வெளியிடப்பட்ட நேரம்: 20:04 (03/07/2017)

கடைசி தொடர்பு:21:38 (03/07/2017)

`கோட்டை எல்லாம் அழிங்க, மறுபடியும் குத்துச்சண்டை போடுவோம்!' - ' குத்துச்சண்டை வீரர் மேனி பேக்கியோ ரகளை ஸ்டேட்மென்ட்!

குத்துச்சண்டை

`இதுவரையிலான உலகக் குத்துச்சண்டை வீரர்களில் ஆகச்சிறந்த வீரர்' இப்படித்தான் மேனி பேக்கியோவைக் குறிப்பிடுகிறது விக்கிபீடியா. உலகின் ஆகச்சிறந்த வீரர், நேற்று தோல்வியைத் தழுவியுள்ளார். 38 வயதாகும் மேனி, `ஃபெதர்வெயிட்', `ஃப்ளை வெயிட்' `வெல்டர் வெயிட்' எனப் பல்வேறு பிரிவுகளிலும் உலகக் குத்துச்சண்டைப் போட்டியில் வென்று சாதனை படைத்துள்ளார். எட்டு பிரிவுகளின் கீழும் உலகக் குத்துச்சண்டைப் பட்டத்தை வென்ற ஒரே நபர் மேனி பேக்கியோ மட்டுமே. ஆனால், நேற்று ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடந்த போட்டியில் தன்னைவிட ஒன்பது வயது குறைவான பள்ளி ஆசிரியர் ஜெப் ஹார்ன் என்பவரிடம் தோற்றுப்போனார். 

மொத்தம் 12 ரவுண்டுகள் நடைபெற்ற இந்தப் போட்டியில், இருவருமே கடுமையாக மோதிக்கொண்டனர். `வெல்டர் வெயிட்' பிரிவின் கீழ் நடந்த இந்தப் போட்டியில் பேக்கியோதான் வெல்வார் என அனைவருமே எதிர்பார்த்தனர். போட்டி தொடங்கியதுமுதலே பேக்கியோவின் கையே ஓங்கியிருந்தது. குத்துச்சண்டைக்குத் தோதான உயரம்கொண்ட மேனியின் ஸ்டைலே குத்துக்களிலிருந்து அநாயசமாகத் தப்பிப்பதுதான். குள்ளநரியின் தந்திரத்தோடு விலகி, வாய்ப்பு கிடைக்கும்போது எதிராளியின் முகத்தில் `டைனமைட் பன்ச்' ஒன்றை வெடிக்கவைத்து வீழ்த்துவது இவரின் ஸ்டைல். 

ஆனால், அது நேற்று எப்படி முயன்றும் 7-வது ரவுண்டு வரை சரிவரவில்லை. மாறாக, மேனி ஜெப் ஹார்னிடம் நான்கு பன்ச்கள் வாங்கியதுதான் மிச்சம். போட்டி நடந்த பிரிஸ்பேர்ன் ஜெப் ஹார்னின் சொந்த ஊர் என்பதால், கூடியிருந்த 50 ஆயிரம் ரசிகர்களில் 90 சதவிகிதம் பேர் அவருக்கு ஆதரவாக வாழ்த்தொலி எழுப்பிக்கொண்டிருந்தனர். இப்படியான சூழல் மேனி பேக்கியோவுக்கு ஒன்றும் பெரியதல்லதான். இதற்கு முன் குத்துச்சண்டையில் வெறிமிகுந்த ரசிகர்கள்கொண்ட அமெரிக்காவில் கடுமையான சூழ்நிலைகளிலும் சிந்தை கலங்காது வென்றவர்தான் அவர். பேக்கியோ எதிர்பார்த்த வாய்ப்பு ஏழாவது ரவுண்டில் அவருக்குக் கிட்டியது. ஒரு ஸ்ட்ரெயிட் ஜேப் குத்து விட முயற்சித்துக்கொண்டிருந்த மேனியின் கைகளின் தாக்குதல் தொலைவில் சிக்கிய ஹார்னின் வலது புருவத்தைக் கிழித்தது.

ஹார்னின் பயிற்சியாளர்களில் ஒருவரும் தந்தையுமான ஜெப் சீனியர், உண்மையில் பயந்தேபோய்விட்டார். 7-வது ரவுண்டு முடிந்து ஸ்டூலில் வந்து அமர்ந்த ஹார்னின் கோலத்தைப் பார்த்தார் அவரின் தந்தை. அருவியில் கொட்டுவதுபோல் ரத்தம் கொட்டியது. ஆட்டத்தைப் பாதியில் நிறுத்தி விலகிவிடுவது என்ற யோசனையை அவர் ஹார்னிடம் தெரிவித்துள்ளார். அதை மறுத்துவிட்டு மீண்டும் களத்துக்குப் போனார் ஹார்ன். மறுபடியும்  பேக்கியோ கைகளுக்குள் சிக்கினார் ஹார்ன். அடுத்தடுத்து இரண்டு ரவுண்டுகளிலும் ரத்தக்களறியாகித்தான் வந்து ஸ்டூலில் அமர்ந்தார். இந்தப் போட்டி விதிகளில் முக்கியமான ஒன்று, சண்டைபோடும் வீரர்களைத் தவிர வேறு யாரும் போட்டியை நிறுத்த முடியாது. ஒரு வீரர் நிறுத்தச் சொல்லிக் கேட்டால் அவர் தோற்றதாக அர்த்தம். 9-வது ரவுண்டு முடிந்து வந்த அமர்ந்தவரிடம் சீனியர் ஜெப் `ஆட்டத்தை முடித்துக்கொள்ளலாம். நிரந்தமாகக் கண்கள் ஊனமாகிவிடும்' என்று எச்சரித்துள்ளார். ஒப்புக்கொள்ளாமல் அடுத்த ரவுண்டுகளில் கலந்துகொள்ள எழுந்து சென்றதாலேயே இன்று பட்டம் வென்றுள்ளார் ஹார்ன். `என்னிடம் போட்டி நிறுத்தும் அதிகாரம் இருந்தால், அப்போதே நிறுத்தியிருப்பேன்' என்று போட்டி முடிந்த பிறகு ஹார்னின் தந்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். 

12 ரவுண்டுகள் வரை நீண்ட இந்தப் போட்டியின் முடிவுகள், புள்ளிகளின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஹார்ன் வென்றார் என்கிற அறிவிப்பு, கடும் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது. உள்ளூரின் நெருக்குதல் காரணமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கலாம் என்று பிலிப்பைன்ஸ் பத்திரிகைகள் கடுமையாகச் சாடின. முன்னாள் ஹெவிவெயிட் சாம்பியனான லூயிஸும்  `ஹார்ன் நன்றாக விளையாடினார் என்றாலும், அது வெற்றிபெறும் வகையில் இல்லை' என ட்விட் செய்துள்ளார். ஈ.எஸ்.பி.என்  ஸ்போர்ட்ஸ் சேனலும் தன் டிவிட்டரில் `93 குத்துக்களை வீசியுள்ளார். ஆனால், பேக்கியோவோ 182 குத்துக்களைச் செலுத்தியுள்ளார்' என்ற டேட்டாவை வெளியிட்டு, சந்தேகம் கிளப்பியுள்ளது. இந்தக் குத்துச்சண்டைப் போட்டி முடிவை ஏற்றுக்கொள்ளாத போட்டியாளர்கள், மறுபோட்டி கேட்கும் வாய்ப்பு உள்ளதால் தான் மறுபோட்டி கேட்க உள்ளதாக மேனி பேக்கியோ அறிவித்துள்ளார்.  இதனிடையே, அவர் முழுநேர அரசியலுக்குத் திரும்ப வேண்டும் என்று அவரின் கட்சித் தொண்டர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.  ஆம், அவர் இப்போது பிலிப்பைன்ஸ் ஆளும் கட்சி எம்.பி வேறு. அதிலும் பிலிப்பைன்ஸின் டெரர் அதிபர்  ரோட்ரிக்கோ டுராத்தேவின் செல்லப்பிள்ளையும்கூட. எது எப்படியோ அடுத்த போட்டி இன்னும் ரத்தக்களறியாக இருக்கும் என்பது மட்டும் இப்போதைக்கு உறுதி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்