வெளியிடப்பட்ட நேரம்: 22:20 (01/07/2017)

கடைசி தொடர்பு:22:20 (01/07/2017)

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி குறித்து சந்தேகம் எழுப்பும் மத்திய அமைச்சர்!

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியக் கிரிக்கெட் அணி, பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது குறித்து சந்தேகம் கிளப்பியுள்ளார் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்தவாலே.

ராம்தாஸ் அத்தவாலே

மினி உலகக் கோப்பை என்றழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இடையே இங்கிலாந்தில்  நடைபெற்றது. லீக் போட்டிகளில் பாகிஸ்தானை எளிதாக வீழ்த்திய இந்திய அணிதான், இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்று கோப்பையைத் தொடர்ந்து இரண்டாவது முறையாகக் கைப்பற்றும் என்று பலராலும் ஆரூடம் சொல்லப்பட்டு வந்த நிலையில், பாகிஸ்தான் இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதே இந்திய அணியின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது. இந்நிலையில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்தவாலே, 'இந்திய அணி, பாகிஸ்தானுடனான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த விதம் சந்தேகத்தைக் கிளப்புகிறது. லீக் சுற்றின் போது பாகிஸ்தானை இந்தியா சுலபமாக வீழ்த்திவிட்டது. இந்தியா போன்ற வலுவான அணி எப்படி பாகிஸ்தானுடன் இறுதிப் போட்டியில் 180 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது? இந்தப் போட்டி ஃபிக்ஸ் செய்யப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்' என்று பகீர் கிளப்பியுள்ளார். இந்திய அணியிடமிருந்து இதுவரை எந்தவித பதிலும் வரவில்லை.