மகளிர் உலகக் கோப்பை: பாகிஸ்தானைப் பந்தாடிய இந்திய மகளிர் அணி

மகளிர் உலகக் கோப்பைத் தொடரில், இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வென்றது.

Indian Women's team celebrating Wicket


மகளிர் உலகக் கோப்பைப் போட்டி, இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இலங்கை, இங்கிலாந்து உள்ளிட்ட 8 அணிகள் விளையாடிவருகின்றன. நேற்று நடந்த லீக் ஆட்டத்தில், இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்தது. 
இந்தத் தொடரில், அதிரடியாக ரன்கள் குவித்துவரும் மந்தானா, இரண்டு ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய அணி ரன்கள் குவிக்கத் திணறியது. பாகிஸ்தான் அணியின் ஃபீல்டிங் அபாரமாக இருந்ததால், இந்திய அணியினரின் ரன் விகிதம் மூன்றுக்கும் குறைவாகவே இருந்தது. அதிகம் எதிர்பார்த்த கேப்டன் மிதாலி ராஜும் 8 ரன்களில் வெளியேறினார். எனினும் கடைசிகட்டத்தில், சுஷ்மா வெர்மாவின் அதிரடியான ஆட்டத்தால், இந்திய அணி 169 ரன்கள் எடுத்தது. சுஷ்மா 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி சார்பில் தொடக்க வீராங்கனையான பூனம் ரவுட், அதிகபட்சமாக 47 ரன்கள் சேர்த்தார். பாகிஸ்தான் சார்பில் நஷ்ரா அபாரமாகப் பந்துவீசி, 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியை, இந்திய அணி அபாரப் பந்துவீச்சால் சாய்த்தது. தொடக்கம் முதலே அந்த அணியின் விக்கெட்டுகள் மளமளவெனச்  சரிந்தன. அந்த அணி, 26 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கேப்டன் மிர், அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்தார். தொடக்க வீராங்கனை நஹிதா கான், 23 ரன்கள் சேர்த்தார். இவர்கள் இருவரையும் தவிர்த்து, மற்ற அனைவரும் ஒற்றை ரன்களில் ஆட்டமிழந்தனர். அதில், நான்கு டக் அவுட்டும் அடக்கம். இந்திய அணியின் அபாரப் பந்துவீச்சால் 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்தியா சார்பில் சுழற்பந்து வீச்சாளரான பிஷித், 10 ஓவர்கள் வீசி, வெறும் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, 5  விக்கெட்டுகளைச் சாய்த்தார். ஆட்டநாயகியாக அவரே தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய மகளிர் அணி,  மூன்றிலும் வெற்றிபெற்று நல்ல நிலையில் உள்ளது. நான்காவது போட்டியில், வரும் புதன்கிழமை இந்தியா-இலங்கை சந்திக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!