசிய பந்தில் பாகிஸ்தான் அணி இரண்டு ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. 

இன்றைக்கு ஆயிரம் கேமராக்கள் வைக்கலாம். ஒவ்வொரு பிரேமையும் அனலைஸ் செய்து முடிவைச் சொல்லலாம். ஆனால் இவை எதுவும் இல்லாத காலத்தில் சில பேட்ஸ்மென்கள் தங்கள் பேட்டில் பந்து உரசிச் சென்று விக்கெட் கீப்பர் கேட்ச் பிடித்து விட்டாலே அம்பயரின் முடிவுக்கு ஏன் எதிர் அணியின் அப்பீலுக்கு கூட முன்னாலே கூட நடக்க ஆரம்பித்திருக்கிறார்கள். எத்தனையோ பீல்டர்கள் தாங்கள் பிடித்த கேட்ச் தரையில் பட்டு பிடித்திருந்தால், பேட்ஸ்மென் நாட் அவுட் என சொல்லி விடுவார்கள்.

ஆலன் டொனால்டுக

இவ்வளவு ஏன் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் அலன் டொனால்ட் வீசிய அபாரமான இன் கட்டர், குட் லெங்தில் விழுந்து உள்ளே வந்தது. அதை ஆட முயன்று முடியாமல் தன் காலில் வாங்கினார் இந்திய அணியின் ஆட்டக்காரர் விக்ரம் ரத்தோர். அது எல் பி டபிள்யூ என அவருக்கு மனதில் தோன்றிய கணமே நடக்க ஆரம்பித்து விட்டார். பொதுவாக எல் பி டபிள்யூவிற்கு அம்பயர் அவுட் கொடுத்தால்தான் யாருமே நடக்க ஆரம்பிப்பார்கள்.

இதுபோன்ற நிகழ்வுகளால்தான் கிரிக்கெட்டை ஜெண்டில்மேன் கேம் என்று அழைத்தார்கள். விஞ்ஞான வளர்ச்சியினால் முடிவுகளை இப்போது துல்லியமாக சொல்ல முடிகிறது. அப்போது பேட்ஸ்மென் அல்லது பீல்டர் நினைத்தால் ஏமாற்றலாம். தங்கள் அணியின் வெற்றிக்காக கூட அதுமாதிரி செய்யாமல் நியாயமாக விளையாடுவதால்தான் அது ஜெண்டில்மேன் கேம் எனப்பட்டது,

எதிரணி வீரர் சதமடித்தால் ஏன் ஒரு அற்புதமான ஷாட் அடித்தால்  வீர்ர்கள் கைதட்டிப் பாராட்டும் வழக்கம் முன்னாட்களில் இருந்தது. அது இப்போது குறைந்து வருகிறது. வர்த்தக ரீதியான நிர்ப்பந்தங்களால் இப்போது கிரிக்கெட்டில் ஜெண்டில்மென் தனம் குறைந்துகொண்டே வருகிறது. தொழில்நுட்பம் அதிகரிக்க அதிகரிக்க கிரிக்கெட்டில் ஜெண்டில்மேன் தன்மை தேவைப்படாமல்தான் போகும்.

அணி தன்னால் தோற்றாலும் அது பற்றி கவலைப்படாமல் சென்ற வால்ஷும், அவரைத் தட்டிக்கொடுத்து பாராட்டிய அணியினரையும் கண்டதுதான் 1987 உலகக் கோப்பையின் உன்னத தருணம். எவ்வளவு ரன் குவித்தாலும், எத்தனை விக்கெட் எடுத்தாலும் பெருந்தன்மையாக நடந்துகொள்வதுதான் எல்லோர் மனதிலும் நிற்கும், அதுதான் கிரிக்கெட்டின் ஆதார குணம், அதுதான் அந்த விளையாட்டை காலம் கடந்து நிற்க வைக்கும் பார்ப்பவர்களையும் நல் வழிப்படுத்தும். போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் கிரிக்கெட்டைப் பார்த்து வளரும் தலைமுறையின் மனதில் பெருந்தன்மையை வளரச் செய்வது போட்டிகளை வெல்வதை விட பெரிதல்லவா!


மேட்ச் ஓவர்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!