மகளிர் உலகக் கோப்பை: இன்று இந்தியா - இலங்கை அணிகள் மோதல்

மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் இன்று, இந்திய மகளிர் அணி தனது நான்காவது லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது.

indian women's team celebrating


 எட்டு அணிகள் மோதும் மகளிர் உலகக் கோப்பைத் தொடர், இங்கிலாந்து நாட்டில் நடந்துவருகிறது. இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில், இந்திய மகளிர் அணி இலங்கை மகளிர் அணியை எதிர்கொள்கிறது. 

இந்திய அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று, புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.  இந்திய மகளிர் அணியைப் பொறுத்த வரை பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சம பலத்துடன் விளையாடி வருகிறது. முதல் போட்டியில், பலம் வாய்ந்த இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய அணி, அடுத்த இரு போட்டியிலும் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணியை வென்று ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தது. இந்திய அணியில், தொடக்க வீராங்கனைகள் நல்ல ஃபார்மில் விளையாடி வருகிறார்கள். பூனம் ராவூட் நிதானமாகவும் மந்தானா அதிரடியாகவும் ஆடி ரன்கள் சேர்க்கிறார்கள். கடந்த போட்டியில், சுஷ்மா வர்மா இறுதிகட்டத்தில் அதிரடியாக ஆடி ரன்களைச் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களைத் தவிர்த்து கேப்டன் மித்தாலி ராஜ், தீப்தி சர்மா என பேட்டிங் பட்டாளமே  இருக்கிறது. 

பந்துவீச்சிலும் இந்திய அணி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஜொலித்த ஏக்தா பிஷித், அனுபவ வேகபந்து வீச்சாளர் ஜூலான் கோஸ்வாமி என சிறப்பாகவே உள்ளது. 

மறுபக்கத்தில், இலங்கை மகளிர் அணி விளையாடிய மூன்று போட்டியிலும் தோல்வியை  தழுவி, வெற்றிபெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதுவரை அது எதிர்த்து ஆடிய மூன்று அணிகளுமே, தர வரிசையில் முதல் மூன்று இடத்தில் இருக்கும் அணிகளுடன் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று தர வரிசையில் நான்காம் இடத்திலிருக்கும் இந்திய அணியுடன் மோத உள்ளது.   

இன்று வெற்றிபெற்றால் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகும் என்பதால், இந்திய அணி முழு உத்வேகத்துடன் விளையாடி வெற்றியைத் தொடரும். இலங்கை அணியைப் பொறுத்தவரை, இந்தத் தொடரில் நீடிக்க இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

இந்தப் போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் மூன்று மணிக்கு தொடங்குகிறது.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!