வெளியிடப்பட்ட நேரம்: 08:21 (07/07/2017)

கடைசி தொடர்பு:08:30 (07/07/2017)

தோனினு சொன்னாலே... சிக்சர் தெறிக்கும், விசில் பறக்கும்! #HBDDhoni

கிரிக்கெட் உலகின் பெருமைக்கு இன்று பிறந்த நாள். 36 வயதில் அசத்திக்கொண்டிருக்கும் அதிரடிக்காரனுக்கு முதலில் வாழ்த்துகளைச் சொல்லிவிடுவோம். இந்தியாவில்  கிரிக்கெட் மதத்துக்கு முன்னதாக மற்ற மதங்கள் தோற்றுத்தான்போகும். ஒரு தென்னை மட்டையும் ஒரு டென்னிஸ் பந்தும் ஒரு சுவரும் ஓரிரு செங்கல் துண்டுகளும் ஒரு சிலருக்கு கிரிக்கெட் விளையாடப் போதுமானவை. இன்னும் சிலருக்கு பரீட்சை அட்டை பேட்டாகும்; பரீட்சை பேப்பர் பந்தாகும்; வகுப்பு அறை மைதானமாகும். வயது வித்தியாசமின்றி வருமான பேதமின்றி கிரிக்கெட் விளையாடுவதை இந்தியாவில் மட்டும்தான் பார்க்க முடியம். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்தியாவை இணைக்கும் ஒரே ஒரு பொதுவான விஷயம் கிரிக்கெட் மட்டும்தான். நான் இங்கே போலி தேசப்பற்றைப் பற்றிச் சொல்லவில்லை. கிரிக்கெட் விளையாட்டு என்பது, மாநிலங்கள் கடந்து, மொழி கடந்து இந்தியர்களின் ரத்தத்தில் ஊற ஆரம்பித்திருக்கிறது. மைதானம் இல்லாத சூழ்நிலையில்கூட புக் கிரிக்கெட், கணினியில் கிரிக்கெட், கைபேசியில் கிரிக்கெட் என அனுதினமும் கிரிக்கெட் பித்துபிடித்து அலையும் மனிதர்களை இங்கே பார்க்க முடியும்.

கிரிக்கெட் விளையாடுபவர்களிடம் கேட்டுப்பாருங்கள், அவர்களின் அல்டிமேட் குறிக்கோள் என்பது இந்திய அணியில் இடம்பிடிப்பதாகத்தான் இருக்கும். இந்திய அணியில் இடம்பிடித்த வீரர்களிடம் பேச்சுக்கொடுத்துப்பாருங்கள், அவர்களின் ஆசையும் கனவும் அவர்கள் இடம்பெற்றிருக்கும் அணி உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்.

1990-களின் மத்தியில் ராஞ்சியில் கிரிக்கெட் விளையாடித் திரிந்த சிறுவன் ஒருவனுக்கும் அப்படித்தான் ஆசை வந்தது. அவனுக்கு சச்சின் என்றால் கொள்ளை ப்ரியம். சச்சினை நேரில் பார்க்க வேண்டும் என்பது அவனின் பெருங்கனவு. அந்தச் சிறுவன் வாலிப வயதை எட்டிய பிறகு சச்சினைப் பார்த்தார். சச்சினுக்கு எதிர் அணியில் ஆடினார்; பிறகு சச்சினோடு  இணைந்து அதிரடி காட்டினார். ஒருநாள் போட்டிகளில் சச்சின் 200 ரன்களை அடிக்கும்போது எதிரே இருந்தார். அதன் பிறகு சச்சினின் 22 வருடக் கனவை நிறைவேற்றினார்.  சச்சின்  டெண்டுல்கருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய அணியின் ரசிகர்களின் ஆசைகளையும் அதிரடியாக நிறைவேற்றியவர்.  அவர் டிக்கெட் கலெக்டரிலிருந்து இந்திய கிரிக்கெட்டுக்கு `தல'  ஆன மகேந்திர சிங் தோனியைப் பற்றி கொஞ்சம் விரிவாகவே பேசுவோம். 

தோனி

ஒரு பேட்ஸ்மேனாகவும் சரி,  விக்கெட் கீப்பராகவும் சரி,  கேப்டனாகவும் சரி தோனி சாதித்த அளவுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் சாதித்தவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஐசிசி தரவரிசையில் பல மாதங்கள் `நம்பர் 1' பேட்ஸ்மேனாகவும், பல ஆண்டுகள் தொடர்ந்து டாப் 10 இடத்துக்குள்ளும்  இருந்தவர் தோனி. உலகிலேயே அதிக ஸ்டம்பிங் செய்தவர் இவர்தான். ஒரு கேப்டனாக தோனி தொட்ட உயரங்கள் மிக அதிகம். `கிரிக்கெட் உலகில்  நல்ல பேட்ஸ்மேன்கள்'  எனப் பலரைச் சொல்லலாம்; நல்ல பெளலர்கள்  எனச் சிலரைச் சுட்டிக்காட்டலாம்; நல்ல ஆல்ரவுண்டர் என சிலரைக்  கொண்டாடலாம். ஆனால் நல்ல கேப்டன்  என உச்சிமுகர, தோனியைவிட பொருத்தமானவரை அடையாளம்  காட்டுவது மிகவும் சிக்கலான பணி. தோனியின் சாதனைகள் மகத்தானவை. பத்தாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு டிக்கெட் கலெக்டராக வேலைபார்த்த ஒரு நபர், அடுத்த பத்து ஆண்டுகளில் எப்படி உலகம் போற்றும் அசாதாரணன் ஆனார் என்பதை இன்னமும் கிரிக்கெட்  உலகம் ஆச்சர்யத்தோடுத்தான் பார்க்கிறது.

சச்சின் டெண்டுல்கர் அவுட்டானதும் டிவி-யை ஆஃப் செய்துவிட்டு எழுந்தவர்களை, ஒருகட்டத்தில் ஆடாமல் அசராமல் கடைசி ஓவரின் கடைசிப் பந்து வரை அமரவைத்தவர் தோனி. தன் அணிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்துக்கும் கிரிக்கெட் போட்டிகளின்போது நம்பிக்கை தந்தவர் அவர். தோனி நினைத்திருந்தால் அவர் பேட்டிங்கில் பல சாதனைகளைச் செய்திருக்க முடியும்.

ஆரம்பகட்டங்களில் மூன்றாவது மற்றும் நான்காவது நிலைகளில் அவர் களமிறங்கிய போட்டிகளின் புள்ளிவிவரங்களைக் கணக்கெடுத்துப் பார்த்தால் நிச்சயம் பிரமித்துப்போவீர்கள். ஆனால், தனிப்பட்ட சாதனைகளை எப்போதுமே தோனி கணக்கில் எடுத்துக்கொண்டதில்லை. அவருக்கு வெற்றி என்பது முக்கியம். 2005-ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் எடுத்த 148 ரன்களும், இலங்கைக்கு எதிராக எடுத்த 183 ரன்களும் வரலாற்றில் பதிந்தவை. 

தோனி

சிறிய வயதில் கிரிக்கெட் அகாடமிகளில் சேரும் அளவுக்கு எல்லாமே தோனிக்கு வசதியில்லை. அதனாலேயே  இந்திய அணிக்குள் புகுந்த ஆரம்பகட்டங்களில் அவருக்கு  அழகான கவர் டிரைவோ, அட்டகாசமான ஸ்ட்ரெயிட் டிரைவோ, ஃபுல் ஷாட்டோ, ஸ்கூப் ஷாட்டோ  பெர்ஃபெக்ட்டாக வராது. சிறு வயதிலிருந்தே அவர் பழகியதெல்லாம் பந்து வந்தால் தோணுகிற இடத்தில் சரியாக அடிக்க வேண்டும் என்பதே. பேட்டிங்கை ரசித்துச் செய்யக்கூடிய ஆள் கிடையாது; மேட்ச்சை ஜெயிக்க, பேட்டிங்கில் என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்வார்.

அவரது வித்தியாசமான பேட்டிங் ஸ்டெயில்தான் இந்தியாவை பலதடவை காப்பாற்றியிருக்கிறது. ஹெல்மெட்டைக் கழட்டி, கிளவுஸைக் கழட்டித்  திரும்பவும் மாட்டிய பிறகு அவர் அடித்த சிக்ஸர்களுக்குக்  கிடைத்த முத்தங்கள் எண்ணற்றவை. எனக்கு ஒரு பேட்ஸ்மேனாக அவரைப் பிடித்ததைவிட அவரின் கேப்டன்சி மிகவும் பிடிக்கும். ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே தன்னை நிலைநிறுத்திக்கொள்ளாமல் அடுத்தடுத்த கட்டங்களுக்கு அவர் முன்னேறிய விதம் `வாவ்'.

இந்திய கிரிக்கெட் அணி மிகவும் சிக்கலான சூழ்நிலையில் இருந்த காலகட்டத்தில்தான் தோனி கேப்டன்சி பதவியை ஏற்றார். அவர் தலைமையில் இந்தியா விளையாடிய முதல் போட்டியிலேயே மேட்ச் சூப்பர் ஓவருக்குச் சென்றது. சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் அணியில் உமர் அக்மல், யாசர் அராபத் என இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களும் விக்கெட்டைத் தவறவிட்டனர். பதற்றத்தில் அஃப்ரிடியும் தவறவிட்டார். இந்திய அணியில் ஸ்ரீசாந்த், அகர்கர் என விக்கெட்டைத்  தகர்க்கும் பெளலர்கள் இருந்தும்கூட சேவாக்கிடமும் உத்தப்பாவிடமும் பந்தைக் கொடுத்தார் தோனி. அவர்கள் சரியாக விக்கெட்டைச் சாய்த்தனர். பவுல்அவுட் போன்ற சூழ்நிலைகளில் சுழற்பந்தில் எளிதில் விக்கெட் கிடைக்கும் என்பதையும், சுழற்பந்தை எளிதாக நல்ல லைனில் வீசலாம் என்பதை உணர்ந்தே தோனி அப்படியொரு முடிவை எடுத்திருக்கக்கூடும்.

அவரது சமயோசித்த புத்தியும் வித்தியாசமான கேப்டன்சியும் ரசிகர்களைக் கவர்ந்தன. 2007-ம் ஆண்டு உலகக்கோப்பை ஆட்டத்தில்  கடைசி ஓவரை ஜோகீந்தர் ஷர்மாவிடம் கொடுத்தபோது  ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். `உள்ளூர் போட்டிகளில் பல முறை உன் பந்துவீச்சைக்  கவனித்திருக்கிறேன். அங்கே மிகச் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறாய். ஆனால், அங்கே  உன் ஆட்டத்தைப் பார்க்க ஆள் இல்லை. இது உன் களம், உனக்கான நேரம். நம்பிக்கையோடு வீசு; கிரிக்கெட் உன்னை  நிச்சயம் கைவிடாது'  இதைத்தான் அன்று ஜோகீந்தரிடம் சொன்னார் தோனி. அந்த ஓவரில் ஸ்ரீசாந்த்தைச் சரியான இடத்தில் ஃபீல்டிங்கில் நிறுத்தியதும் ஆச்சர்யமானது. அதன் பிறகு நடந்தது வரலாறு. 

தோனி

இந்தியா உலககோப்பைக்குச் செல்லும்  முன், ஒரே ஒரு சர்வதேச டி20 போட்டியில்தான் ஆடியிருந்தது. ஆனால், டி20  உலகக்கோப்பை தோனியின் கைகளில் பெருமிதமாகத் தவழ்ந்தது . அதன் பிறகு தோனியின் கரியர் ஏறுமுகம்தான். ஒரு நாள் ஃபார்மெட்டுக்கு இந்திய அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்ற பிறகு முக்கியமான பல முடிவுகளை எடுத்தார் தோனி. இந்திய அணியில் சரியான பினிஷர் இல்லாததை உணர்ந்து ஆறாம் நிலையிலும் ஏழாம் நிலையிலும் தொடர்ந்து களமிறங்கத் தொடங்கினார். தோனி தலைமையில் இந்தியா தொடர்ந்து ஆறு தொடர்களை வென்ற வரலாற்று நிகழ்வு 2008 - 2009-ம் ஆண்டு சீஸனில் நடந்தது. உள்ளூர் மட்டுமல்ல இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம் ஆகிய மண்ணிலும் தொடரை வென்று, சாதனை புரிந்தார் தோனி. தென் ஆப்பிரிக்காவில் மட்டும்தான் தோனி தலைமையில் இந்திய அணி ஒரு நாள் தொடரை வெல்லவே இல்லை. 

2008 - 2011-ம் ஆண்டு காலகட்டம் இந்திய கிரிக்கெட்டுக்குப் பொற்காலம். கோலி, ஜடேஜா, ரோகித் என அடுத்த தலைமுறை வீரர்களுக்கு தொடர் வாய்ப்புகள் தந்து அவர்களைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நுவான் குலசேகரா பந்தில் தோனி அடித்த சிக்ஸரை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கும். 2011-ம் ஆண்டுக்குப் பிறகு அடுத்த தலைமுறை வீரர்களை வார்த்தெடுத்ததில் தோனியின் பங்கு அபாரமானது. ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற பிறகு, இந்திய அணிக்கு சோதனை காலம் வந்த சமயங்களில் சிறப்பான பல ஆட்டங்களை வெளிப்படுத்தியிருக்கிறார் தோனி. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டமொன்றில் 29/5  எனத் தடுமாறிய அணியை, அவர் கெளரவமான ஸ்கோருக்கு அழைத்துச் சென்ற ஆட்டம் மறக்கவே முடியாதது. 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இந்திய ரசிகர்களுக்கு சர்ப்பரைஸ் கிஃப்ட்டாக அமைந்தது. கேப்டனாகப் பதவியேற்ற ஆறு ஆண்டுகளில், மூன்று ஐசிசி கோப்பை, ஆசிய கோப்பை, அயல் மண்ணில் தொடர் வெற்றிகள், சிபி சீரீஸ், மூன்று ஃபார்மெட்டிலும் தரவரிசையில் `நம்பர் 1'  இடம் என அத்தனையும் சாதித்தார் தோனி. 

டெஸ்ட் ஃபார்மெட்டிலும் தோனி தலைமையில்தான் பல சாதனைகளைச் செய்திருக்கிறது இந்திய அணி. அவர் முதன்முதலில் தென் ஆப்பிரிக்கவுக்கு எதிரான டெஸ்ட் ஒன்றில்தான் கேப்டன் பதவியேற்றார். 2008-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் வந்தபோது இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோனி கேப்டன் பதவியேற்றார். அந்த இரண்டிலும் இந்தியா வென்றது. தோனி கேப்டனாகப் பதவியேற்று விளையாடிய முதல் 11 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஒன்றில்கூட தோற்கவே இல்லை. தோனி தலைமையில்தான் இந்தியா, நியூசிலாந்தில் டெஸ்ட் தொடரை வென்றது. தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை சமன் செய்தது. ஆஸ்திரேலியா இங்கே வந்தபோது 4-0 என வாஷ்அவுட் செய்தது. 

தோனி

இந்தியாவுக்கு அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்ததும் சரி, அதிக வெற்றிகளைப் பெற்றுத்தந்ததும் சரி தோனிதான் நம்பர் 1. டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் தோனி சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார். 2007-ம் ஆண்டு லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியாவை தோல்வியிலிருந்து காப்பாற்றிய அபாரமான இன்னிங்ஸ் (76 ரன்கள்) சிறப்பானது. 2008-ம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரில் நான்காவது டெஸ்ட் போட்டியில் கங்குலி ஓய்வுபெற்றபோது அவருக்கு தோனி செலுத்திய மரியாதை கங்குலி ரசிகர்களை நெகிழ்த்தியது. அந்தப் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் தோனி அரை சதம் அடித்து போட்டியின் வெற்றிக்குக் காரணமாக இருந்தார். அதே தொடரில் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரை சதம் எடுத்து மேன் ஆஃப் தி மேட்ச் விருது ஜெயித்தார். சென்னை டெஸ்டில் அவர் அடித்த 224 ரன்கள் அசத்தலான சாதனை. 

நான்கு, ஐந்து பேர்கொண்ட ஒரு குழுவுக்குத் தலைவராகப் பணியாற்றி, வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வதே ஒரு சராசரி மனிதனுக்கு சிரமமான விஷயம்தான். இந்தியா போன்ற கிரிக்கெட் வெறி ஊறிய நாட்டுக்கு, அரசியலும் வணிகமும் விளையாடும் பிசிசிஐ அமைப்பில் இருக்கும் அணியை வழிநடத்துவது என்பது மிகப்பெரிய சவால். ஒரு பேட்ஸ்மேன் தன்னைப் பற்றியும் தன் ஃபார்ம் குறித்தும் யோசிப்பதற்கும் கவலைப்படுவதற்குமே அதிக நேரம் தேவைப்படும். ஆனால், ஒரு கேப்டனுக்கு அணி குறித்தும், அணி நிர்வாகம் குறித்தும், திறமையான வீரர்களை கண்டெடுத்தல் குறித்தும், எதிரணியின் பலம் பலவீனங்கள், தன்னுடைய ஃபார்ம் என எல்லா விஷயங்களிலும் கவனம் செலுத்தவேண்டிய அவசியம் இருக்கும். 

தோனி

தோனி பொதுவாக யாரிடமும் அதிகம் பேச மாட்டார். ஆனால், எந்த வீரரை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார். 2007-ம் ஆண்டு டி20  உலகக்கோப்பை, 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை, 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று தொடர்களிலும் விளையாடிய ஒரே வீரர் தோனி மட்டும்தான். மூன்று தொடர்களில் வெவ்வேறு பாணி ஆட்டத்தைக் கடைப்பிடிக்கக்கூடிய வீரர்களை வைத்து கோப்பையை ஜெயித்திருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும் பலமுறை இறுதிப்போட்டிக்கு  அழைத்துச் சென்றிருக்கிறார். இரண்டு முறை சிஎஸ்கே சாம்பியன் பட்டத்தையும் வென்றது. வெவ்வேறு அணிகள் வெவ்வேறு சூழ்நிலை என்றாலும்கூட களத்தில் யாரிடம் எந்த வேலையை வாங்க வேண்டும் என்ற தெளிவு இருப்பதால் தோனி சக்சஸ்ஃபுல் கேப்டனாக மிளிர்கிறார்.

ஒருநாள் மற்றும் டி20 ஃபார்மெட்களில் அவரின் ஃபீல்டிங் வியூகங்கள் அருமையாக இருக்கும். தோனி, ஆட்டத்தில் கூர்மையாகக் கவனம் செலுத்துபவர். எதிர் அணியினர் செய்யும் சிறு தவறையும்  தன் அணிக்குச் சாதகமாக்கிக்கொள்வார். பாண்டிங் மற்றும் ஆலன் பார்டருக்கு அடுத்தபடியாக கேப்டனாக 100 ஒருநாள் போட்டிகளுக்கு மேல் வென்ற ஒரே வீரர் தோனி மட்டுமே. ஒருநாள் போட்டிகளில் 200 சிக்ஸர்கள் விளாசிய ஒரே இந்தியர் என்ற பெருமையும் தோனியைச் சேரும். ஒருநாள் போட்டிகளில் அசத்தினாலும், டெஸ்ட் ஃபார்மெட்டில்  அவர் எடுத்த டிஃபன்சிவ் முடிவுகள் இந்தியாவுக்கு அயல் மண்ணில் பெரும்பின்னடைவை ஏற்படுத்தியதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். 

அணியில் இருப்பிடத்தைத் தக்கவைக்க ஏதாவதொரு ரோலை சிறப்பாகச் செய்துவிடுவார். பேட்டிங்கில் சோடைபோனால் கேப்டன்சி, கேப்டன்சியில் சோடைபோனால் பினிஷர், பினிஷிங்கில் தளர்ந்த சமயங்களில் விக்கெட் கீப்பிங் என வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறார். அதனால்தான் தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கும் மேலாக அணியில் நீடிக்க முடிகிறது. அவர் கேப்டன்சியிலிருந்து விலகிய பிறகும்கூட தோனியின் இடத்தை நிரப்பக்கூடியவர்களை இன்னமும் பிசிசிஐ-யால் கண்டுபிடிக்க முடியவில்லை. கேப்டன்சியைத் துறந்த பிறகு ஒன்பது ஒருநாள் இன்னிங்ஸ்களில் மூன்று அரை சதம் மற்றும் ஒரு சதம் அடித்திருக்கிறார் தோனி. 

தோனி

தோனியின் விவேகமான ஸ்டம்பிங் மற்றும் ரன் அவுட்கள் அபாரமானவை. உலகிலேயே விக்கெட்டுகளை இடையே மிக வேகமாக ஓடக்கூடியவர்களில் முக்கியமானவர் டி வில்லியர்ஸ். அவரை பல முறை ஸ்டம்பிங் மற்றும் ரன் அவுட் செய்திருக்கிறார் தோனி. கடந்த டி20 உலகக்கோப்பையில் வங்கதேச அணிக்கு எதிராக அவரின் கடைசி நேர வியூகம் அட்டகாசமாக இருந்தது. சேஸிங்கில் மட்டுமல்ல, இந்திய அணியின் ஸ்கோரை எதிர் அணி சேஸிங் செய்யும்போதும் சரி, ரசிகர்கள் தோனியை நம்பினார்கள். இவர் தலைமையின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய சமயங்களில், பல முறை குறைந்த இலக்கை டிஃபெண்ட் செய்திருக்கிறது. தோனி பற்றிப் பேசும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றிப் பேசாமல் இருக்கவே முடியாது. உலகம் முழுவதும் பல டி20 லீக்குகள் நடக்கின்றன. அதில் மிகச்சிறந்த டி20 பிரான்சீஸ் சென்னை சூப்பர் கிங்ஸ்தான். அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டனும் தோனி மட்டும்தான். அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி மீண்டும் தலைமையேற்றால் கச்சேரி களைகட்டும்.

தோனியின் கால்கள் இன்னமும் வலுவாகவே இருக்கின்றன. விக்கெட்டுகளுக்கு இடையே அசத்தலாகவே ஓடுகிறார். நாளுக்கு நாள் விக்கெட் கீப்பிங் பணியில் அட்டகாசம் செய்கிறார். தோனியின் ஓய்வுக்கு நாள் குறிக்கப் பார்க்கிறார்கள் பலர். ஆனால், அதற்கான அவசியம் இன்னும் வரவில்லை. சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கக்கூடியவர் தோனி. அது ஃபீல்டுக்கு உள்ளேயாக இருந்தாலும் சரி, வெளியேவாக இருந்தாலும் சரி... அவர் இன்னும் பல போட்டிகளில் இந்தியாவுக்குப் பெருமைத் தேடித்தருவார் என நம்புவோம்.


டிரெண்டிங் @ விகடன்