வெளியிடப்பட்ட நேரம்: 11:22 (30/06/2017)

கடைசி தொடர்பு:12:53 (30/06/2017)

இன்று மூன்றாவது போட்டி; யுவராஜ் சிங்குக்கு வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல்

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ஆன்டிகுவா மைதானத்தில் நடைபெறுகிறது. 

India vs west indies


இந்திய அணி தற்போது மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையால் முடிவு கிடைக்காத நிலையில், இரண்டாம் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. 
இன்று மூன்றாவது போட்டி நடைபெறுகிறது. இந்திய அணியைப் பொறுத்தவரையில் முழு பலத்துடனே விளையாடுகின்றது. தொடக்க ஆட்டக்காரர்களான தவான், ரஹானே ஆகியோர் நல்ல தொடக்கத்தைத் தொடர்ந்து வழங்கி வருவதால், பின் வரிசையில் அதிக நெருக்கடி இல்லாமல் விளையாடி வருகின்றனர். கேப்டன் கோலியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நடுவரிசையில் யுவராஜ் அடிக்கடி சொதப்புவதால் இன்றைய போட்டியில் அவருக்கு பதிலாக ரிஷப் பான்ட்க்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்று தெரிகிறது. கடந்த ஐபிஎல் தொடர்மூலம் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவர் பான்ட். தனது முதல் ஒருநாள் போட்டியை எதிர்நோக்கி இருக்கும் அவருக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகின்றது. 

அடுத்து வரும் உலகக் கோப்பையை மனதில்வைத்து இளம் வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று இந்தத் தொடருக்கு முன்னதாக ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இன்றைய போட்டியில் யுவராஜ் சிங்குக்கு வாய்ப்பு கிடைப்பது சிரமம் என்றே தெரிகிறது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியைப் பொறுத்தமட்டில், தொடர் தோல்விகளால் துவண்டுள்ளது. சமீபகாலமாக அந்த அணியின் மோசமான விளையாட்டால் கடந்த சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் தகுதிகூட பெற முடியவில்லை. ஆனாலும், அந்த அணி அதிரடியாக விளையாடும் திறன்கொண்ட அணியாகத்தான் தற்போதும் பார்க்கப்படுகிறது. பந்துவீச்சைப் பொறுத்தவரையில் அந்த அணி தொடர்ந்து உதிரி ரன்களை  அதிகம் விட்டுக்கொடுக்கிறது. அதனால் பந்துவீச்சில் அதிக கவனத்துடன் செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

 இந்தப் போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. கடந்த இரு போட்டியைப் போன்று இந்தப் போட்டியில் மழையின் பாதிப்பு இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.