வெளியிடப்பட்ட நேரம்: 22:36 (05/07/2017)

கடைசி தொடர்பு:10:31 (06/07/2017)

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி நான்காவது வெற்றியை ருசித்தது இந்தியா!

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், இங்கிலாந்தில் நடந்துவருகிறது. இதில், இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் ஆகிய மூன்று அணிகளைத் தோற்கடித்து ஹாட்ரிக் வெற்றியை ருசித்துள்ளது இந்திய அணி. 

Indian Women Cricket team


டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. இந்தத் தொடரில் நல்ல தொடக்கம் தந்து வந்த பூனம் மற்றும் ஸ்மிரிதி மந்தனா இன்று ஏமாற்றம் அளித்தனர். பூனம் 16, ஸ்மிரிதி 8 ரன்களில் வெளியேறினர். பின்னர், கேப்டன் மித்தாலி ராஜ் மற்றும் தீப்தி ஷர்மா சரிவில் இருந்து அணியை மீட்டனர். இருவரும் சற்று நிலைத்து நின்று ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

தீப்தி ஷர்மா 78, மித்தாலி ராஜ் 53 ரன்கள் எடுத்தனர். இதனால், 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி சீரான வேகத்தில் விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் திலனி மண்டோரா 67 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் 50 ஓவர்கள் முடிவில், அந்த அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 216 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. 


இந்திய அணியின் கோஸ்வாமி மற்றும் பூனம் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். உலகக்கோப்பையில், இந்திய அணிக்கு கிடைக்கும் நான்காவது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது. தீப்தி ஷர்மா ஆட்ட நாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.