வெளியிடப்பட்ட நேரம்: 12:12 (08/07/2017)

கடைசி தொடர்பு:12:12 (08/07/2017)

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: மகத்தான சாதனையைப் படைப்பாரா மித்தாலி ராஜ்?

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று, அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்யும் முனைப்புடன் தென்னாப்பிரிக்க அணியுடன் மோதுகிறது இந்திய அணி. 


எட்டு அணிகள் மோதும் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்துவருகிறது. இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில், இந்திய மகளிர் அணி, தென்னாப்பிரிக்க மகளிர் அணியை எதிர்கொள்கிறது. இதுவரை விளையாடிய நான்கு போட்டியிலும் வெற்றியை ருசித்த இந்திய அணி, அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்யும் முனைப்பில் இன்று, தென்னாபிரிக்காவுடன் மோதுகிறது. இந்திய அணியைப் பொறுத்தவரை, பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என்று இரண்டிலும் சம பலத்துடன் உள்ளது. பேட்டிங்கைப் பொறுத்தவரை தொடக்கத்தில் அதிரடியாக ஆடிய மந்தானா, கடந்த இரு போட்டியில் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. கேப்டன் மித்தாலி ராஜ், வழக்கம்போல தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். பந்துவீச்சிலும் இந்திய அணி சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. குறிப்பாக, சுழற்பந்துவீச்சில் இந்திய அணி மிகவும் கட்டுக்கோப்பாகச் செயல்படுகிறது. 

இன்றைய போட்டியில், இந்திய கேப்டன் மித்தாலி ராஜ், 34 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற மகத்தான சாதனையைப் படைப்பார். ஏற்கெனவே, இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஜூலான் கோஸ்வாமி அதிக விக்கெட் வீழ்த்திய பெருமைக்குச் சொந்தக்காரர் ஆவார். 

தென்னாப்பிரிக்க அணியைப் பொறுத்த மட்டில் பலமான அணியாக இருந்தாலும், அவ்வப்போது சொதப்பிவிடும். மேற்கிந்தியத் தீவுகள் அணியை 48 ரன்களில் சுருட்டிய தென்னாப்பிரிக்க அணி, இங்கிலாந்துக்கு எதிராக 373   ரன்கள் விட்டுக் கொடுத்து சொதப்பியது. அந்த அணிக்கும் இன்றைய போட்டி மிக முக்கியமானதாகும். நான்கில் இரண்டு வெற்றிபெற்றுள்ள அந்த அணி, அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க இந்தப் போட்டியில் வெற்றிபேறவேண்டியது அவசியமாகிறது. அதனால், அந்த அணி முழு வேகத்துடன் விளையாடும்.

 இந்தப் போட்டி, இந்திய நேரப்படி இன்று மாலை 3 மணிக்குத் தொடங்குகிறது.