‘நான் விளையாடுறதுக்காக, என் தம்பி படிப்பை நிறுத்திட்டான்’ - ப்ரோ கபடியில் கலக்கும் சேலம் வீரர் செல்வமணி! 

‘தமிழ்லயே பேசுங்க... உங்களைப் பத்தி சொல்லுங்க...’ - ஸ்டார் ஸ்போட்ர்ஸ் சேனல் தொகுப்பாளர் இப்படிச் சொன்னதும், வெளிச்சம் பாய்ந்தது அவர் முகத்தில். ‘‘என் பெயர் செல்வமணி. சேலம் ஓமலூர் பக்கத்துல தேக்கம்பட்டி கிராமம். ஸ்கூல் படிக்கும்போது ஜாலியா கபடி விளையாட ஆரம்பிச்சேன். காலேஜ் படிக்கும்போது வெளியூர்ல மேட்ச்சுக்குப் போனேன். 2014-ல தமிழ்நாடு டீமுக்கு செலக்ட் ஆனேன்...’ என, தன் வாழ்க்கையை... கபடி பிளேயர் ஆன கதையைச் சொல்லிக்கொண்டிருந்தார் செல்வமணி. 

கபடி வீரர் செல்வமணி

அந்த இடத்தை விட்டு கொஞ்சம் நகர்ந்தால் மற்றொரு தமிழக வீரர் செல்வம், சித்தார்த், சாரங் அருண் என முதன்முறையாக ப்ரோ கபடி லீக் தொடருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களிடம் இன்னொரு குரூப் இன்டர்வியூ எடுத்துக்கொண்டிருந்தது. 

ஜூலை 28-ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கவுள்ள ஐந்தாவது ப்ரோ கபடி லீக் சீசனுக்கான ப்ரொமேஷன் நிகழ்ச்சி அது. மும்பை நட்சத்திர ஹோட்டலில் நடந்த அந்த விழாவில்தான் செல்வம், செல்வமணி இருவருக்கும் அந்த நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது. ஆம், பகல் முழுக்க நடந்த அந்த நிகழ்ச்சியில் பல்வேறு அணிகளின் சி.இ.ஓ-க்கள், பயிற்சியாளர்கள், பத்திரிகையாளர்கள், லீக் கமிஷனர்கள், மார்க்கெட்டிங் மேனேஜர்கள், எக்ஸ்கியூட்டிவ்கள் என பலரும் ப்ரோ கபடி லீக்கின் அபரிமித வளர்ச்சியைப் பற்றி லெக்சர் எடுத்தனர். அந்த மேடையில், அந்த வரிசையில் தேர்ந்தெடுத்த சில வீரர்களை மட்டுமே தங்கள் அனுபவத்தைப் பகிர அனுமதித்திருந்தனர். செல்வம், செல்வமணி இருவரும் அதில் அடக்கம். இருவரும் தமிழர்கள் என்பது கூடுதல் கெளரவம். 

கூச்சமும், வெட்கமும், பயமும் கலந்து பேசிய சேந்தப்பன் செல்வம், முதன்முறையாக ப்ரோ கபடி லீக் தொடரில் பங்கேற்க உள்ளார். அவரை செலக்ட் செய்தது அபிஷேக் பச்சன் சக உரிமையாளராக உள்ள ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி. ஸ்டார் ஹோட்டல், விமான பயணம்... இந்த ஆடம்பரம் எல்லாம் செல்வத்துக்குப் புதிது. அந்த பிரமிப்பு இன்னும் அவரிடம் இருந்து நீங்கவில்லை. எப்படி இருக்கிறது இந்த அனுபவம் என தொகுப்பாளர் சுகைல் சந்தோக் கேட்டதும், ‘‘எல்லாம் கபடியால கிடைச்சது. கபடி இல்லைன்னா, இன்னிக்கி நான் இங்க இல்லை’’ என்றார் பவ்யமாக. 

செல்வமணியும் அதே ஜெய்ப்பூர் அணியில்தான் விளையாட உள்ளார் எனிலும், இந்த பிரமிப்பும், ப்ரோ கபடி லீக்கும் அவருக்குப் புதிதல்ல. அவர் கொஞ்சம் சீனியர்.  ‘‘சேலம் சி.எஸ்.ஐ பாலிடெக்னிக்ல படிச்சி முடிச்சதும் 2 வருஷம் வீட்டுல இருந்தேன். அம்மா, அப்பாவுக்கு உதவியா விவசாயம் பாத்துட்டு இருந்தேன். ஊர்ல, காலேஜ் டீம்ல நான் நல்லா விளையாடுறதைப் பாத்து, என்னை தமிழ்நாடு டீம்ல செலக்ட் பண்ணாங்க. 2014-ல தமிழ்நாட்டுக்காக நேஷனல்ஸ் ஆடுனேன். அடுத்த வருஷம் ப்ரோ கபடி லீக்ல (இரண்டாவது சீசன் ) விளையாடுற வாய்ப்பு கிடைச்சது’’ - என ப்ரோ கபடி லீக்கில் இடம்பிடித்த கதை சொன்னார் செல்வமணி. அதற்கு காரணகர்த்தா பெங்களூருவைச் சேர்ந்த கோச் பொன்னப்பா. 

கபடி வீரர் செல்வம்

‘‘நான் ப்ரோ கபடியில சேரக் காரணம் பொன்னாப்பா சார்தான். அவர் அப்போ டெல்லி டீம் கோச்சா இருந்தார். மொத்தம் மூனு சீசன் நான் டெல்லி டீம்ல ஆடுனேன். முதல் சீசன்ல ரொம்ப பதட்டமா இருந்துச்சு. கடைசி மேட்ச் வரைக்கும் பயம் தெளியலை. அந்த சீசன்ல மொத்தம் 14 மேட்ச். கடைசி 2 மேட்ச்லதான் நான் இறங்குனேன்.  ‘என்னடா நம்மளை இறக்கி விடலையே’ன்னு ஃபீல் பண்ணலை. ஏன்னா... என்னை விட சீனியர் பிளேயர்ஸ் ரொம்ப பேர் இருந்தாங்க. கடைசி 2 மேட்ச் நல்லா விளையாடுனேன். அதுலயும் ஒரு ரெய்டுல 4 பாயின்ட் எடுத்துட்டு வந்தேன். அது மேட்ச்சோட முடிவை மாத்திருச்சு. அதனால, அடுத்த சீசன்லயும் என்னை டீம்ல வெச்சிக்கட்டாங்க’’ என்று சொல்லும் செல்வத்துக்கு, ப்ரோ கபடி லீக் மூலம் வாழ்க்கையே மாறி விட்டது. 

‘‘ஊர்லயும் சரி வீட்டுலயும் சரி, எதுக்கு கபடி விளையாடப் போற... எதாவது நல்ல வேலைக்குப் போக வேண்டியதுதானேன்னு சொன்னாங்க. எல்லாருமே திட்டுவாங்க, கேவலமா பேசுவாங்க. ஆனா, இந்த ப்ரோ கபடி வந்ததுக்கப்புறம், டிவியில என்னைப் பாத்துட்டு, நான் விளையாடுறதைப் பாத்துட்டு எல்லாரும் மரியாதை கொடுக்குறாங்க, வீடு தேடி வந்து பேசுறாங்க. இன்னிக்கி இந்த புகழுக்குக் என் தம்பியும் ஒரு காரணம்’’ என எமோஷனலானார். இதைப் பேட்டி எடுத்த நிருபர்கள் மட்டுமல்லாது மேடையிலும் குறிப்பிடத் தவறவில்லை. 

தம்பியா... எப்படி? 

‘‘தம்பி பெயர் தினேஷ் குமார். 2013-ல நான் தீவிரமா விளையாடிட்டு இருந்தேன். என்னால வேலை செஞ்சுட்டே விளையாட முடியலை. விவசாயம் பார்க்க முடியலை. அவன் அப்போ 9-வது படிச்சிட்டு இருந்தான். அதனால, என்னைத் தொடர்ந்து விளையாடச் சொல்லிட்டு, அவன் படிப்பை நிறுத்திட்டான். வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டான்.  நான் முழுக்க முழுக்க விளையாட ஆரம்பிச்சிட்டேன். ஒரு வழியா தமிழ்நாடு டீம்ல சேர்ந்ததும் ரயில்வேயில் வேலை கிடைச்சது. இப்ப ஹைதராபாத்ல வேலை பார்க்குறேன். ப்ரோ கபடியில விளையாட வாய்ப்பு கிடைச்சதும் லைஃப் ஸ்டைலே மாறிடுச்சு.  ஃபினான்ஷியல் ரீதியா ஓரளவு பரவாயில்லை. பழைய வீட்டை கொஞ்சம் ஆல்டர் பண்ணிட்டோம்’’ என்று சொல்லும் செல்வமணி, மற்ற வீரர்களைப் போல் அல்லாது, தனக்குக் கிடைத்த வருமானத்தைப் பகிரங்கமாக பகரத் தயங்கவே இல்லை.

கபடி வீரர் செல்வமணி

 ‘‘முதல் ரெண்டு சீசன்ல தலா 2 லட்சம் ரூபாய் கிடைச்சது. மூணாவது சீசன்ல 11 லட்சம் ரூபாய். இதோ இந்த சீசன்ல 73 லட்சம் ரூபாய் கொடுத்து ஜெய்ப்பூர் டீம் என்னை வாங்கி இருக்காங்க. முடிஞ்ச வரைக்கும் என்னை நான் நிரூபிக்கணும்.’’ என்றவரிடம், ‘முதன்முதல்ல தமிழ்நாட்டுல இருந்து ஒரு டீம் வந்திருக்கு. தமிழ்நாட்டுக்காக ஆடணும்னு ஆசை இல்லையா?’-  என்றோம். ‘‘‘ஆசைதான். தமிழ் தலைவாஸ் டீம் கோச் நம்ம பாஸ்கரன் சார், என்னை டீம்ல எடுக்க எவ்வளவோ ட்ரை பண்ணார். ஏலத்துல 72 லட்சம் ரூபாய் வரைக்கும் வந்தார். கடைசியில ஜெய்ப்பூர் டீம் வாங்கிருச்சு. சின்ன வருத்தம்தான். இருந்தாலும், இந்த சீசனோட ப்ரோ கபடி முடியப் போறதில்லையே. அடுத்து எப்படியும் தமிழ்நாட்டு டீமுக்கு வருவேன். அதுவரைக்கும் நம்மல மதிச்சி, இவ்வளவு விலை கொடுத்து எடுத்திருக்கிற டீமுக்காக கப் ஜெயிச்சிக் கொடுக்கணும் இல்லையா?’’ - நம்மிடமே கேள்வி கேட்கிறார் செல்வமணி.

வாழ்த்துகள் பாஸ். 

தமிழ் தலைவாஸ் ராக்ஸ்... 

ப்ரோ கபடி லீக் ஐந்தாவது சீசனில் அடியெடுத்து வைக்கிறது. முதல் நான்கு சீசன்களில் எட்டு அணிகள் மட்டுமே பங்கேற்றன. இந்த முறை புதிதாக நான்கு அணிகள் சேர்ந்துள்ளன. அதில் சச்சின் டெண்டுல்கர் சக உரிமையாளராக உள்ள தமிழ் தலைவாஸ் அணியும் ஒன்று. ஒருவழியாக, கபடி கோலோச்சும் தமிழகத்தில் இருந்தும் ஒரு அணி கிடைத்திருப்பது கபடி ரசிகர்களுக்கு திருப்தி.

வருமானம், ஸ்பான்சர், விளம்பரம், வருவாய், ரசிக வட்டம் என ஒவ்வொரு சீசனிலும் ப்ரோ கபடி அபரிமித வளர்ச்சியை எட்டியுள்ளது. 2014 ஃபிஃபா உலகக் கோப்பை நடந்த நேரத்தில் கூட, புதிதாக தொடங்கப்பட்ட ப்ரோ கபடிக்கு அவ்வளவு ஆதரவு. தற்போது ஐபிஎல்- தொடருக்கு அடுத்ததாக அதிக ரசிகர்கள் விரும்பிப் பார்ப்பதும் இந்த ப்ரோ கபடியைத்தான். ஐ.எஸ்.எல் உள்ளிட்ட மற்ற போட்டிகள் எல்லாம் இதற்கு அடுத்துத்தான். இந்த நான்கு சீசன்களில் 320 சதவீதம் ஸ்பான்சர்ஷிப் மூலம் வருமானம் அதிகரித்துள்ளது எனில் மூன்று மடங்கு விளம்பர வருமானம் கூடியுள்ளது. ஒரு ரூபாய் முதலீடு செய்தால், 15 ரூபாய் திரும்பக் கிடைக்கிறது என ப்ரோ கபடி லீக் எட்டிய இலக்கு பிரமிக்க வைக்கிறது. 

இந்த உற்சாகத்தில்தான் ஐந்தாவது சீசனின் ஆயுள் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆம், 13 வாரங்கள், 138 ஆட்டங்கள்... அமர்க்களமாக தொடங்கவுள்ள ஐந்தாவது சீசனின் முதல் போட்டியில் தென்னிந்திய அணிகளே மல்லுக்கட்டுகின்றன. ஜூலை 28-ல் ஹைதராபாத்தில் நடக்கும் முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கடந்த சீசனில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் அதிகம் பேர் கபடியை விரும்பிப் பார்த்திருப்பது புரிந்து, தொடக்கவிழாவை ஹைதராபாத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அதேநேரத்தில் தமிழகத்தில் இன்னும் கபடியை அதிகம் பேர் பார்க்கச் செய்யும் வகையில் ஃபைனலை சென்னையில் நடத்த முடிவெடுத்துள்ளனர். 

கபடி கேப்டன் அனுப் குமார்

அணிகள் விவரம்:

குரூப் ஏ :  டபாங் டெல்லி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பல்தான், யு மும்பா, ஹரியானா ஸ்டீலர்ஸ், குஜராத் ஃபார்ச்சுன்ஜியான்ட்ஸ்

குரூப் பி: தெலுங்கு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ், பாட்னா பைரேட்ஸ், பெங்கால் வாரியர்ஸ், யுபி யோதா, தமிழ் தலைவாஸ்

முதன்முறையாக சூப்பர் பிளே ஆஃப் சுற்றுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் 15 போட்டிகளில் பங்கேற்கும். அதாவது ஒவ்வொரு அணியும்  மற்ற அணிகளுடன் மூன்று முறை மோத வேண்டும். ஐ.பி.எல் போலவே குவாலிஃபையர், எலிமினேட்டர் சுற்றுகள் முடிந்த பின் ஃபைனல். 

தமிழ் தலைவாஸ் பங்கேற்கும் போட்டிகள்

28.7.2017 : தமிழ் தலைவாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் - (ஹைதராபாத்)
4.8.2017 : தமிழ் தலைவாஸ் - பெங்களூரு புல்ஸ் - (பெங்களூரு)
10.8.2017 தமிழ் தலைவாஸ் - பெங்களூரு புல்ஸ் - (பெங்களூரு)
16..8.2017 தமிழ் தலைவாஸ் - ஹரியானா ஸ்டீலர்ஸ் - (அகமதாபாத்)
17.8.2017: தமிழ் தலைவாஸ் - தபாங் டெல்லி - (அகமதாபாத்)
26.8.2017: தமிழ் தலைவாஸ் - பாட்னா பைரேட்ஸ் - (மும்பை) 
31.8.2017: தமிழ் தலைவாஸ் - டெலுங்கு டைட்டன்ஸ் - (மும்பை)
3.9.2017: தமிழ் தலைவாஸ் - பெங்கால் வாரியர்ஸ் - (கொல்கத்தா)
13.9.2017: தமிழ் தலைவாஸ் - யு.பி.யோதா - (ஹரியானா)
20.9.2017: தமிழ் தலைவாஸ் - பாட்னா பைரேட்ஸ் - (ராஞ்சி)
24.9.2017 : தமிழ் தலைவாஸ் - பெங்கால் வாரியர்ஸ் - (டெல்லி) 
26.9.2017 : குஜராத் ஃபார்ச்சுன்ஜியான்ட்ஸ் - தமிழ் தலைவாஸ்  - (டெல்லி)
29.9.2017 : தமிழ் தலைவாஸ் - புனேரி பல்தான் - (சென்னை)
30.9.2017: தமிழ் தலைவாஸ் - ஜெயப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- (சென்னை)
01.10.2017: தமிழ் தலைவராஸ் - யு மும்பா - (சென்னை)
03.10.2017: தமிழ் தலைவாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் - (சென்னை)
04.10.2017: தமிழ் தலைவாஸ் - யு.பி.யோதா - (சென்னை)
05.10.2017: தமிழ் தலைவராஸ் - பெங்களூரு புல்ஸ் - (சென்னை) 

13.10.2017 தமிழ் தலைவாஸ் - பெங்கால் வாரியர்ஸ் - (புனே)
14. 10.2017 தமிழ் தலைவாஸ் - பாட்னா பைரேட்ஸ் - (புனே)

சூப்பர் பிளே ஆஃப் சுற்று
22.10.2017 குவாலிஃபையர் 1 Vs குவாலிஃபையர் 2  - (மும்பை) 
23.10.2017 குவாலிஃபையர் 3 Vs எலிமினேட்டர் 1 - (மும்பை)
26.10.2017 லிமினேட்டர் 2  - (சென்னை)
28.10.2017  ஃபைனல் - (சென்னை)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!