பத்திரிகையாளர் சந்திப்பில் கண்ணீர் சிந்திய வீனஸ் வில்லியம்ஸ்!

டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் ஏற்படுத்திய கார் விபத்துகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளால் நிலைகுலைந்த வீனஸ், கண்ணீர்விட்டு அழுதார்.

வீனஸ் வில்லியம்ஸ்

அமெரிக்காவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் ஏற்படுத்திய விபத்தால், கடும் சிக்கலில் உள்ளார். கடந்த மாதம் 9-ம் தேதி காரில் சென்றுகொண்டிருந்தபோது, மற்றொரு காரின்மீது மோதியுள்ளார். இந்த விபத்தில், அந்த காரில் பயணித்த 74 வயது முதியவர் ஒருவர் படுகாயமடைந்து, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த முதியவர் இறந்துவிட்டார். அதனால், பிரச்னை தீவிரமடைந்தது.

இந்நிலையில், நேற்று வீனஸ் வில்லியம்ஸ் பங்கேற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  வீனஸ்ஸிடம், கார் விபத்துகுறித்து  பத்திரிகையாளர்கள் கேட்டதும்  நிலைகுலைந்தார். சிறிது நேரம் எதுவும் பேச முடியாமல் இருந்த வீனஸ், உணர்ச்சிவசப்பட்டவராய் காணப்பட்டார். பத்திரிகையாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பவே, ஒரு கட்டத்தில் கண்ணீர்விட்டு அழுதுகொண்டே நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். சிறிது நேரம் கழித்துத் திரும்பிய வீனஸ், மீண்டும் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

இந்த விபத்து விவகாரத்தில், போலீஸார் வீனஸ் மீது குற்றம் சுமத்தினாலும், அந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்து வருகிறார். இந்தச் சம்பவம், தன்னை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார் வீனஸ் வில்லியம்ஸ்.
 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!