வெளியிடப்பட்ட நேரம்: 10:19 (05/07/2017)

கடைசி தொடர்பு:10:19 (05/07/2017)

விம்பிள்டன் டென்னிஸ்: ஃபெடரர் புதிய சாதனை

உலகின் பழைமையான கிராண்ட் ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னில் போட்டிகள், பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடந்து வருகிறது. இந்தத் தொடரின் இரண்டாம் நாளான நேற்று, ஃபெடரர் புதிய சாதனையைப் படைத்தார்.


ஃபெடரர், டென்னிஸ் உலகின் ஜாம்பவான் என்றால் மிகையல்ல. அதிலும் புல்தரை என்றால் புலியாக மாறிவிடுவார். அதனால்தான், புல்தரையில் நடக்கும் விம்பிள்டன் தொடரில், ஃபெடரர் தொடர் வெற்றிகளைக் குவித்துவருகிறார். நேற்று நடந்த முதல் சுற்றுப் போட்டியில், டோல்கோபாலோவை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில், காயம் காரணமாக பாதியில் வெளியேறினார் டோல்கோபோலோவ். இதனால், இந்தப் போட்டியில் ஃபெடரர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது, அவருக்கு விம்பிள்டன் தொடரில் கிடைத்த 85-வது வெற்றி.

இந்த வெற்றியின் மூலமாக விம்பிள்டன் தொடரில் அதிக வெற்றியைப் பதிவுசெய்தவர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார் ஃபெடரர். இதற்கு முன்பாக, ஜிம்மி கோன்னோர்ஸ் 84  வெற்றிகள் பெற்று முதலிடத்தில் இருந்தார். அவரை பின்னுக்குத் தள்ளி, தற்போது  முதலிடம் பெற்றுள்ளார். 

அவரை தவிர்த்து, ஜோகோவிக், டொமினிக் தீம், டிமிட்ரோவ் போன்ற முன்னணி வீரர்களும் முதல் சுற்றில் வெற்றிபெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர். இன்று, இரட்டையர் ஆட்டங்கள் தொடங்க உள்ளது. இதில், இந்திய வீரர்கள், சரண்-ராஜா இணை மற்றும் ஜீவன் நெடுஞ்செழியன் ஆகியோர் விளையாட உள்ளனர். பெண்கள் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சானியா மிர்சா,  ஃப்லிப்கென்ஸுடன் இணைந்து தனது முதல் போட்டியில் இன்று விளையாட உள்ளார்.