வெளியிடப்பட்ட நேரம்: 07:53 (06/07/2017)

கடைசி தொடர்பு:09:46 (06/07/2017)

இன்று ஆசிய தடகளப் போட்டிகள்: தாய் மண்ணில் சாதிக்கக் களமிறங்குகிறது இந்திய அணி!

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், இன்று ஒடிசா மாநிலத்தில் தொடங்க உள்ளது.

தடகளம்

ஒடிசா மாநிலத்தில், 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று கோலாகலமாகத் தொடங்குகின்றன. ஒடிசாவின் கலிங்கா மைதானத்தில் நடைபெறவிருக்கும் இந்தப் போட்டிகளில், முதல் மூன்று இடங்களைப் பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்குகிறது இந்திய அணி. 45 நாடுகள் பங்குபெறவிருக்கும் இந்தப் போட்டி, முதலில் ராஞ்சியில் நடைபெறவிருப்பதாக இருந்து பின்னர் பொருளாதார சூழல்கள் காரணமாக ஒடிசாவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடக்கும் மூன்றாவது ஆசிய தடகளப் போட்டியில், 45 நாடுகளைச் சேர்ந்த 800 வீரர்கள் பங்கேற்கின்றனர். உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் விரைவில் தொடங்கவிருப்பதால், சர்வதேச அளவில் பல முன்னணி வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை. இந்தியாவிலிருந்து 46 வீராங்கனைகள் 49 வீரர்கள் என மொத்தம் 95 பேர் பங்கேற்கின்றனர். ஆசியப் போட்டிகளில், தொடர்ந்து சீனா மற்றும் ஜப்பான் அணிகள் முன்னிலை வகித்துவந்துள்ளன. மூன்றாவது பலம் மிக்க அணியாகத் திகழும் இந்தியா, இந்தப் போட்டியில் அதிகப் பதக்கங்களைக் குவிக்கும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கியுள்ளதாக, இந்திய தடகளக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.