வெளியிடப்பட்ட நேரம்: 13:46 (05/07/2017)

கடைசி தொடர்பு:13:46 (05/07/2017)

'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு...' வெஸ்ட் இண்டீஸ் அணியில் கெய்ல்!

வரும் 9-ம் தேதி, இந்தியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் விளையாடப்போகும் 20 ஓவர் கிரிக்கெட் அணியில், அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் இடம்பிடித்துள்ளார். 

கிறிஸ் கெய்ல்

அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்குத் தொடர்ந்து விளையாடிவந்தார். மோசமான ஃபார்ம், உடலில் ஏற்பட்ட காயங்கள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக, இடையில் சிறிது காலம் அவர் விளையாடாமல் இருந்தார். பின்னர், ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று கலக்கினார். இதனால், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இன்னும் தான் மிக ஆபத்தான பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்தார். என்னதான் 20 ஓவர் போட்டிகளில் கெய்ல் விளையாடினாலும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதைத் தவிர்த்துவந்தார். இதையடுத்து, மேற்கிந்தியத் தீவுகளின் 20 ஓவர் கிரிக்கெட் அணியில் மட்டும் விளையாடிவந்தார். கடைசியாக அவர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர் உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்தார். அதன் பின்னர், இப்போதுதான் சொந்த நாட்டின் அணியில் விளையாட உள்ளார். 

இதுகுறித்து மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தேர்வாளர்கள் தரப்பு, 'கிறிஸ் கெய்லை நாங்கள் மறுபடியும் வரவேற்கிறோம். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியைப் பொறுத்தவரை, அவர்தான் இருப்பதிலேயே திறன்மிக்க பேட்ஸ்மேன். ஒரு மிகச் சிறந்த இந்திய அணிக்கு எதிராக அவர் விளையாட உள்ளது மகிழ்ச்சி' என்று தெரிவித்துள்ளது.