வெளியிடப்பட்ட நேரம்: 19:06 (30/06/2017)

கடைசி தொடர்பு:19:06 (30/06/2017)

கெப்ளர் முதல் மோர்கன் வரை... இரு நாடுகளுக்கு விளையாடிய கிரிக்கெட் வீரர்கள்!

வாய்ப்புக்காக, திறமையை வெளிப்படுத்துவதற்கான இடம் கிடைக்காத காரணத்துக்காக, பணத்துக்காக, சந்தர்ப்பசூழல்களுக்காக... என, இரு வேறு நாடுகளுக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய கிரிக்கெட் வீரர்களின் எண்ணிக்கை அதிகம்.  அப்படி விளையாடிய, விளையாடிக்கொண்டிருக்கும் பத்து கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் இது.

ஜான் ட்ரைகோஸ் (John Traicos)

விளையாடிய நாடுகள் : தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே.

Jhon Traicos

1970-களில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணியில் அறிமுகமான ஆஃப் ஸ்பின் பெளலர் ஜான் ட்ரைகோஸ். தென் ஆப்பிரிக்காவில் நிலவிய உள்நாட்டுப் பிரச்னையால் கிரிக்கெட் போட்டி தடைசெய்யப்பட, ஜிம்பாப்வேயின் உள்ளூர் அணிகளில் விளையாடி, தேசிய அணியில் இடம்பிடித்தார். 1982-ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக மூன்று சாம்பியன் டிராபி போட்டிகளில் ஜிம்பாப்வே அணிக்காக விளையாடினார் ஜான் ட்ரைகோஸ். இதில் 1983-ம் ஆண்டில் நடந்த உலகக்கோப்பைப் போட்டியும் அடக்கம். ஜிம்பாப்வே முதன்முதலில் டெஸ்ட் அந்தஸ்து பெற்று, இந்தியாவுக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் போட்டியில் ஜான் ட்ரைகோஸ் இடம்பெற்றிருந்தார். தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்துவரும் ஜான், தென் ஆப்பிரிக்காவுக்காக மூன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும், ஜிம்பாப்வே அணிக்காக 31 போட்டிகளிலும் விளையாடியிருக்கிறார்.

டிர்க் நனெஸ் (Dirk nannes)

விளையாடிய நாடுகள் : ஆஸ்திரேலியா, நெதர்லாந்து.

Dirk Nannes

கிரிக்கெட் போட்டியைத் தொழில்ரீதியாகக் கையாளும் வீரரான டிர்க் நனெஸ், ஒன்பது நாடுகளில் பதினைந்து விதமான கிரிக்கெட் போட்டித் தொடர்களில் பங்கேற்றிருக்கிறார். 2009-ம் ஆண்டு டி-20 உலகக்கோப்பைப் போட்டித் தொடரில் நெதர்லாந்து அணிக்காக விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர், அடுத்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு விளையாடியது ஆஸ்திரேலிய அணிக்காக. இரு அணிகளுக்கும் 18 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தாலும், இவரது துல்லியமான பந்து வீச்சுக்கு ரசிகர்கள் அதிகம். ஐபிஎல் போட்டிகளில் சென்னை, பெங்களூரு, டெல்லி அணிகளுக்காக விளையாடியிருக்கும் டிர்க் நனெஸ், தற்போது கிரிக்கெட் வர்ணனையாளர்.

எட் ஜாய்ஸ் (Ed Joyce)

விளையாடிய அணிகள் : இங்கிலாந்து, அயர்லாந்து.

Ed Joyce

2006-ம் ஆண்டில் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் இங்கிலாந்து அணியில் அறிமுகமான எட் ஜாய்ஸ், தற்போது முழுநேர அயர்லாந்து கிரிக்கெட் வீரர். 2007-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்காக விளையாடியவர், 2011-ம் ஆண்டில் அயர்லாந்து அணிக்காக ஆடினார். அயர்லாந்தின் டப்ளின் நகரில் பிறந்த இவருக்கு இரண்டு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள். அனைவருமே அயர்லாந்து கிரிக்கெட் வீரர்கள் என்பது ‘அடடே' ஆச்சர்யம். 

லுக் ரோஞ்சி (Luck Ronchi)

விளையாடிய நாடுகள் : ஆஸ்திரேலியா, நியூசிலாந்து.

Luck Ronchi

4 டெஸ்ட், 85 ஒருநாள், 32 டி-20 போட்டிகளில் விளையாடி சமீபத்தில் ஓய்வுபெற்ற நியூசிலாந்து வீரரான லுக் ரோஞ்சி, சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானது ஆஸ்திரேலிய அணி வீரராக! தாய்நாடு நியூசிலாந்து என்றாலும், சில காரணங்களுக்காக ஆஸ்திரேலியா குடிபெயர்ந்தது ரோஞ்சி குடும்பம். ஆஸ்திரேலிய அணியில் இணைந்து சில போட்டிகளில் விளையாடியவர், 2012-ம் ஆண்டில் நியூசிலாந்து திரும்பி தாய்நாட்டுக்காக விளையாடும் முயற்சியைத் தொடங்கினார். முயற்சி திருவினையாகி 2013-ம் ஆண்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் இடம் கிடைத்தது. விக்கெட் கீப்பரான ரோஞ்சி, இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஏழாவது வீரராகக் களமிறங்கி, 170 ரன்கள் விளாசியிருக்கிறார். விக்கெட் கீப்பர்கள் அடித்த தனிநபர் அதிகபட்ச ரன்களில் மூன்றாம் இடம் இது. தவிர, 7-வது வரிசையில் விளையாடிய வீரர் ஒருவர் அடித்த அதிகபட்ச ரன்களில் முதல் இடம் இது.

ஆண்டர்சன் கம்மின்ஸ் (Anderson Cummins)

விளையாடிய நாடுகள் : வெஸ்ட் இண்டீஸ், கனடா.

Anderson Cummins கிரிக்கெட்

வேகப்பந்து வீச்சாளரான ஆண்டர்சன் கம்மின்ஸ் 5 டெஸ்ட், 76 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். 1991-ம் ஆண்டில் சர்வதேசக் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அறிமுகமானார். 1996-ம் ஆண்டுக்குப் பிறகு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதைத் தவிர்த்து கனடாவுக்குக் குடிபெயர்ந்தார். 10 வருட இடைவெளிக்குப் பிறகு கனடா – கென்யா – ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் கனடா அணி வீரராக தன் 40-வது வயதில் அறிமுகமானார். தொடர்ந்து 2007-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரிலும் கனடா அணிக்காக விளையாடிய கம்மின்ஸ், தற்போது கிரிக்கெட் பயிற்சியாளர்.

கெப்ளர் வெசெல்ஸ் (Kepler Wessels)

விளையாடிய நாடுகள் : ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா.

Kepler Wessels

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருவேறு நாடுகளுக்காக விளையாடிய முதல் வீரர் கெப்ளர் வெசெல்ஸ். 149 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருக்கும் கெப்ளர், தென் ஆப்பிரிக்கா அணிக்காக 71 போட்டிகள், ஆஸ்திரேலிய அணிக்காக 78 போட்டிகள் என சரிபாதி ஸ்கோர்செய்திருக்கிறார். 1983-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியவர், 1985-ம் ஆண்டில் தன் ஓய்வை அறிவித்தார். தென் ஆப்பிரிக்காவுக்குக் குடிபெயர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடினார். உள்நாட்டுப் பிரச்னை, அனுபவமில்லாத இளம் வீரர்கள்… எனப் பரிதாபமாக நின்ற தென் ஆப்பிரிக்க அணி, கெப்ளருக்குக் கேப்டன் பொறுப்பு கொடுத்து 1992-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிக்குத் தென் ஆப்பிரிக்க அணியை வழிநடத்த அழைத்தது. முதல் போட்டியே ‘முன்னாள் அணி’யான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அமைய, அணியை வெற்றிபெறச் செய்து அசத்தினார் கெப்ளர். இந்த உலகக்கோப்பைத் தொடரில் தென் ஆப்பிரிக்கா அரை இறுதி வரை வந்தது. பிறகு, தன் ஓய்வு முடிவை உறுதிசெய்துவிட்டு, கிரிக்கெட் பயிற்சியாளராகத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்.  

இயான் மோர்கன் (Eoin Morgan)

விளையாடிய நாடுகள் : அயர்லாந்து, இங்கிலாந்து.

Eoin Morgan

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன், இயான் மோர்கன். 2006-ம் ஆண்டு ஸ்காட்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில், அயர்லாந்து அணிக்காக அறிமுகமானவர். `நல்ல பேட்ஸ்மேன், குட் ஃபினிஷர்' எனப் பாராட்டப்பட்ட மோர்கன், அயர்லாந்திலிருந்து இங்கிலாந்து அணிக்கு இடம்பெயர்ந்து அசத்திக்கொண்டிருக்கிறார். 

டூகி பிரவுன் (Dougie Brown)

விளையாடிய நாடுகள் : இங்கிலாந்து, ஸ்காட்லாந்து.

Dougie Brown

1997-ம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமானார் பிரவுன். இங்கிலாந்து அணிக்காக சில ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர், பிறகு நமீபியாவுக்குக் குடிபெயர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடினார். 2003-ம் ஆண்டில் நடந்த உலகக்கோப்பைத் தொடரில், நமீபியா கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் இவர். பிறகு, ஸ்காட்லாந்தில் உள்ள அணிகளுக்குப் பயிற்சி கொடுத்தார். டெஸ்ட் அந்தஸ்து பெறாத அணிகளுக்கு இடையே நடைபெறும் சாம்பியன்ஸ் போட்டித் தொடரில், ஸ்காட்லாந்து அணி முன்னிலை பெறுவதற்கு பிரவுன் பயிற்சி அளித்ததோடு, ஸ்காட்லாந்து அணிக்காகக் களத்திலும் விளையாடினார். 2007-ம் ஆண்டில் நடந்த உலகக்கோப்பைத் தொடரில் ஸ்காட்லாந்து அணி இடம்பெற்றது. ஆல்ரவுண்டரான டூகி பிரவுனும் ஸ்காட்லாந்து அணியில் இடம்பெற்றார். தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கிறார்.

ஜெரைன்ட் ஜோன்ஸ் (Geraint Jones)

விளையாடிய நாடுகள் : இங்கிலாந்து, பப்புவா நியூகினியா.

Geraint Jones

பிறந்தது பப்புவா நியூகினியா. 31 டெஸ்ட் போட்டிகள், 51 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் ஜோன்ஸ், 2005-ம் ஆண்டில் நடந்த ஆஷஷ் தொடரில் விக்கெட் கீப்பராக சிறப்பான பங்களிப்பை இங்கிலாந்து அணிக்கு வழங்கியவர். இங்கிலாந்து அணியிலிருந்து வெளியேறி, பப்புவா நியூகினியா அணிக்காக விளையாடத் தொடங்கினார். 2013-ம் ஆண்டில் நடந்த டி-20 உலகக்கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டிகள் மற்றும் 2014-ம் ஆண்டில் நடந்த உலகக்கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டிகளில், பப்புவா நியூகினியா அணி பாராட்டும்படியான பங்களிப்பைப் கொடுத்ததில், ஜோன்ஸுக்கும் பங்கு உண்டு. தற்போது கிரிக்கெட் பயிற்சியாளராகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.

ரியான் காம்ப்பெல் (Ryan Campbell)

விளையாடிய நாடுகள் : ஆஸ்திரேலியா, ஹாங்காங்.

Ryan Campbell

இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டி, மூன்று டி-20 கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தாலும், ஆஸ்திரேலியாவின் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் முக்கியமான விக்கெட்கீப்பர் – பேட்ஸ்மேனாக ஜொலித்தவர் ரியான். ஆஸ்திரேலிய அணியின் எவர்கிரீன் விக்கெட் கீப்பரான ஆடம் கில்கிறிஸ்ட் ஓய்வுபெறும் வரை தன் இடத்தைத் தக்கவைத்துக்கொண்ட காரணத்தால், ஆஸ்திரேலியாவுக்காக அதிக அளவு சர்வதேசப் போட்டிகளில் ரியான் இடம்பெற முடியவில்லை. தவிர்க்க முடியாத காரணத்தினால் ஆடம் கில்கிறிஸ்ட் அணியில் இடம்பெறாத இரண்டு போட்டிகளில் மட்டுமே ரியான் களமிறங்க முடிந்தது. ஹாங்காங் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பு ரியானுக்குக் கிடைத்தது. 2016-ம் ஆண்டில் நடந்த உலகக்கோப்பை டி-20 தொடரில் ஹாங்காங் அணி கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற, தன் 44 வயதில் ஹாங்காங் அணிக்காக விளையாடினார். தற்போது நெதர்லாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கிறார் ரியான் காம்ப்பெல்.

இவர்களைத் தவிர, இன்னும் பல கிரிக்கெட் வீரர்கள் இரு வேறு நாடுகளின் சர்வதேச அணியில் இடம்பிடித்து விளையாடியிருக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்