ராகுல் டிராவிட் பதவிக்காலம் நீட்டிப்பு - பிசிசிஐ அறிவிப்பு

இந்திய முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்,  இந்திய 'ஏ' அணி மற்றும் 19 வயதிற்குட்பட்டோருக்கான இளையோர் அணிகளுக்குத் தொடர்ந்து பயிற்சியாளராக நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Rahul Dravid


தற்போது, இந்திய 'ஏ' அணி மற்றும் இந்திய இளையோர் அணிகளுக்கு, கடந்த 2015-ம் ஆண்டு முதல் டிராவிட் பயிற்சியாளராக உள்ளார். அவரது பதவிக்காலம் முடிவடைவதைத் தொடர்ந்து, புதிய பயிற்சியாளர் நியமிப்பது தொடர்பாக ஆலோசனைகள் நடந்துவந்தன. இந்நிலையில், மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு பயிற்சியாளராக டிராவிட் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த இரு ஆண்டுகளுக்கு, வருடத்தில் 12 மாதமும் பயிற்சியாளராக டிராவிட் பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடங்களில், ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் ஆலோசகராகவும் பணியாற்றியதால், வருடத்தில் 10 மாதத்துக்கு மட்டுமே பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது, தனது ஐபிஎல் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், முழு நேரமும் இந்த இரண்டு அணிகளுக்கும் பயிற்சியாளராகச் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் டிராவிட், தொடர்ந்து இளம் வீரர்களைத் தேடிப்பிடித்து அவர்களுக்குச் சரியான வாய்ப்புகளை வழங்கிவருகிறார். டெல்லி அணியின் ஆலோசகராக இருக்கும்போது, அந்த அணியில் தொடர்ந்து இளம் வீரர்களுக்கே முன்னுரிமை அளித்தார். தற்போது, இந்திய அணியில் இடம்பிடித்துள்ள குல்தீப் யாதவ், ரிஷப் பான்ட் ஆகியோருக்கு, அணியில் அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கு முன்னதாகவே கருத்து தெரிவித்திருந்தார். 

டிராவிட்டின் பதவிக்காலம் நீட்டிப்புகுறித்து கருத்து தெரிவித்த பிசிசிஐ தலைவர் (பொறுப்பு) சி.கே கன்னா, "கடந்த இரண்டு வருடங்களில், இளம் வீரர்களைச் சரியான கலவையில் அணிக்கு வழங்கியதில் அவரின் பங்களிப்பு மிக அதிகம். மேலும், அவர் இன்னும் அதிகத் திறமையான இளம் வீரர்களை அடையாளம் கண்டு, கொண்டுவருவார் " என்றார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை, அடுத்த ஆண்டு நியூஸிலாந்தில் நடைபெற உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!