வெளியிடப்பட்ட நேரம்: 14:03 (06/07/2017)

கடைசி தொடர்பு:14:03 (06/07/2017)

கோப்பையைக் கைப்பற்றுமா இந்தியா? மே.இ. தீவுகளுடன் இன்று இறுதி மோதல்

மே.இ தீவுகள் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி இன்று கிங்ஸ்டவுன், சபினா பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.


இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட, இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளை  இந்தியாவும், நான்காவது போட்டியை மே.இ தீவுகள் அணியும் வென்றது. 

மே.இ தீவுகளுக்கு எதிராகத் தொடரை இந்தியா நல்ல நிலையில் தொடங்கினாலும் கடைசி ஆட்டத்தில் அந்த அணி நிர்ணயித்த 189 இலக்கைகூட எட்ட முடியாமல் தோற்றுப்போனது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த வீரர்கள், தோனியின் நிதான ஆட்டம் என்று அதிகமான விமர்சனங்கள் இந்திய அணிமீது வைக்கப்பட்டது. அதிகபட்சமாக கோலியின் கேப்டன்ஷிப் மீதும் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இவை அனைத்தையும் கடந்து இன்று இந்திய அணி வெற்றியுடன் தொடரை முடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள். 

இந்திய அணியைப் பொறுத்த வரையில் பேட்டிங் மிக சிறப்பாகவே இருக்கிறது. தொடக்க ஆட்டக்காரரான தவான் கடந்த இரு ஆட்டங்களில் சரியாக ஆடவில்லை. அவர் தனது இயல்பான ஆட்டத்துக்குத் திரும்ப வேண்டியது அவசியம். கேப்டன் கோலியும்  நிலைத்து நின்று ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். கடந்த போட்டியில் மூன்று மாற்றங்களைச் செய்த கோலி, இந்த முறை மீண்டும் பழைய அணிக்கே திரும்புவார் என்றே தெரிகிறது. எனினும், ஆடுகளத்தின் தன்மையை வைத்துதான் விளையாடும் வீரர்களின் தேர்வு இருக்கும் என்று தெரிகிறது. 

கடைசி போட்டியில் அறிமுக வீரராக ரிஷப் பாண்ட்க்கு வாய்ப்பு கிடைப்பது கடினம்தான். அவருக்கு டி20 தொடரில்தான் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. 
மேற்கிந்தய தீவுகள் அணியைப் பொறுத்தவரை சமீபகாலமாக அந்த அணி சரியாகச் செயல்படவில்லை. ஆனாலும், எந்த அணிக்கும் அதிர்ச்சி அளிக்கும் திறன் அந்த அணிக்கு உண்டு. அதற்குக் கடந்த போட்டியே சிறந்த உதாரணம். கொஞ்சம் நிலைத்து நின்றுவிட்டால் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்துவிடுவார்கள். 

இந்திய அணி வெற்றியுடன் தொடரைக் கைப்பற்ற முயலும் அதே வேளையில் மே.இ தீவுகள் அணி சொந்த மண்ணில் தொடரை சமன் செய்யவும் கடுமையாகப் போராடும் என்பதால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும். இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30-க்கு தொடங்குகிறது.