வெளியிடப்பட்ட நேரம்: 10:29 (07/07/2017)

கடைசி தொடர்பு:13:57 (08/07/2017)

சதத்தில் சச்சின் சாதனையை முறியடித்த கோலி!

ஒருநாள் போட்டியில் சேஸ் செய்யும்போது அடிக்கப்பட்ட சதங்களில் சச்சினை முந்தி கோலி புதிய சாதனை படைத்தார்.


இந்திய அணியின் கேப்டன் கோலியின் கேப்டன்ஷிப் மீது பல விமர்சனங்கள் மற்றும் மாற்று கருத்து இருந்தாலும், அவரது பேட்டிங் திறமை மீது இதுவரை விமர்சனங்கள் வந்தது இல்லை. அதனால்தான், சச்சின் சாதனைகளை முறியடிக்கும் திறன் கோலியிடம் இருப்பதாகக் கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

நேற்று சபீனா பார்க் மைதானத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அபாரமாக ஆடிய கோலி, தனது 28 வது சதத்தைப் பூர்த்தி செய்தார். ஒருநாள் போட்டியில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இலங்கையின் ஜெயசூர்யாவோடு சமன் செய்துள்ளார் கோலி. ஜெயசூர்யா 433 இன்னிங்ஸ் விளையாடி உள்ளார். ஆனால், கோலிக்குத் தனது 28 வது சதத்தை எட்டுவதற்கு 181 இன்னிங்ஸ் மட்டுமே தேவைப்பட்டது. 

கோலி, சேஸிங்கில் கில்லாடி. முதலில் பேட் செய்வதைவிட இரண்டாவது பேட் செய்வதை அதிகம் விரும்புவார். அவரது பேட்டிங் சராசரியும் சேஸிங்கில்தான் மிக அதிகம். தனது மொத்த 28 சதங்களில் 18 சதங்கள் சேஸிங்கில் அடிக்கப்பட்டவைதான். சேசிங்கில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்திலிருந்து சச்சினைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்தார் கோலி. சச்சின் சேஸிங்கில் 232 இன்னிங்ஸில் விளையாடி 17 சதங்கள் அடித்துள்ளார். கோலி சேஸிங்கில் 102 இன்னிங்ஸ் மட்டுமே விளையாடி சச்சினின் சாதனையை முறியடித்தார்.

இந்தத் தொடரில் 336  ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருது வென்ற ரஹானே, இந்திய வீரர் ஒருவர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையைப் படைத்தார். இதற்கு முன்னதாக 2002-ம் ஆண்டு நடந்த தொடரில், 312 ரன்கள் எடுத்த லக்ஷ்மன் முதல் இடத்தில் இருந்துவந்தார்.