டீ கடை டு இந்திய கிரிக்கெட் அணி! அசத்திய மகளிர் கிரிக்கெட் வீரர் ஏக்தா பிஷித்

கடந்த ஞாயிறு அன்று, இந்தியா- பாகிஸ்தான் இடையே நடந்த மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில், இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியது, ஏக்தா பிஷித் என்ற சுழல் மங்கை. 10 ஓவர் வீசி, வெறும் 18 ரன்கள் விட்டுக்கொடுத்து, 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். 


ஏக்தா பிஷித், உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரின் தந்தை குண்டன் சிங் பிஷித், ராணுவத்தில் பணியாற்றியவர். ராணுவத்திலிருந்து 1988-ல் ஓய்வுபெற்ற அவர், அதன் பிறகு, பென்ஷன் தொகையில் வாழ்ந்துவந்தார். ஆனால், ஏக்தா பிஷித்தின் கிரிக்கெட் ஆசைக்கு இன்னும் அதிகமாக செலவு ஆவதால், கூடுதல் வருமானத்துக்கு டீ கடை ஒன்றைத் தொடங்கினார். குண்டன் சிங்கிற்கு ஏக்தா பிஷித்துடன் சேர்த்து மொத்தம் மூன்று குழந்தைகள்.

ஏக்தா பிஷித் குறித்து  தந்தை குண்டன் சிங் பிஷித் கூறுகையில், "ஆறு வயதிலிருந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார். அவரது விருப்பத்துக்கு மாறாக எதுவும் செய்வதில்லை. பிஷித், 2011-ல் இந்திய அணியில் இடம்பிடிக்கும்போது, 'ஒருநாள் இந்தியாவைப் பெருமையடையச் செய்வார்' என்று நம்பினோம்" என்றார்.

தாயார் தாரா கூறுகையில், "என் கணவரது ஓய்வுத்தொகை ஆரம்பத்தில் போதாததால், டீ கடை ஒன்றை ஆரம்பித்தோம். ஏக்தா, இந்திய அணிக்குத் தேர்வான பின்னர், போதுமான வருமானம் வந்தது. அவருக்கும் ஓய்வுத்தொகை கூடியது. அதனால், டீ கடையை நிறுத்திவிட்டோம்" என்றார்.

ஏக்தா பிஷித், 2006-ம் ஆண்டு உத்தரகாண்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர், 2007 முதல் 2010-ம் ஆண்டு வரை உத்தரப்பிரதேச அணியிலும் விளையாடியுள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!