வெளியிடப்பட்ட நேரம்: 19:07 (08/07/2017)

கடைசி தொடர்பு:19:07 (08/07/2017)

மீண்டும் ஜிம்பாப்வேயிடம் வீழ்ந்த இலங்கை... தொடரை வெல்லப்போவது யார்?

இன்று இலங்கையுடன் நடந்த 4-வது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது ஜிம்பாப்வே.

Zimbabwe Beats Srilanka in 4-th Match

இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள ஜிம்பாப்வே அணி, 5 ஒருநாள் மற்றும் 1 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அதிர்ச்சியளித்தது. இதையடுத்து நடந்த 2-வது மற்றும் 3-வது போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றது. ஹம்பன்டோட்டாவில் இன்று நடைபெற்ற 4-வது போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்துடன் களமிறங்கியது ஜிம்பாப்வே.

இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டிக்வெல்லா 116 ரன்களும், குனதிலக்கா 87 ரன்களும் குவித்தனர். இதைத் தொடர்ந்து மழை குறுக்கிட்டதால், ஜிம்பாப்வே அணிக்கு 31 ஓவர்களில் 219 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய ஜிம்பாப்வே, 29.2 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ரன்கள் குவித்து வெற்றி பெற்றுள்ளது. ஜிம்பாப்வே தரப்பில் கிரெய்க் எர்வின் அதிரடியாக விளையாடி 69 ரன்கள் குவித்தார். இந்த வெற்றியின் மூலம் 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது ஜிம்பாப்வே. கோப்பையை யார் வெல்வார்? என்பதை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி 10-ம் தேதி நடைபெறுகிறது.