ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள்; பதக்க வேட்டையில் இந்தியா!

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் இரண்டாம் நாளிலும் இந்திய வீரர்கள் அபராமாக விளையாடி பதக்கங்களை குவித்தனர்.


22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் இந்தமுறை இந்தியாவின் புவனேஷ்வரில் நேற்று முன்தினம் தொடங்கியது. 45 நாடுகளைச் சார்ந்த  655 வீரர்கள் இந்தத் தடகளப் போட்டியில் பங்கேற்று உள்ளனர். இந்தியா சார்பில் 94 வீரர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். 

இரண்டாம் நாளான நேற்று இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சிறப்பாக விளையாடினர். ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீரர் முகமது அனாஸ், தங்கப் பதக்கம் வென்றார். இதே பிரிவில் மற்றொரு இந்திய வீரரான ஆரோக்கிய ராஜீவ், வெள்ளிப் பதக்கம் வென்றார். இதேபோன்று 1,500 மீட்டர் ஓட்டப் பந்தைய போட்டியில் இந்தியாவின் அஜய் குமார் தங்கம் வென்றார்.

பெண்கள் பிரிவிலும் ஓட்டபந்தயத்தில், 400 மற்றும்  1,500 மீட்டர் பிரிவுகளில் முறையே இந்தியாவின் நிர்மலா ஷாரான் மற்றும் சித்ரா ஆகியோர் தங்கம் வென்றனர். 100, 400, 5,000 மீட்டர் ஒட்டப் பந்தையங்களில் இந்திய வீராங்கனைகள் வெண்கல பதக்கங்களை வென்றனர். முதல் நாளில் தமிழகத்தைச் சேர்ந்த லக்ஷ்மணன் 5,000  மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நேற்று மட்டும் இந்திய  போட்டியாளர்கள், நான்கு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கல பதக்கங்களை வென்றனர்.  பட்டியலில் இந்தியா, ஆறு தங்கம் மூன்று வெள்ளி, மற்றும் ஆறு வெண்கல பதக்கங்கள் என மொத்தமாக 15 பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. நான்கு தங்கம் உட்பட 10  பதக்கங்களுடம் சீனா இரண்டாம் இடத்தில் உள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!